Related Posts with Thumbnails

திங்கள், 22 நவம்பர், 2010

நிஜங்களின் வலி


துயர் பாடும்
ஒரு கவிதையின்
இறுதிவரியாக
நீ என்னுள் வீற்றிருக்கின்றாய்

சோகங்களை மட்டுமே
அள்ளிச் சொரிந்து விட்டு
கடந்து செல்லும்
ஒரு சூறாவளியின்
உருவத்தில் ஒட்டியிருக்கிறது
உனது அருவமான உருவம்.

நிஜங்களின் வலிபற்றி
நான் ஒன்றும் சொல்லி
புரிய வைக்கத்தேவை இல்லை

ஒரு பல்லியைப் போல
சுவரில் ஒட்டிக்கொண்டு
வாழும் வாழ்க்கையில்
நமதான ஜீவிதம் கடந்துவிட்டது

மெல்ல அசைபோடும்
அந்த நாட்களை
எனது எல்லாக் காலையும்
மெல்லிதாய் நினைக்கும்

வாடகைக்காய் வாழ்வது
வாடிக்கையாகி விட்ட
இந்தப் பொழுதுகள்
சுமைகளாலும் சில நேரங்களில்
சுவாரசியம் அடைகிறது.

மீள் நிரப்பபடாத
ஒரு இடைவேளிதனிலே
சமாந்திரமாக நகரும்
இந்த வாழ்வின் மிச்சப் பகுதியை
சில இரவுகளும்
சில கண்ணீர்த்துளிகளும்
நிரப்பி விடுகின்றன.

நாச்சியாதீவு பர்வீன்.
2010 . 10 .20 .

Read more...

செவ்வாய், 19 அக்டோபர், 2010

பிரிவு.................?

கருவறையை

பிரிந்து வந்தோம்

இந்த மண்ணுலக வாழ்வுக்காய்

மறு உலக வாழ்வுக்காய்

இந்த மண்ணுலகையும்

பிரிந்திடுவோம்

பிரிவுகள் என்றும்

நிரந்தரமில்லை

கூடிப் பிரிவதில்

குதூகலம் இல்லைதான்

இருந்தும் பிரிவால்

வாடிப் போவதில்

வளம் என்ன உண்டு.

கல்விக்காய் வீட்டைப் பிரிகிறான்

மாணவன்.

கடவுளுக்காக குடும்பத்தைப் பிரிகிறான்

பக்தன்.

நட்புக்காக எல்லா வற்றையும் பிரிகிறான்

நண்பன்.

பிரிவு என்பது சங்கடம் தான்

சந்தோசமான சங்கடம்.

Read more...

புதன், 11 ஆகஸ்ட், 2010

நோன்பு ஏன்............?

நோன்பு என்ற சொல்லுக்கு விரதம் என்றும் சொல்லுவார்கள், ஒவ்வொரு மதத்தினரும் வெவ்வேறு காரணங்களுக்காக நோன்பு நோற்பது வாடிக்கையான ஒரு விடயமாகும், அந்த வகையில் உலக முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றிணைந்து ரமலான் (அரபு மாதம்) மாதத்தில் விருப்பத்தோடும், ஆர்வத்தோடும் நோன்பு நோற்பதன் தாத்பரியம் என்ன? நோன்பினால் ஏற்படும் தனிமனித, சமூக நன்மைகள் யாவை? இப்படி பல கேள்விகளுக்கு நமக்கான பல நூறு பதில்களை அள்ளித்தருகிறது இஸ்லாம் மார்க்கம் அதில் மிகவும் எளிமையான சில காரணங்கள் தான் ஏழை எளியவர்களின் பசியை பணக்காரர்களும் உணர்த்து கொள்ளுதல் இதன் மூலம் பணம் படைத்தவர்கள் ஏழைகளுக்கு உத்தவுவத்தட்கு ஏதுவாக அமைகிறது,அத்தோடு ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவரும் இந்த ஒரு மாத காலத்திற்கு நோன்பு நோற்கின்ற போது சமூக ஏற்றத்தாழ்வு அங்கே இல்லாமல் போகின்றது, இந்த நோன்பின் போது மனிதன் தனது புலன்களை அடக்கியாளும் பயிற்ச்சியை பெறுகிறான், வீண் பேச்சுக்கள், உண்ணல், உறங்கள்,போன்ற வற்றிளிருந்து தவிர்ந்து நடக்க இந்த நோன்பு காலம் மிகுந்த
பயிட்சியை அளிக்கின்றது அந்த வகையில் நோன்பின் பலன்கள் மிக மிக அதிகமாகவுள்ளது . இந்த பயன்களை முஸ்லிம்கள் உணர்ந்து நோன்பு நோற்பது சாலப்பொருத்தமாகும்.

Read more...

வியாழன், 29 ஜூலை, 2010

வலி

இதயத்தின் வலியை
கண்கள் மொழிபெயர்த்தன
கான்னத்தின் வழியே
கண்ணீர் கோடுகள்.

Read more...

வியாழன், 1 ஜூலை, 2010

மெழுகுதிரிக் கனவுகள்

எத்தனை சேமித்தாலும்
நிறைவேறாமல் போகிறது
இப்போதைய கனவுகள்

Read more...

செவ்வாய், 29 ஜூன், 2010

மனசு முழுக்க காதல்.

காதல் வந்திரிச்சி
எனக்கு காதல் வந்திருச்சி
ஊர் சுற்றி திரிந்த
எனக்கு ........
உருப்படி இல்லாத
எனக்கு...
யார் கண்பட்டதோ..
காதல் வந்திருச்சி

நிலவை நான்
ரசிக்கவில்லை..
நீல வானம்
விருப்பமில்லை..
கோல மயிலின் இறகை
என்றும்..புத்தகத்தினுள்
வைக்கவில்லை
காதல் என்ற பெயரில்
எங்கும் நான்...
கால் கடுக்க அலைந்ததில்லை.
இருந்தும்..
காதல் வந்திரிச்சி
எனக்கு காதல் வந்திருச்சி


யாருவிட்ட சாபமோ..
எனக்குள் காதல்
வேருவிட்டு போச்சி

நீல வானம்
அதில் நீந்து மேகம்
காதல் சுமந்த காற்று
காலைநேர பனித்துளி
இலையருகே பூக்கள்
இத்தியாதி...இத்தியாதி....

எல்லாம் ரசிக்கிறேன்
இப்போது எல்லாம் ரசிக்கின்றேன்

ஓடும் நதியிலே
என் காதல் நீந்துது
ஓலமிடும் கடலிலும்
என்காதல் வாழுது..
காரணம் ...
காதல் வந்திரிச்சி
எனக்கு காதல் வந்திருச்சி


நாச்சியாதீவு பர்வீன், இலங்கை.

Read more...

வெள்ளி, 18 ஜூன், 2010

நதியின் பாடல்.

நதியின் பாடல்
ஒரு மெல்லிய ராகமாய்
ஒலிக்கும்..
இடைவிடாக் கனவுகளில்
இடறி விலும் வாழ்க்கை
நாறிய நிமிசங்களைப் பார்த்து
காறித்துப்பும் நினைவுகள்
அடைகாத்த அருவெறுப்புக்களை
அசைபோட்டு அழும் மனசு
தீப் பிடித்து எரியும்
காலத்தின் முதுகில்
இரண்டு வெண்ணிறக் கோடுகள்
ஒன்று பிறப்பாய்
மற்றையது இறப்பாய்
எல்லா சோகங்களையும்
சுமந்து கொண்டு
மவுனப் பாடல்களை
இயற்கை இசைக்கிறது..
எஞ்சியிருப்பது
நதியின் பாடல் மட்டுமே..
அதுவும் விதி மாறும் வரைக்கும்தான்.

நச்சியாதீவு பர்வீன்
இலங்கை.

Read more...

ஞாயிறு, 6 ஜூன், 2010

காத்திருப்பு...

வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களில் நாம் காத்திருக்க வேண்டியுள்ளது,காத்திருத்தல் ஒரு அவஸ்தையான அனுபவம், காத்திருத்தலில் சுகம் இருக்கிறதென்று சிலர் சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன், என்னளவில் காத்திருத்தல்
மிகுந்த அவஸ்தைக் குறிய விடயமாகும். அப்பப்பாஎவ்வளவுதான் காத்திருப்பது மனிதன் பிறந்ததிலிருந்து காத்திருத்தல் ஆரம்பமாகின்றது, எனக்கென்றால் அதிகமாக காத்திருக்க நேர்ந்தது பஸ் தரிப்பிடத்தில் தான், நான்பாடசாலை செல்ல ஆரம்பித்ததில்
இருந்து வேலைக்கு செல்லும் இன்று மட்டுக்கும் பஸ்சுக்காக
காத்திருந்து அவஸ்தை பட்ட, படும் நிமிடங்களை சொல்லி மாளாது, நான் எப்போதும் காதலிக்காகவோ, நண்பர்களுக்காகவோ காத்திருந்து அவஸ்தைபட்டது கிடையாது ஆனால் மணிக்கணக்காய் பஸ் தரிப்பிடத்தில்
கால் கடுக்க நின்று என் தலை விதியை பல தடவை
நொந்து கொண்டுள்ளேன், யாருக்காவது காத்திருத்தல் பற்றிய
சுவையான அனுபவம் இருந்தால் சொல்லுங்களேன்.

Read more...

ஞாயிறு, 23 மே, 2010

மழை,மழை, மழை...

இன்றைய பத்திரிகைகளின் தலைப்புச் செய்தி மழை யாகும்
கடுமையான மழையினால் மேல்மாகாணம், மலையகம்
என்பன பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது, அதிலும் மேல்மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா போன்ற மாவட்டங்கள் வெள்ளக் காடாக மாறிப்போயிருந்தது
இந்த நிலைமையில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் உதவிகள் கிடைத்த போதும்
அது போதுமான தாக இல்லை என்பது தான் உண்மை.

கம்பஹா மாவட்டத்தின் பல பிரதேசங்களில் மக்கள் வீடுவாசல்களை துறந்து, போக்கிடம் இல்லாமல் தவிக்கின்ற
நிலைமை உருவாகி உள்ளது, இந்த நிலையில் பாதிக்கப் பட்ட மக்கள் உடல்,உள ரீதியாக பாதிக்கப் பட்டுள்ளதோடு, அவர்களின் அடுத்த கட்ட நகர்வுகள் பற்றிய எந்த வித முனைப்புகளும் இல்லாமல் இருக்கின்ற அவலம் இன்னும்
தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது,

தொடர்ந்தும் மழை பெய்யலாம் என்ற வானிலை ஆராய்ச்சி
நிலையத்தின் ஆருடம் இடம்பெயர்ந்தவர்களின் மீள் குடியேற்றத்தில் தாமதத்தை உண்டு பண்ணலாம்...

அரசாங்கத்தின் கையில்தான் .........இனி இவர்களின் வாழ்வு..

Read more...

வியாழன், 29 ஏப்ரல், 2010

தூக்கம் ...


உடைத்தால்
கட்டமுடியாத கூடு
படுக்கையிலே
ஒளிந்திருக்கும்..
தனி உலகம்
கனவின் கருப்பை
இருட்டுக்குள் தெரியும்
வெளிச்சம்..

துக்கம் மறைய

தூக்கம் அவசியம்..

Read more...

"அங்காடித்தெரு" அழகான கவிதை.

தமிழ் சினிமாவின் மிகக்கேவலமான அடையாளங்களையும் தாண்டி அவ்வப்போது சில நல்ல திரைப்படங்கள் வெளிவருவது கொஞ்சம் ஆறுதல் அளிக்கின்றது
காமக் கூத்தின் கடிவாளமாகி, சினிமாவின் தரம் மிகக் கொச்சையாகி விட்ட
இந்தக் காலங்களில் வெளிவந்திருக்கும் ஒரு அற்புதமான சித்திரம் தான் "அங்காடித்தெரு" அன்றாடம் நம்மைச்சுற்றி நடக்கின்ற எதார்த்தம் பொதிந்த அழகிய கவிதையாக மிளிர்கிறது இந்தப்படம்.

தயாரிப்பாளரின் இரண்டாவது படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு
ஒரு அழகியல் தன்மை கதை அமைப்பிலும் அதன் நகர்விலும் படத்தின்
வெற்றிக்கு ஊன்றுகோலாக அமையும் சாதகமான சங்கதிகள் அதிகம்.

எல்லாமே புது முகங்கள் ஆனால் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும்
மிகத்தேர்ந்த நடிகர்களையும் விஞ்சும் தெளிந்த அப்பட்டமான நடிப்பை
ஒவ்வொரு காட்சியிலும் பாராட்டாமல் இருக்க முடியாது.
வறுமைதான் இந்த நூற்றாண்டின் சாபக்கேடு, வறுமையினால் திறமை
இருந்தும் கற்க முடியாதவர்கள் வாழ்க்கைப் பாரத்தை குறைக்க பட்டணம்
வந்து அடிமாடாக, அடிமைபோல வேலைசெய்வதும் வேலைத்தளத்தில் அவர்கள்
அனுபவிக்கின்ற கொடுமைகளையும் தோலுரித்து காட்டுகிறது "அங்காடித்தெரு".

முதலாளித்துவத்தின் சாக்கடைத்தனமான போக்கு எல்லாக்காலத்திலும்
ஒன்றுதான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டுகிறது.அடிமட்ட
தொழிலார்களின் நலன்களில் அக்கறை காட்டாக முதலாளி வர்க்கத்தின் முகமூடியை அழகாக கிழித்துக்காட்டும் "அங்காடித்தெரு". ஒவ்வொருவரும்
கட்டாயம் பார்க்க வேண்டிய பேசும் சித்திரமாகும்.

மேற்கத்திய பாலியல் கலாச்சாரத்தை பின்பற்ற துடிக்கும் கமல் போன்றவர்கள்
"பருத்தி வீரன்", "அங்காடித்தெரு" போன்ற நல்ல சினமாக்களை பார்க்க வேண்டும்
இரானிய, சினிமாவின் எதார்த்தத்தை அப்படியே காட்சிப் படுத்திருக்கும் இந்தப் படம்
தமிழ் சினிமாவின் வளர்சிப்பாதையை மெல்ல கட்டமிட்டு காட்டியுள்ளது.

Read more...

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

மீளெழும் கனவுகள்..

அதிகாலைப் பட்சிகளின்
அலறல் கடந்து..
சூரியகக் குளியல் நடத்தும்
நிர்வாண பொழுது
சுவாசம் புணரப்பட்டு
முகம் கழுவாத மரங்கள்
சோம்பல் முறித்து..
எழும் ஒருநாளின்
தழும்புகளை தடவிப்பார்க்கும்
நிழல்கள்..
தார்ப்பாதைகளின்
தாழ்வாரங்கள் தோறும்..
கனவுக் கொடிகள் படர்ந்து
வேகமாய் ஓடும் வாழ்க்கை
தன்னை கடந்து செல்லும்
ஒரு மிக நெருங்கிய நட்பையோ..
அல்லது..
ஒரு உறவையோ..
அவதானித்து
குசலம் விசாரிக்க முடிவதில்லை
இந்த மீளெழும் கனவுகளில்.

Read more...

மகளுக்கொரு தாலாட்டு...!

காலைப் பொழுதின்
பனித்துளியாக
கண்மணி வந்தாய்
கருவழியாக....


பிஞ்சுக் காலால்
எட்டி உதைந்து
காலக்கதவின்
பூட்டைததிறந்தாய்...

மெல்ல மலரும்
ரோஜா இதழாய்..
கண்கள் திறந்தாய்
பூவைப் போல

நீ கண்கள் திறந்து
வருடம் ஒன்றாம்..
மெய்தான் மரியம்
உனக்கு வயது ஒன்று

உம்மா உம்மா ....
உன் இனிக்கும் மொழிகள்
வாப்பா என்றழைக்கும்.
வசந்த வார்த்தை

என்றும் அழுக்கா..
உன் மழலை மொழியில்
வழுக்கி விழுந்து
பரவசம் அடையும்..
இன்பம் தந்தாய்
இனிய மகளே.

நஸ்மி என்ற
நறுமலர் தந்த..
பாசப் பூவே
வருடம் ஒன்றில்
காலை வைத்து..
எட்டி நடக்க
எத்தனிக்கும்
எந்தன் மகளே..
நாளும் உனக்காய்
வாழ்த்துப்பாடும்
இந்த தந்தை நெஞ்சு..

23 /05 / 2010 முதலாவது பிறந்த தினத்தை கொண்டாடும் மகள் பாத்திமா மரியத்திட்க்கு

நாச்சியாதீவு பர்வீன். இலங்கை.

Read more...

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

க.பொ.த(சா/த௦) பரீட்சையில்தமிழ் மொழிமூலத்தில் அனுராதபுரத்தில் பாத்திமா சதீகா சாதனை..

சாதனை மாணவி பாத்திமா சதீகா

கடந்த க.பொ.த(சா/த௦) பரீட்சையில் நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி பாத்திமா சதீகா 8A , B பெருபேற்றினை பெற்றுள்ளார் இதுவே இம்முறை அனுராத புர மாவட்ட தமிழ்
மொழிமூலத்தில் பெறப்பட்ட மிகச்சிறந்த பெறுபேறாகும், தவிரவும் நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்தியாலய வரலாற்றில் பெறப்பட்ட சிறந்த பெருபேறாகவும்
இது கணிக்க படுகிறது. உயர் பெறுபேற்றினை பெற்று தமது பாடசாலைக்கு
நன்மதிப்பைப் பெற்றுத்தந்த இந்த மாணவி தமிழ் மொழிமூல மேலதிக கல்விப்பணிப்பாளர் என்.எம்.மஹ்சூக், ஜே.தாஜிஉம்மா தம்பதியினரின் புதல்வியாவார்.

இதுதவிர சிறந்த பெறுபேற்றினை பெற்ற நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள்
01 மஹ்சூக் பாத்திமா சதீகா 8 A , B .
02 நசார்தீன் பாத்திமா சபீரா 6 A , 3 B
03 கமால் பாத்திமா ரிப்னா 3A , 3B , 3C
04 ஹாரீஸ் பாத்திமா பர்வீனா 3A , 1B , 5C
05 முஹமத் சஜாம் 3A , 5C

உயர்தரத்திலும் இவர்கள் நல்ல பெறுபேற்றினை பெற்று வெற்றிபெற வாழ்த்துக்கள்..

Read more...

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

மரணத்தின் வாசல்..

காலச் சக்கரம்
நினைத்தபடி ஓடும்

நாம் நினைக்காத
ஒரு பொழுதில்
திடீரென்று நின்று..
தன் வாசல் திறந்து.
விரும்பியவரை
இழுத்துக்கொள்ளும்
மரணம்..

அது ஆணாக..
பெண்ணாக.
இன்னும் குழந்தையாக
என்று..
யாராகவும் இருக்கலாம்

ஒரு பெருமூச்சி தானும்
விட அவகாசம்
கிடைக்காத தருணமது

எந்த விருப்பமும்
எந்த வெறுப்பும்
நம்மை ...
திருப்பி கொண்டு வர மாட்டா.
மரணத்தின் வாசலை கடந்த பின்.

Read more...

செவ்வாய், 23 மார்ச், 2010

அம்மா

அழுது வடிக்கும்
குழந்தைக்கு அம்மாதான்
ஆறுதல்..

அம்மா மட்டும்தான்
எல்லாக் குழந்தைகளினதும்
இதயத்திற்கு
நெருக்கமானவள்

அம்மாவைக் கண்டால்
மட்டுமே குழந்தை
சும்மா அழும்

இன்றை மட்டுக்கும்
அம்மாவின் தாலாட்டை
மிஞ்சிய பாடல் எங்குள்ளது

அம்மா
குழந்தை வாசிக்கும்
முதல் புத்தகம்

அம்மா
குழந்தை பயிலும் முதல்
பல்கலைக் கழகம்.

அம்மாவின்
அன்புக்கு முன்னால்
இந்த உலகம் ஒன்றுமில்லை.

அம்மா ஒரு
மெழுகு வர்த்தி
தன் குழந்தைக்காக
தன்னை உருக்கி
ஒளி தருபவள்

அம்மா
உன் முந்தானை
பிடித்த வண்ணம்
விரல் சூப்பிய படியே
நீ செல்லும் இடங்களுக்கு
இன்னொரு தடவை
நான் அலையும் நாள்
இனி வராதா?


Read more...

புதன், 17 மார்ச், 2010

தலைநகர தாலாட்டு...

இன்னுமொரு தேர்தல்
ஏழையின் வாழ்க்கை
ஏற்றாத தேர்தல் ..
கூரையின் மேலே
குந்திக்கொண்டு
கூப்பாடு போடும்
காக்கை போலே
வாககேனும்
சாப்பட்டிட்காய்..
அலையும் ஆட்கள்
ஓட்டுப் போட்டவர்கள்
ஓட்டை ஆனார்கள்
ஓட்டை பெற்றவனோ
ஓயர்ந்து போயிட்டான் .
காலத்தின் சோதனையை..
கடவுளிடம் சொல்லி
அழத்தான் முடியும் ....

Read more...

புதன், 3 மார்ச், 2010

தலைப்பில்லாத என் கவிதை..


உயிரின் நிழலில்
கசிந்து உருகும்
காதல் விழிகள்
எங்கு சென்றதுவோ..

வழிகள் தோறும்
காதல் கொடிகள்
விரிந்து கிடக்கும்
ஞாபக வெளியில்..

இதயம் முழுக்க
சுகந்தம் பரவும்
இனிய நாட்கள்
இனிமேல் வருமா?

கைகள் கோர்த்து
கடற்கரை மணலில்
கவிதை படித்து
நடந்த நாட்கள்..

புல்வெளி தோறும்
அமர்ந்த படியே..
திட்டம் போட்டோம்
வாழ்க்கை பற்றி...

மழையில் நனைந்து
இன்பம் நுகர்ந்தோம்.
மாலைதோறும்
சேர்ந்தே திரிந்தோம்..

பட்டுப் பூச்சி
போல நாமும்
சுற்றித்திரிந்தோம்..
சுகமாய் வாழ்ந்தோம்.

யாரின் கண்கள்
நம்மைச்சுட்டது
காதல் கொடிகள்
அறுந்து விட்டது.

ஊரின் நினைவுகள்
உரசும் போதுகளில்
காதல் மனசும்
கண்ணீர் விடும்..

சோகம் நெஞ்சை
துளைக்கும் எனினும்..
தேம்பி அழத்தான்
மனசு துடிக்கும்.

காலக் கதவை
திறந்து பார்த்தால்
கண்ணீர் ததும்பும்.
காதல் கதைகள்..
எனதை உனதை
நமதைப் போல..

Read more...

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

ஒரு கலைஞனின் கடைசி நிமிடம்..(வாசகனின் வாக்கு மூலம்)


ஸ்ரீ தர்பிச்சையப்பா, சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னாள் தான் எனக்கு பழக்கமானார் பாடசாலை காலங்களில் வானொலியிலும், டிவி யிலும் அவரை கண்டு ரசித்ததுண்டு பிற்பட்ட காலங்களில் தொழில் நிமித்தம் கொழும்பில் வசிக்க நேர்ந்தது அத்தோடு இலக்கியத்துறையுடனான தொடர்புகள் என்பன எனக்கு பலரின் அறிமுகத்தை தந்தது. அந்த வகையில் அறிமுகமாகமான ஒரு அன்புள்ளமானவர்தான் ஸ்ரீ தர் . ஸ்ரீதர் அற்புதமான கலைஞர்.
ஒலுவில் பல்கலைக்கழக மாணவர்களான எல்.வசீம் அகரம், நிந்தவூர் சிப்லி, துறையூரான் அசார்தீன்ஆகியோரின் நூல் வெளியீடு ஒன்றாக கொழும்பு தமிழ் சங்கத்தில் நடை பெற்ற போது அந்த நிகழ்வுக்கு ஸ்ரீதரும் வந்திருந்தார் நிகழ்வுகள்
முடிவடைந்ததன் பின்னர், நிறையப் பேர் அறிமுகமானார்கள் அந்த நிகழ்வுக்கு ஸ்ரீ தரும் வந்திருந்தார், நான்அருகில் சென்று நீங்கள் ஸ்ரீதர் தானே என்று கேட்டேன்.
ஒரு நட்சத்திர அந்தஸ்துள்ள ஒருவர் மிகமிக சிம்பலாக அந்த நிகழ்வுக்கு வந்திருந்தது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.
என்னை அறிமுகம் செய்து கொண்டேன். கை குலுக்கி நீதானா அது? நானும் நினைத்தேன் ஒரு பொம்புலபுள்ள என்று நகைச்சுவையாக கூறினார். எனது பெயர் பெரும்பாலும் பெண்களுக்கும் வைக்கப் படுவதால் இந்த பிரச்சினை பல தடவை எனக்கு வந்துள்ளது,

பின்னர் அன்றைய தினம் நான், ஸ்ரீதர், பாயிஸா கைஸ், வெலிகம ரிம்ஸா முஹம்மது, குமாரி மற்றும் இன்னொரு நண்பி பெயர் ஞாபகமில்லை ஒரு சாலையோர சிற்றுண்டிச்சாலையில் தேநீர் அருந்தினோம், எழுத்தாளர் பாயிஸா கைஸ் பில் ஐ செலுத்தினார், ஒரு இருபது நிமிட நேர அரட்டையின் பின் எல்லோரும் விடை பெற்றார்கள் நானும் ஸ்ரீதரும் மெதுவாக வந்து வெள்ளவத்தயில் உள்ள பூபாலசிங்கம் புத்தகசாலைக்கு முன்னால் உள்ள பஸ் ஹோல்டில் அமர்ந்து பலதும் பத்தும் பேசினோம் எனது "சிரட்டையும் மண்ணும்"
கவிதைத் தொகுதியை ஸ்ரீதருக்கு வழங்கினேன், அன்றைய தினம் இரவு பத்து மணி மட்டுக்கும் எங்களை அறியாமல் பேசிக்கொண்டே போனோம்.

அதன் பிறகு அவ்வப்போது நாங்கள் சந்தித்து கொண்டோம், எப்படியும் கிழமையில் ஒரு தடவை சந்திப்பது வழக்கம், ஸ்ரீதரின் மூலமாக நிறைய நண்பர்களை நான் அடைந்துள்ளேன், ஸ்ரீதர் மிக நல்லவன், சின்னப் பிள்ளை மாதிரி, அடுத்தவரை மதிக்கின்ற மனிதாபிமானி, சில்லை யூர் செல்வராசனுக்கு பிறகுள்ள ஒரு சகல கலா வல்லவன், என்ன தெரியாது ஸ்ரீதருக்கு? வஞ்சகம் தவிர
கடைசியாக கடந்த பதினேழாம் திகதி புதன் கிழமை அல்லது அதற்கு முதல் நாள்
இரவு ஸ்ரீதருடன் கதைத்தேன், அந்த ஞாயிற்றுக் கிழமை நடை பெற்ற வெலிகம ரிம்சாவின் நூல் வெளியீட்டு விழாவுக்கு வரமுடியாமைக்கு தனது வருத்தத்தை தெரிவித்த ஸ்ரீதர் எமது புத்தக வெளியீட்டுக்கு வருவதாக கூறினார், கடைசியில் எல்லாம் கனவாகவே முடிந்து போய விட்டது .
பகிர்ந்து கொள்ள பலவிடயங்கள் உண்டு ஸ்ரீதரைப் பற்றி .....
இன்று கலாபவனத்தில் கூட்டம் கூட்டமாக வந்து ஸ்ரீதரின் புகழ் பாடும் பெரியமனிதர்கள் ஸ்ரீதர் நோய் வாய்ப பட்டிருந்த போது கண்டு கொள்ளவில்லை என்பது அவர்களின் மனசாட்சிக்கு தெரிந்த உண்மையாகும்.
ஸ்ரீதரின் பூ(த) உடலை பார்வையிட கலாபவனத்திட்கு வந்திருந்த கவிஞர் கிண்ணியா அமீர் அலி சொன்ன கவிதை இது...

ஸ்ரீ தரா!
இன்று நீ ..
"சிரி" தரா
ஸ்ரீதரா..
இன்று உனக்காக
எல்லோரும்
அழுதரா?
நிலா வானத்தில்
நீந்திக் களித்த நாள்
நினைவுகளை ....
கலா வானத்தில்
கலந்து தந்தவனே
இன்று ...
கலாபவனத்தில்
கண்ணுறக்கம் கொண்டனையோ?
-கிண்ணியா அமீர் அலி-

கண்ணீர் கசிய வைக்கும் கவிதை வரிகள்

உன்
மதி விட்டுப் போயும்
விதி விட்டுப் போகவில்லை
கலை வாழ்வில்
விலை போகாத நண்பனே
நீ முன்னால் போ..
பின்னால் நாங்களும்..

கண்ணீருடன் நான் நாச்சியாதீவு பர்வீன்.

Read more...

சனி, 20 பிப்ரவரி, 2010

சிறு பான்மையினர் யாருக்கு வாக்களிக்க வேண்டும்..........

மீண்டும் ஒரு தேர்தல், களத்தில் புதிய முகங்கள் பல குதித்துள்ளன. பல பிரபல்யங்கள் ஆளுங்கட்சி சார்பாக தேர்தல் களத்தில் இல்லையில்லை தேர்தல் குளத்தில் வாக்கு மீன்களை அள்ளிக்கொள்வதட்கு தயாராகிவிட்டனர் சனத்ஜெயசூரிய மாத்தறை மாவட்டத்திலும், குறுந்தூர ஓட்டவீராங்கனை சுசந்திகா ஜயசிங்க கேகல்ல மாவட்டத்திலும்ஜனாதிபதியின் மகன் நாமல் ராஜ பாக்ஸஅம்பாந்தோட்ட மாவட்டத்திலும் என்று தேர்தல் திருவிழாவை கலை கட்ட வைக்கும் முகமாக ஆளும் தரப்பு முழு முனைப்புடன் செயட்படுகிறது.
ஜேவிபி இனர் இம்முறை படுதோல்வி அடைவார்கள் என்பதை களநிலவரம் சொல்லுகிறது , தமிழரசுக்கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், போன்ற கட்சிகள் தமது பெரும்பாலான ஆசனம்களை இழந்து பொய் விடும், கடந்த ஜனாதி பத்திதேர்தளைப் போல இம்முறையும் ஆளும் கூட்டணி அமோகமாக வெற்றி பெரும் தேர்தல் நியாமாக நடந்தாலும், அல்லது அநியாயமாக நடந்தாலும்.

பிரதான எதிர்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி கணிசமான வாக்குகளைப் பெற்றாலும் இந்தத் தேர்தலிலும் அது அம்மேல்தான்...சிறுபான்மைக் கட்சிகளில் இருந்து தாவியவர்கள் குறிப்பாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இலிருந்து அரசுடன் இணைந்து செயப்படும் அமைச்சர் அதாவுல்லாஹ், அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அமைச்சர் பேரியல் அஸ்ரப் தவிர மற்ற எல்லோரும் மண்ணைக் கவ்வி விடுவார்கள் போலதான் இன்றைய கள நிலவரம் சொல்லுகிறது. ஆளும் கட்சி சார்பாக புதியவர்கள் பலர் வெற்றிபெறுவார்கள், பழையவர்கள் பலர் தோற்றுப் போவார்கள்

சிறு பன்ன்மையினர் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்ற கேள்வி அல்லது சிறுபான்மையினர் யாருக்கு வாக்களிப்பார்கள் என்ற எடுகோள்இந்த இடத்தில் தான் நிறுவப் படுகிறது, கடந்தஜனாதிபதிதேர்தலில் மொத்த சிறுபான்மை சமூகமும் ஜெனரலுக்கு வாக்களித்து ஒரு வெளிப்படை உண்மையை தெரிந்து கொண்டார்கள் அதுதான் இப்போது அரசுக்கு சுக்கிர யோகம் தொட்ட தெல்லாம் துலங்கும் நாம் எத்தனை அரசுக்கு எதிராக வாக்களித்தாலும் அது அரசை ஒன்றும் செய்து மாறாக நம்மை நாம் இனங் காட்டிகொண்டவர்களாக மட்டுமே மாறுவோம் இதனால் நம்மீது வெறுப்பும், குரோதமும் மட்டுமே வளரும், இந்த உண்மையை சிறுபான்மை சமூகம் குறிப்பாக முஸ்லிம்,தமிழ் சமூகம் விளங்கி வைத்துள்ளது , எனவே இம்முறை சிறுபான்மையினரின் வாக்கில் அதிகமான சதவீதம் அரசாங்க கட்சிக்கே என்பது வெள்ளிடை மலை. வாக்கு வேட்டைக்காக மட்டுமே மக்கள், சமூகம், இனம் என்று பூச்சாண்டி காட்டும் அரசியல் முள்ளமாரிகளை, பச்சோந்திகளை விட ஆளும் அரசுடன் கை கோரத்து செல்வதே இன்றைய சூழலில் சிறுபான்மையினருக்கு நல்லது அதை விடுத்து நம்மை நாம் கட்டிக்கொள்ளும் விதத்தில் இந்ததேர்தலையும் நாம் பயன்படுத்த கூடாது , .....................................

Read more...

வியாழன், 18 பிப்ரவரி, 2010

"பேசப்படாதவர்கள்"

நம்மைதாண்டிச் செல்லும் எவரைப் பற்றியும் நாம் அநேகமாய் கவனிப்பதும் இல்லை கணக்கெடுப்பதுமில்லைஎவர் நல்லவர், எவர் கெட்டவர் என்கின்ற எந்த தகவலும் நமக்கு தெரிவதில்லை, அவர்களின் குடும்ப நிலவரம், கல்விப் பின்புலம், மற்றும் அவர்களின் பொருளாதார அடைவுகள் எதுபற்றியும் நாம் அறிந்திருப்பதுமில்லை, அதைப்பற்றி நாம் அலட்டிக்கொல்லுவதுமில்லை, அதக்குரிய நேரம் நமக்கு கிடைப்பதுமில்லை, ஆனால் நமது பயணப் பாதையில் நாம் தினமும் சந்திக்கின்ற ஒரு இனக் குழுமத்தினர் தான் "பிச்சைக்காரர்கள்" இவர்கள் யார்? எங்கிருந்து முளைத்தார்கள்? இவர்களின் பின் புலம் என்ன? இவர்களை பிச்சைக்காரர்களாக உருவாக்கியது யார்? அவர்கள் தானாக உருவானவர்களா? அல்லது சமூகத்தினால் உருவாக்கப் பட்டவர்களா? இப்படி பல நூறு கேள்விகள் இவர்களைத்தாண்டி செல்லும் போது நமக்குள் எழுந்திருக்கும். இது பொதுவாக எல்லோர் மனதிலும் எதோ ஒரு சந்தர்ப்பத்தில்
எழுந்து தீர்வு இல்லாமலேயே நாம் அதை மறந்தும் பொய் விட்டிருப்போம்.

இன்றுகளில் வயது பேதமின்றி சிறுவர்கள், இளையவர்கள், பெண்கள்,வயோதிபர்கள் என்ற பாகுபாடுகளையும் தாண்டி களத்தில் குதித்துள்ளனர், இந்த அவலத்திற்கான நிறைய காரணங்களை சுட்டலாம்,

தமது வயது முதிர்ந்த பெற்றோகளை ஒழுங்காக கவனிக்காமையினால் அவர்களுக்கான தேவைகளை நிறைவேற்றும் முகமாக முதியவர்கள் பிச்சைக் காரர்களாக ஆகின்றனர், தமது பெற்றோரை உதாசீனம் செய்யும் பிள்ளைகளுக்கு இறைவன் கருணை காட்ட மாட்டான் என்கின்ற சத்தியம் புரியாமல் தமது வயது முதிர்ந்த பெற்றோகளை பிச்சை காரர்களாக உலவ விட்டுவிட்டு தாம் தமது மனைவி பிள்ளைகள் சகிதம் சுகமாக வாழ எத்தனிக்கும் பிள்ளைகளுக்கு இறுதியில் அவர்களும் பிச்சை எடுத்து வாழும் அவல நிலைதான் வரும் என்ற மெய்யியல் தெரிந்தும் தம் பெற்றோரில் கரிசனை அற்றவர்களாக இருப்பது கவலைக்கிடமான ஒரு விடயாமாகும்.

முறையற்ற விதத்தில் பிள்ளைகளை பெற்று பாதையில் வைத்து வளர்த்தெடுக்கும் ஒரு குளுமத்தினரையும் நாம் அவதானிக்கமுடியும், இந்தவகையில் சிறுவர்கள் பிச்சைக் காரர்களாக மாறுவது இந்த இடத்தில் இருந்துதான் இவர்களின் எதிர்காலம் எப்போதும் இருண்டு பொய் தான் இருக்கும், சாதாரண குழந்தைகளுக்கு உள்ள எந்த சலுகையும் இந்த அப்பாவி குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை என்ன பாவம் செய்ததற்காய் இந்தத் தளிர்களுக்கு இப்படி ஒரு வாழ்க்கை? இந்த ஈனநிலைக்கு விடிவு எப்போது வரும் இவர்கள் பற்றி யார் தான் பேசப் போகிறார்கள் ? இன்னும் பேசப் படாதவர்களாக இவர்கள் இன்னும் இருப்பதுதான் பெருங்கவலை தரும் விடயம்.

முறையற்ற காதல் தொடர்பினால் அநாதை ஆகும் பெண்கள், காதலனால் விபச்சாரிகலாக்கப் படும் பெண்கள் இவர்கள் தான் கடைசியில் வாழ வழியில்லாமல் பிச்சைக்காரர்களாக வாழ தலைப் படுகின்றனர். ஒரு நாட்டின் கீர்த்திக்கு இழிவை தேடித்தரும் வகையில் வாழும் இவர்கள் பற்றிய அவதானத்தை அரசும், சர்வதேசமும் கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டும் ,
கடவுளிடமான எனது வேண்டுகோள் ஓன்று தான் எனக்கு பணத்தையும் பதவியையும் தா இந்த பெசப்படதவர்களின் வாழ்க்கையை மாற்றிக்காட்டுகிறேன்...........

Read more...

திங்கள், 15 பிப்ரவரி, 2010

சாமத்து கனவுகள்...


கனவுத் தூரிகை
படம் வரைந்து
வாழ்க்கைக் குறிப்பில்
பதிந்து வைக்கும்

சேவல்கள்
உறங்கிப் போய்விட்ட
நடுச்சாமத்து
நிமிசங்கள்
இருளில் புதைந்து
அமைதி காக்கும்

தூரத்தில்
சில்வண்டுகளின் ஓசை
இருந்தும்
காதுகளுக்கு
எதுவும் கேட்காது

சோம்பல் முறித்து
மெல்லச் சிணுங்கும்
மகளின் அதிர்வுகளால்
மனைவியும் நானும்
கண் விழிப்போம்

மனைவியின் தாலாட்டிட்கு
அசைந்து கொடுக்காமல்
அழும் மகளின் அதரங்களை
நானும் மனைவியும்
தட்டிக் கொடுப்போம்

என்னையும் மனைவியையும்
மாறி மாறி பார்த்துக்கொண்டே
சிரித்தும் அழுதும்
விளையாடியும்
என் மகள் நேரம் கடத்துவாள்

மகளின் விளையாட்டுடன்
சில இரவுகள்
விடிந்தும் போய் உள்ளன

என் உம்மாவும் வாப்பாவும்
என்னோடும்
இப்படித்தான்
காலம் கடத்தியிருப்பார்கள்

சாமத்தில் எப்படி
கனவு காண்பது
விளித்திருகையில்
இருந்தும்
விழித்திருத்தல்
பிடித்தித்திருகிறது
என் மகளுக்காக.............

Read more...

புதன், 10 பிப்ரவரி, 2010

வேலிகளைத் தாண்டும் வேர்கள் -கவிதை நூல் வெளியீட்டு விழா.

வேலிகளைத் தாண்டும் வேர்கள் -கவிதை நூல் வெளியீட்டு விழா.

படிகள் பதிப்பகத்தின் வெளியீடான "வேலிகளை தாண்டும் வேர்கள்" அனுராதபுர மாவட்ட கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது எதிர் வரும் 21 -02 -2010
ஞாயற்று கிழமை மாலை 04 , 30 மணிக்கு தேசிய கலை இலக்கிய பேரவை கேட்போர் கூடத்தில் கவிஞர் மேமன் கவியின் தலைமையில் நடைபெறவுள்ளது.
நிகழ்வின் பிரதம அதிதியாக உயர் நீதி மன்ற சட்டத்தரணி என்.எம்.சஹீத் கலந்து கொள்ளும் இந்நிகழ்வின்
முதற் பிரதியை இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொள்வார்கள்.
நூலின் விமர்சன உரையை எழுத்தாளர்களான திருமதி பத்மா சோமகாந்தன் மற்றும் அஸ்ரப் சிஹாப்தீன் ஆகியோர் நிகழ்த்த உள்ளனர்.நிகழ்வின் வாழ்த்துரையை மல்லிகை ஆசிரியர் திரு டொமினிக் ஜீவாவும், ஏற்புரையை நாச்சியாதீவு பர்வீனும் நிகழ்த்துவார்கள். நாச்சியாதீவு பர்வீன், எல்.வசீம் அக்ரம் ஆகியோரை தொகுப்பாசிரியர்களாக கொண்ட இந்த கவித்தொகுதியில் அன்பு ஜவஹர்சா, பேனா மனோகரன், கெகிராவ சஹானா, கெகிராவ சுலைஹா, எம்.சி.றஸ்மின், நாச்சியாதீவு பர்வீன், எல்.வசீம் அக்ரம், அனுராதபுரம் ரஹ்மத்துல்லாஹ், அனுராதபுரம் சமான் ஆகிய மூத்த, இளைய படைப்பாளிகளின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

Read more...

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

வெற்றி என்பது தோல்வியடைந்தவரை அவமானப் படுத்தவல்ல!

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து இன்னும் மூச்சி விடும் அவகாசம் கூட கழிந்து விடவில்லை அடுத்த தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளது, எல்லாச் சுமைகளையும் மக்கள் மீதே சுமத்தும் ஆதிக்கம் நிறைந்தவெளிநாட்டு அரசாங்கங்களுக்கு எந்த வகையிலும் நாம் குறைந்தவர்கள் அல்ல என்கின்ற மனப் பாங்கில் நமது அரசும் செயற்படுவது கவலைக்கிடமான சமாச்சாரம் ஆகும்,

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினர் அரசுக்கு எதிராக வாக்களிதுள்ளதாகவே தேர்தல் முடிவுகள் நமக்கு சொல்லுகின்றன, ஆனால் இந்த தேர்தலில் தில்லு முல்லு இருப்பதாக எதிர் கட்சிகளும் ஊடகங்களும் தெளிவாககருத்து தெரிவிக்கின்றன ஒரு வேளைஇந்த தேர்தல் முறைகேடாக நடை பெற்று இருந்தால் ஏன்அரசே திட்டமிட்டு சிறுபான்மையினர் வாழும் பிரதேசத்தில் அளிக்கப் பட்ட வாக்குகளை அவர்கள் அரசுக்கு எதிராக பாவித்துள்ளார்கள் நாம் வெற்றி பெற்றது பெரும்பான்மையின மக்களின் வாக்குகளால் என்பதை நிரூபிக்கும் விதத்தில் தமது செயற்பாட்டை மேட்கொண்டிருக்க முடியாது? அல்லது ஒரு வாதத்திட்காய் தேர்தல் எந்த முறை கேடுகளும் இல்லாமல் நடை பெற்றிருந்தால் ஒரு ஜனநாயக நாட்டில் வாழும் எந்த இனத்திக்கும் தாம் விரும்பிய ஒருவருக்கு வாக்களிக்கும் பரி பூர்ண உரிமையுள்ளது !

சரி, தேர்தல் தான் முடிந்து போய் விட்டதே பின்ன எதுக்கு இந்த பில்டப் என்று சக நண்பர்கள் கேட்பது புரிகிறது, இப்போதுகளில் சிறு பான்மையினர் வாழும் பிரதேசங்களில் ஒரு "போஸ்டர்" அடிபடுகிறது அதில் உள்ளவாசகங்கள் அப்பப்பா .....பச்சைத் துவேசமானது அது இதுதான்................

"நாட்டை புலிகளுக்கு தாரைவார்த்துக் கொடுப்பதற்கு பொன்சேகாவுக்கு வாக்களியுங்கள்" தேர்தல் முடிந்த பின்னும் ஏன் இந்த கொலை வெறி.........?

"வெற்றி என்பது தோல்வியடைந்தவரை அவமானப் படுத்தவல்ல"

Read more...

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

நான்.........

நான்
தலைக்கணத்தின்
அத்திவாரம்..
நான்..அழிய வேண்டும்
நாடு செழிக்க
அம்பு இல்லாமல்
இதயத்தை காயப் படுத்தும் நான்

Read more...

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

அக்கரைப் பட வேண்டியவர்கள்!




நாம் அக்கறைப்பட வேண்டியவர்கள் நம் பெற்றோர்கள், குடும்பத்தில் மூத்தவர்கள், நம் உறவினர்கள் என்று நாமெல்லோரும் நினைத்துக்கொண்டு இருக்கிறோம், அது உண்மையும் கூட ஆனால் இவர்களை விடவும்

நாம் கண்ணும் கருத்துமாக கவனிக்க வேண்டிய ஒரு பகுதியினர் எமது சிறுவர்களாகும் இன்று உடல் உளரீதியாக பாதிக்கப் படுக்கின்ற அதிக சதவீதத்தினராக சிறுவர்களை கொள்ள முடியும்.


இன்றைய பரபரப்பான வாழ்க்கை சூழலில் நாம் வேகமாக ஓடிக்கொண்டு இருக்கிறோம் இந்த பரபரப்பில் நமது குழந்தைகள் பற்றிய அவதானத்தை நாம் வெகுவாக இழந்து போயுள்ளோம் இது இந்த சிறுவர்களின்

வாழ்வில் பல நூறு உளவியல் ரீதியான மன அழுத்தங்களுக்கும் பாதிப்புக்கும் ஆளாகின்றனர் சின்ன சின்ன பிழைகளுக்கெல்லாம் சிறுவர்களின் மீது எரிந்து விழுதல், அடுத்தவர்களின் முன்னால் அவர்களை அவமானப்படுத்தல், மற்றக் குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேசுதல் , மற்றக் குழந்தைகளை உயர்த்தியும் நம் குழந்தைகளை தாழ்த்தியும் பேசுதல் போன்ற நமது கவனக் குறைவான நமது செயற்பாடுகள் பாரிய பின் விளைவுகளை உண்டு பண்ணக் கூடியது.


பிள்ளைகள் பெற்றோரை மதிக்காமல் இருத்தல், பெற்றோரின் வார்த்தைகளுக்கு கட்டுப்படாமல் இருத்தல், பெற்றோரை அவமதித்தல், கொடூர எண்ணம் கொண்டவராக நடந்து கொள்ளுதல், முறையற்ற காதலில் விழுதல், மொன்றாம் தர செக்ஸ்சை விரும்புதல், வாழ்க்கை வெறுத்துப் போனதாக நடந்து கொள்ளுதல்

இன்னும் பல ........


ஒவ்வொரு நாளும் பிள்ளைகளுடன் கொஞ்சநேரத்தை கடத்துங்கள், அவர்களின் கருத்துகளுக்கு செவி சாயுங்கள், அவர்களின் சின்ன திறமைகளை மதியுங்கள், அவர்களை பாராட்டுங்கள் , எந்த சந்தர்ப்பத்திலும் அவர்களை விட்டுக் கொடுக்காதீர்கள் , அவர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள் , நண்பர்களாக பழகுங்கள்

இன்றைய சிறுவகள் நாளைய பெரியவர்கள் ............அவர்களை புரிந்து கொண்டால்எந்தப் பிரச்சினையும் வராது...

Read more...

வெள்ளி, 29 ஜனவரி, 2010

எல்லாம் முடிந்தது..

ஒரு நிமிசமும்
எதிர்பாராதது என்று
யாருக்கும் சொல்ல முடியாது

எல்லாம் முடிந்தது
கலப்பட வியாபாரம்
நன்றாகவே
நடந்தேறியது
உண்மை ஜனநாயகம்
இன்னும் வாழ்கிறதாம் இங்கு

இன்னும் எட்டு
ஆண்டுகள்
கடவுளே என் மீது
கருணை காட்டு

யாருக்கும்
புரியாத புலம்பல் இது
பித்தர்களே கொஞ்சம்
நில்லுங்கள்
உங்களோடு நானும்
இணைந்து கொள்கிறேன்.

Read more...

வெள்ளி, 22 ஜனவரி, 2010

நள்ளிரவில் நடக்கும் நரிகளின் நாடகம்..

இன்னும் ஒரு சில நாட்களில் நமது இலங்கைத் திருநாட்டின் ஆறாவது ஜனாதிபதியைத் தீர்மானிக்கும்

தேர்தல் நடை பெறவுள்ளது இதில் பிரதான வேட்பாளர்களான மஹிந்த ராஜபக்ச மற்றும் ஜெனரல் சரத் பொன்சேகா ஆகியோர்களுக்கான போட்டி முன் எப்போதும் இல்லாத மாதிரி மிகக் கடுமையாக இருக்கின்றது உலகம் அமெரிக்க ஜனாதி பதித்தேர்தலை எப்படி உன்னிப்பாக அவதானித்ததோஅதே அளவு அவதானத்துடன் தான் இலங்கைத் தேர்தலும் இம்முறை அவதானிக்கப் படுகிறது

முழு உலகத்தினதும் கவனயீர்ப்பை பெற்றிருக்கின்ற இலங்கை தேர்தல் களம் உலகத்திலேயே மிக மிக கேவலமான சாக்கடைதனமான பிரச்சாரத்திட்கான முதலிடமாக இருக்கிறது.

இப்போதுகளில் இரவில் தேர்தல் காலத்தை முன்னிட்டு எல்லா டிவி சேனல்களிலும் இந்த பாலாய்போன அரசியல் தான் கருப்பொருளாய் அமைகிறது அதிலும் சிரச டிவி யில் அவ்வப்போது நடக்கின்ற சடன நிகழ்ச்சி பெருத்த்வரவேற்பை பெற்றுள்ளது மக்களின் பிரதி நிதிகள் என்று தம்மை காட்டிக் கொள்ள முனையும் இவர்கள் போடும்ஆட்டம் சொல்லிமாளாது அத்தோடு நிகழ்ச்சியை நடாத்தும் சிரச ஊடகவியலாளர்கள் களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் திணறும் அழகே தனி தான் தமது அரசியல் காலத்தை இலஞ்சம் ஊழல் கொலை கொள்ளை ஆட்கடத்தல் அடாவடித்தனம் என்று பாவித்து விட்டு இப்போது முதலை கண்ணீர் வடிக்கின்றனர் இப்போது மக்களின் கையில் தான் எல்லாம் இருக்கிறது

பட்டி தொட்டி எல்லாம் எல்லா தரப்பினரினதும் இன்றைய தலைப்பு இந்தத் தேர்தல் தான் என்பதை புரிந்து கொண்டதனால் தான் இந்த நரிகளை சிரச கூப்பிட்டு காலன் துறையாடுகிறது.

நள்ளிரவில் நமக்காக கண்ணீர்விடும் இந்த குள்ள நரிகளின் நள்ளிரவு நாடகத்திற்கு முற்றுப்புள்ளி வைபடுமா? அல்லது மீண்டும் நரிகளின் வலையில் நாம் வீழ்ந்து ......கண்ணீர்விட நேருமா? தேர்தல் முடிந்தவுடன் நல்ல முடிவுடன் நாம் saந்திப்போம்.....................

Read more...

செவ்வாய், 5 ஜனவரி, 2010

மறைந்து போகும் இலக்கிய தடம்...?

இவர்தான் புத்தளம் ஏத்தாலை இன்பாஸ், நீங்கள் நாச்சியாதீவு பரவீன என்ற தொலைபேசி அழைப்பு ஒன்றித் கூடாக என்னோடு அறிமுகம் ஆகினார், நல்ல விமர்சகர், மனதில் பட்டதை இவர் பட்டென்று சொல்லிவிடுவதால் இவருக்கு நண்பர்கள் மிக மிகக் குறைவு, இலக்கியவாதிகள், அறிவிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள் என்று பறந்து பட்ட தொடர்பை வைத்திருக்கும் இவர் நல்ல கவிஞ்சரும் ஆவார்,

புத்தளத்தை பொறுத்த மட்டில் ஜவாத் மரிக்கார், தில்லையடிச் செல்வன், உடப்பூர் வீர சொக்கன், போன்ற காத்திரமான மூத்த படைப்பாளிகளைத் தாண்டி வேறு எவரும் ஆக்க இலக்கியத்தில் சொல்லிக்கொள்ளும் அளவில் பிரகாசிக்க வில்லை ஆனால் உதிரிகளாக அவ்வப்போது சிலர் தமது படைப்புக்களை பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் தவழ விட்டுள்ளனர் , புத்தளம் அஸ்மியா, ஏத்தாலை சம்சாபாத்,
ஏத்தாலை இன்பாஸ் இவர்களில் சிலராவர்கள், இந்தவகையில் இந்த இளம் தலைமுறையினர் இலக்கியத்தை விட்டு தூரப்போய் விட்ட ஒரு அவல நிலை இப்போது காணப் படுகிறது.

இந்தவகையில் 2005 களில் கவிதைகளின் மூலம் காலடி எடுத்து வைத்தவர்தான் ஏத்தாலை இன்பாஸ் நல்ல பல கவிதைகளை தந்து விட்டு அதனை தொடராமல் இப்போது அவ்வப்போதுகளில் எழுதிக் கொண்டிருக்கின்றார், இன்பாசின் கவிதைகள் பெரும்பாலும் காதல் கவிதைகளாகவே இருந்க்கின்றன
நல்ல கவித்து ஆளுமையும், சொல்வளமும் உள்ள இன்பாசினால் நல்ல பல ஆக்கங்களை தரமுடியும்
ஆனால் அவர் மவுனமாகவே இருக்கிறார்.

நீயும் நானும்
எச்சில் படுத்தி
துப்பிய இனிப்பை
எறும்பு கூட சுவைக்க வில்லை
நம் காதலின் புனிதம்
கேட்டு விடுமென்று...

வழமையான காதல் ரசம் சொட்டும் இந்த கவிதை கவிஞ்சரின் ஆழ மனக் காதலை அழகாக வெளிப்படுத்துகிறது, காதலை புனிதமாகவும் அதே நேரத்தில் ஆழமாகவும் சுட்ட நினைத்துள்ளார் கவிஞ்சர்
சிறுகவிதை, மணிக்கவிதை, ஹைக்கூ பாணி கவிதைகளில் இவருக்கு ஆர்வம் அதிகம் என்பதை
இவரது கவிதைகளை ஒரு சேர படிக்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது,

எத்தனை பேரோடு
வாதிட்டு வென்றாய்
உன் வாதம்
எமனிடம் பழிக்க வில்லையே
சட்டத்தரணி...

மரணம் வெல்ல முடியாத ஓன்று என்கின்ற ஆன்மீகத் தத்துவத்தை அற்புதமாய் வெளிப் படுத்துகிறார்
பொதுவாகவே சட்டத்தரணிகள் எனும் போது அவர்களது வாதத் திறனின் மூலம் பொய்களை மெய்ப் படுத்தியும், மெய்களை பொய்யாக்கியும் காட்டுவார்கள், அவர்களின் எந்தத் திறமையும் மரண வேலையில் உதவி செய்யாது மரணத்திடம் எல்லோரும் மண்டியிட்டே ஆகவேண்டும் என்கின்ற எதார்த்தத்தை அழகாக சொல்கிறார் இன்பாஸ்.

அவரது மன ஏக்கம் என்ற கவிதை இப்படி சொல்கிறது..

நீ ஊரை விட்டு
போனதில் இருந்து..
குயிலின் குரல்
பவுர்ணமி நிலவு
கொலுசு ஓசை
வளையல் துண்டு
ஒற்றை ரோஜா
ஜோடிப் புறா
இன்னும் காதல் கவிகள்
இவைகள் எல்லாமே
அடிக்கடி உன்னை
எனக்கு ஞாபகப்படுத்துகிறன.

இன்பாசின் சொந்த அனுபவங்களைத்தான் இப்படி கவிதையாக வடித்துள்ளார் போலும், இன்பாசின் இன்னும் நல்ல கவிதைகள் இருக்கின்றன தமது அன்றாடங்களின் பதிவுகளை இன்பாஸ் மீண்டும் நல்ல கவிதைகளின் மூலம் தர முயற்சிக்க வேண்டும், நல்ல விமர்சகராக இருக்கின்ற இன்பாஸ் நல்ல கவிஞ்சராக வர தேடலும்
இடை விடா வாசிப்பும் அவசியம், இன்பாஸ் நல்ல படைப்புக்களை தருவாரா?

இன்பாசின் தொடர்புக்கு - 0712099370.

Read more...

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by