Related Posts with Thumbnails

வெள்ளி, 21 செப்டம்பர், 2012

அருமை நபியை அவமதிக்கும் அல்லக்கைகள்.

அருமை நபியை அவமதிக்கும் அல்லக்கைகள்.



அருமை நபி பற்றிய அமெரிக்க திரைபடத்திட்கான எதிர்ப்பானது சர்வதேசத்து முஸ்லிம்களை கொதிப்படையச் செய்துள்ளது

இது முஸ்லிம்கள் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீது வைத்துள்ள அன்பை தெளிவாக காட்டுகிறது. உலகில் பல இஸ்லாமிய நாடுகள் இந்த திரைப்படதிட்கான பலந்த கண்டனத்தையும், எதிர்ப்பையும்
தெரிவித்துள்ளன, இன்றைய தினம் (21 /09 /2012 ) வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையின் பின்னர் இலங்கையிலும் பல பகுதிகளிலும் அமெரிக்க மற்றும் அந்த திரைப்படதிட்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டங்கள் நிகழ்த்தப்பட்டன. இந்த உலகம் தழுவிய முஸ்லிம்களின் ஆர்ப்பாட்டத்தை கண்டும் கேட்டும் அமரிக்காவோ அல்லது அதனது
அல்லக்கைகளோ அல்லது இந்தப்படத்தின் தயாரிப்பாளரோ எவ்விதமான வெளிப்பாடுகளையும் காட்டாதவர்களாகவே இருக்கின்றனர்

அத்தோடு இதே கால எல்லையில் பிரான்சின் சஞ்சிகை ஒன்றும் நபிகளார் பற்றிய கேலிச் சித்திரங்களை வெளியிட்டுள்ளது, நபி மீதான இவ்வாறான அவதூறுகள் காலம் காலமாக நபிகளாரின் காலத்திலிருந்தே செய்யப்பட்டு வந்தது தான் அது இன்று மட்டுக்கும் தொடர்கிறது.

 ஆரம்ப காலங்களில் இஸ்லாமிய எழுச்சியை பொருத்துக்கொள்ள முடியாத இஸ்லாமிய எதிர்ப்பு வாதிகள் இந்த செயலை செய்து வந்தார்கள், இதில் யூதர்கள்,கிறித்துவர்கள்..பெரும்பாலும் அடங்குவர். இந்த இஸ்லாமிய எதிர்ப்பு வாதிகளின் செயற்பாடுகளினால் இஸ்லாம் வளர்ச்சி அடைந்ததே தவிர மாறாக அழிந்து போய்விடவில்லை.


அமெரிக்காவுக்கும், நபிகளாரை அவமதிக்கும் வகையிலான படத்திக்கும் எதிர்ப்பு முஸ்லிம்கள்.

இன்றுகளில் நவீன தொழின்நுட்ப,விஞ்ஞான வளர்சிக்கும் அதன் சவால்களுக்கும் முகம் கொடுக்கும் எழுச்சி மிக்க மார்க்கமாக இஸ்லாம் ஆய்வாளர்களால் கருதப்படுகிறது, உலகின் அதிகமான பிரபலங்கள் இஸ்லாத்தை நேசிக்கின்றார்கள், இறுதியில் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்கிறார்கள், மேற்கத்தைய சிந்தனைவாதிகள் என்று தம்மை நிரூபிக்க முனைக்கின்றவர்கள் தாம் இலகுவாக பிரபல்யம் அடைய தெரிவு செய்திருக்கும் வழிதான் இந்த

இந்த இறைதூதர் நிந்தனை ..

அருமை நபியை அவமதிக்கும் அல்லக்கைகளுக்கு தெரியும் தம்மை இலகுவில் பிரபல்யப்படுத்த

ஒரே வழி இஸ்லாத்தின் ஆணிவேரான இறைத்தூதரை சீண்டுவதாகும், இதன் மூலம் உலக முஸ்லிம்கள் கொதித்தெழுவார்கள் இஸ்லாமிய எதிர்ப்பு நாடுகள் தமது ஆதரவை வழங்கும் அத்தோடு இலகுவாக பிரபல்யம் அடையலாம், இன்றைய இஸ்லாமிய எதிர்ப்பு சக்திகளின் செயற்பாடுகளையும் விட பிரபல்யம் தேட முனையும் அல்லக்கைகளின் செயற்பாடுகளே இந்த அவதூறான படங்கள்  மற்றும் சித்திரங்கள்.


அமெரிக்காவுக்கும், நபிகளாரை அவமதிக்கும் வகையிலான படத்திக்கும் எதிர்ப்பு முஸ்லிம்கள்.
 அவர்களுக்கு நன்றாக தெரியும் யூதர்களை விடவும் மூசா (மோசஸ்) நபியை நாம் மதிக்கிறோம் யூதர்கள் என்ன செய்தாலும் நாம் மூஸா நபியை ஏசப்போவதில்லை அவ்வாறே கிறித்துவர்களையும் விட நாம் நேசிக்கும் ஒருவர் தான் ஈசா(ஏசுநாதர்) நபி - கிறித்துவர்களின் எந்த செயற்பாட்டுக்கும் நாம் ஈசா நபியை ஏசப்போவதில்லை அதனால் அவர்களுக்கு நமது இறுதி நபிக்கெதிரான செயற்பாடுகளை இலகுவில் செய்ய முடிகிறது.



இனி இந்த விடயத்தில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்கின்றபோது தான் பல விடயங்களை நாம் அவதானத்தில் கொள்ளவேண்டி இருக்கிறது.

1 - நாம் நமது நபியை நேசிப்பதாக சொல்கிறோம் - அவரது வாழ்க்கையை, வாக்கை எந்த அளவு பின்பற்றுகிறோம்,(பொறாமை, நயவஞ்சகம்,கழுத்தறுப்பு,அடுத்தவர்மீது குறைகாணுவதில் கண்ணாக இருத்தல்,விட்டுக்கொடுக்காமை, ஹராம் ஹலால் பேணாமை) இப்படி நமது கல்பு முழுக்க கறைகளை வைத்துக்கொண்டு நாம் எப்படி அடுத்தவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதும் அண்ணல் நபிமீது பாசம் உள்ளவர்கள் என்றும் வாதிப்பதும்.



2 - நமக்குள் பல பிரிவுகள்- இதனால் பல பிளவுகள் ஒற்றுமையை உரக்க, உறைக்க ஒலித்த மார்கத்தில் வெற்றுக் கோசங்கள் மட்டுமே நம்மிடம் எஞ்சி  இருக்கின்றது இஸ்லாமிய பண்புகளை மறந்து, மன்னிப்பு, சகிப்புத் தன்மை போன்றவற்றை மூட்டை காட்டி விட்டு நமது சொந்த சுய விளம்பரதிட்க்காக இஸ்லாத்தை மூலதனமாக்குகிறோம் நாமா அண்ணல் நபி மீது

அன்பு வைத்துள்ளோம்?



3 - வருடத்திற்க்கு சுமார் நூறு இஸ்லாமிய பெண்கள் இலங்கையில் திருமணம் மூலம் மதம் மாற்றம் செய்யப்படுகிறார்கள் இதற்க்கான காரணம் "சீதனம்" மகர் கொதுத்து திருமணம் செய்யும் அளவுக்கு தன்னம்பிக்கையும், ஈமானும் இல்லாத நாமா அண்ணல் நபி மீது

அன்பு வைத்துள்ளோம்?



4 - பெண்ணுரிமை பற்றி வெகு தெளிவாக பேசிய மார்க்கம் இஸ்லாம், பெண்கல்வியில் இன்னும் பாமரத்தனத்துடன் இயங்கும் நாமா இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி கொடுக்கப் போகிறோம்?



5 - நம்மை விடவும் பல மடங்கு உறுதியான ஈமானும், அல்லாஹுவுக்கு மிக நெருக்க மான ஒருவருமான பெருமானார் பற்றிய பொய்யான பிரச்சாரத்திட்க்கான தண்டனையை அல்லாஹ் உரியவர்களுக்கு வழங்குவான் என்பது
சர்வ நிச்சியம்..ஆனால் இந்த விடயத்தில் மட்டுமே நம்மை நாம் இஸ்லாமியர்களாக காட்டிக்கொள்ளாமல் நமது ஒவ்வொரு செயற்பாடுகளிலும் வீட்டிலும், வெளியிலும் நபி வழியில் அவர் நற்பண்புகளை செயற்படுத்துவோம்..

தனிமனித விமர்சனங்களால் நாம் எதனையும் சாதிக்க முடியாது..சிந்திப்போம் செயற்படுவோம்.

அமெரிக்காவுக்கும், நபிகளாரை அவமதிக்கும் வகையிலான படத்திக்கும் எதிர்ப்பு முஸ்லிம்கள்


Read more...

திங்கள், 16 ஜூலை, 2012

இலங்கை இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வகத்தின் முதலாவது மாதாந்த ஒன்று கூடல் நிகழ்வும் நினைவும்.

ஆய்வகத்தின் தலைவர் காப்பியக்கோ ஜின்னாஹ் சரிபுதீன் அவர்களின் தலைமையில் வெள்ளவத்தை 42 ஆம் ஒழுங்கையில் அமைந்துள்ள பிரின்சஸ் அகடமி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது சிறப்பு அதிதியாக புரவலர் அல்ஹாஜ் அப்துல் கையூம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். சிறப்புரையாற்ற தென் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ரகுபரன் அவர்களும் மீள் பார்வை ஆசிரியர் பீடத்தை சேர்ந்த சிராஜ் மஹ்சூர் அவர்களும் வருகை தந்திருந்தார்கள்.இந்நிகழ்வில் அழைக்கப்பட்ட 35 பேர்களில் 30 பேர் கலந்து கொண்டனர். மேமன்கவி, அல்அசுமத், அமல்ராஜ், சுஹைதா கரீம், ஷர்மிலா செய்யித்,நாச்சியாதீவு பர்வீன், நியாஸ் ஏ. சமத், நேகம பிஸ்ரின் முஹம்மது முபாரக் மௌலவி, முர்சிதீன், சட்டத்தரணி மர்சூம் மவ்லானா, அத்னான், அஸ்ரப் சிஹாப்தீன், தினக்குரல் நிலாம்,மவ்லவி காத்தான்குடி பவுஸ்,தம்பு சிவா, மதுசூதன், கே.பொன்னுத்துரை, அந்தனிஜீவா, தி.ஞானசேகரன், ஒகே,குணநாதன் உட்பட பலர்

கலந்து கொண்டனர். நிகழ்வின் நன்றி உரையை ஆய்வகத்தின் செயலாளர் அஸ்ரப் சிஹாப்தீன் நிகழ்த்தினார்.

பார்வையாளர்களில் ஒரு பகுதியினர்.
 
யாத்ராவின் பிராதான ஆசிரியரும் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் செயலாளர் அஸ்ரப் சிஹாப்தீனின் கலகலப்பான நன்றி உரையின் போது.

இலங்கை இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வகத்தின்

தலைவர் காப்பியக்கோ ஜின்னாஹ் சரிபுதீன், சிறப்பு அதிதி புரவலர் அல்ஹாஜ் அப்துல் கையூம், தென் கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் ரகுபரன் ஆகியோரை படத்தில் காணலாம்.

பார்வையாளர்களில் ஒரு பகுதியினர்.
 
 
 
     காப்பியக்கோ ஜின்னாஹ் புரவலரை சால்வை போர்த்தி கவுரவிக்கின்றார்.

மீள் பார்வை ஆசிரியர் சிராஜ் மஹ்சூர் மத்திய கிழக்கு அரசியல் பற்றிய இலங்கை முஸ்லிம்களின் பார்வை. எனும் தலைப்பில் உரையாற்றிய போது.


இப்போதெல்லாம் நன்றியுள்ளவர்களை காண்பது அரிதாகவே உள்ளது எனவே தான் நன்றி உரையை நடுவில் பதிவிட்டுள்ளேன், என்னடா இவன் நன்றி உரையை முதலில் போட்டுள்ளான் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதில் போதுமென்று நினைக்கின்றேன்.









 
 

Read more...

செவ்வாய், 10 ஜூலை, 2012

சுய விசாரணை

நமது எண்ணமும் எழுத்தும் நமது சுய சிந்தனையின் அடிப்படையிலேயே அமைக்கிறது, அதை நாம் ஒரு தலைபட்சமாக ஏற்றுக்கொள்கிறோம், ஆனால் நமது கருத்தை அல்லது விருப்பத்தை அடுத்தவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது நியாயமற்ற கோரிக்கை ஆகும், தனிமனித இரசனைக்கு ஏற்ப மாறுபட்ட இயல்புகளையும், அவதானங்களையும் விருப்பு வெறுப்புக்களையும் மனிதன் கொண்டுள்ளான் அந்த வகையில் வெவ்வேறு சிந்தனைகள் உள்ளவர்கள் நம் மத்தியில் வாழ்கின்றார்கள், ஒருவருக்கு பிடிப்பது மற்றவருக்கு பிடிப்பதில்லை, ஒருவர் சிறந்தது எனக்கருதுவது இன்னொருவருக்கு படுகேவலமாகவும் பட வாய்ப்பிருக்கின்றது,



இந்த கருத்து முரண்பாடுகள் நல்ல நண்பர்களையும் எதிரிகளாக்கி விடுகின்றன, நெகிழ்வுத்தன்மையும், புரிந்துணர்வும் அற்ற ஒரு சமூகத்தில்

வாழ்கின்ற போதுகளில் வெகு நிதானமாக காய் நகர்த்த வேண்டியுள்ளது, நம் எதிரிகளிலும் பார்க்க நமது நண்பர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியுள்ளது, நண்பர்கள் எதிரிகளாகும் போது ஏற்படுகின்ற சிரமங்களை அனுபவித்த நபர்களுக்கு அது பற்றி தெரிந்திருக்க வாய்ப்புள்ளது,

எல்லோரையும் நேசிக்கும் படியே எல்லா மதங்களும் சொல்கின்றன நேசிப்பதில் உள்ள சிந்தனை சிக்கலினால் சிலர் முறை தவறி நேசிக்க விளைகின்றனர், இது பாரிய பின் விளைவுகளை உண்டு பண்ணுகின்றன நாம் என்பது நாம் மட்டும் அல்ல நம்மை சுற்றியுள்ளவர்களும்

தான் இது பற்றி யாரும் சிந்திப்பது இல்லை , அநேகமானவர்கள் சுய நலமுள்ளவர்களாகவே இருக்கின்றார்கள்,

நம்மை சுற்றி நல்லவர்கள் இருக்கின்றார்கள் ஆனால் அவர்களை அடையாளம் காண்பது தான் பிரச்சினை...

Read more...

திங்கள், 2 ஜூலை, 2012

கொழும்பு ‘உலகத் தமிழ் இலக்கிய மாநாடு’- பாரதியை முன்னிறுத்தி சில கேள்விகள்

பா.செயப்பிரகாசம் ஞாயிறு, 01 ஜூலை 2012 14:33






2010, சனவரி நடுவில் கொழும்பு சென்றிருந்தேன். 2009, மே-18ன் இரத்தச் சதசதப்பு குறையாத நாட்கள் அவை. நிணநாற்றமும் ரத்தநெடியும் அந்நாட்களுக்குள்ளிருந்து தீராமால் வீசியது. கொழும்பு தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் சிலரும், நண்பர்களும் சந்தித்தபோது, 2011, சனவரியில் கொழும்பில் ‘சர்வதேச தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு நடத்தவிருப்பது பற்றி தெரிவித்தார்கள். அதன் ஆலோசனைக் கூட்டம் சனவரி 3-ந் தேதி நடைபெற்றிருக்கிறது.



இன்னும், ஈராயிரம் ஆண்டுகளுக்கு ‘ஆறாவடு’ இருக்கவிருக்கும் நிலையில், இப்போது உடனடியாக இம்மாநாடு அவசியமா? இராசபக்ஷேக்கள் அனுமதிப்பார்களா என்ற கேள்வியை முன்வைத்தேன். அரசின் அனுமதியின்றி நடத்த இயலாது எனத் தெரியவந்தது.



ஷேக்ஸ்பியரின் ‘மேக்பெத்’ நாடகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற, கணவனுடன் கூட்டுச் சேர்ந்து, சித்தப்பாவான அரசனைக் கொலை செய்கிறாள் லேடி மேக்பெத். கொலைக்குப்பின் அதே நினைப்பில் மனநோய்க்கு ஆளாகிய லேடி மேக்பெத் தூக்கத்தில் நடக்கிறாள். “அரேபியாவின் வாசனைத் தைலங்களையெல்லாம் சேந்த்துத் கழுவினாலும் என் கைகளில் படிந்திருக்கும் ரத்தக் கறை போகாது” என்று கதறுகிறாள்.



கோவையில் நடத்திய முதலாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கொழும்பில் நடைபெற்ற ‘சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு’, அண்மையில் ஜூன்-1 முதல் 5 முடிய கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றுள்ள ‘உலகத் தமிழ் நாநாடு’ போன்ற நிகழ்வுகளை அவதானிக்கையில், லேடி மேக்பெத் போல் தூக்கத்தில் நடக்கிறோமோ என்று எண்ண வைக்கிறது. லேடி மேக்பெத் சொல்லும் அந்த வாசகம் போல், தமிழன்பர்களின் செயல்கள் அமைகின்றனவோ என்று நினைக்கத் தோன்றுகிறது. குற்ற உணர்வு கொண்டுள்ளார்களா என்ற கேள்வியை இதுபோன்ற செயல்முறைகள் எழுப்புகின்றன.



இம்மாநாடுகள் எதுவும், குறைந்தபட்சம் முள்ளிவாய்க்காலில் நடந்த பெரு ஊழியைப் பதிவு செய்யாமல் கடந்து சென்றன என்பது எத்துனை அவலம்.



முதல் நிகழ்வாக ஜூன் 1-ல் கொழும்பு தமிழ்ச் சங்கமும், சென்னை பாரதியார் சங்கமும் இணைந்து மகாகவி பாரதியார் விழா நடத்தினார்கள். பாரதியின் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டுமென்ற செயற்பாட்டை முன்வைப்பது சரியானது. இந்தக் கடமையைச் செய்ய தமிழகத்திலிருந்து வந்த பங்கேற்பாளர்கள் யார் என்பது கேள்விக்குரியது.



சென்னை பாரதியார் சங்கத் தலைவர் காந்தி - உயர் நீதிமன்ற வழக்குரைஞர். காங்கிரஸ் என அழைக்கப்படுகின்ற பேராயக் கட்சிக்காரர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பழனி தொகுதியில் வாய்ப்பு கேட்டு, காங்கிரஸ் இவருக்கு வழங்க மறுத்தது. பாரதி சங்கத்தின் செயலர் மதிவாணன், காந்தி போன்ற ஒருவர். எந்த காங்கிரஸ்காரரும் தமிழராக இல்லை என்ற பொதுக் கருத்து இங்கு தமிழுணர்வாளர்கள் சிந்தையில் அழுத்தமாக இடம்பெற்றுள்ளது. இந்திய தூதரக முதன்மைச் செயலராக இருக்கும் ஜஸ்டிஸ் மோகன் என்பவர், நிகழ்வில் பங்கேற்க உள்ளார் என்பது முதலில் கிடைத்த தகவல். ஆனால் அழைப்பிதழில் அவர் பெயர் காணப்படவில்லை. வேர் இல்லாமல் மரம் இல்லை என்பதுபோல, பூமிக்குள் மறைந்திருந்து இணைக்கும் வேராக தமிழ்நாட்டில் அனைத்து ஒருங்கிணைப்பையும் செய்துள்ளார் என்பது நிரூபணப் பட்டிருக்கிறது.



“தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரப்பவும், சொன்ன பாரதியை உலகுக்குப் பரப்பவும் பாரதிவிழா நடத்தினோம். பாரதிசங்கம் என்ற அடையாளம் மட்டுமே எங்களுக்குப் பொதுமானது” என்று கொழும்பு தமிழ்ச் சங்க அன்பர்கள் சொல்லக் கூடும். நோக்கம் தமிழ் வளர்ச்சி, தமிழ் ஆராய்ச்சி, இதற்காக ஒரு செப்புக்காக கூட, இலங்கையின் கஜானாவிலிருந்து கைமாறவில்லை என்று சொல்வதையும் ஏற்றுக் கொள்கிறோம். ஆனால் எவரோடு இணைந்து செய்தார்கள் என்பதும், இலங்கை அரசாங்க திணைக்களங்களோடு நெருக்கமான தொடர்பாளர்கள் இல்லாது இந்நிகழ்வை நடத்தக் கூடுமா? என்ற கேள்வியும் எழுகிறது.



காந்தி போன்றவர்கள் கொழும்புக்குப் பயணமாகிறார்கள் என்ற சேதி புறப்படும் முந்தையப் பொழுதுவரை இங்கு அறியத் தரப்படவில்லை. எதிர்ப்பு வரும், அது என்ன ரூபத்தில் வரும் என்று அறிந்தவர்களாதலால், “கள்ளத்தனமாக” புறப்பட்டார்கள். புதுவைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் கலந்து கொள்வது, அவருடைய தமிழத் துறை நண்பர்களே அறியாதவாறு கமுக்கமாய் வைக்கப்பட்டிருக்கிறது. அவரின் கீழ் ஆய்வு செய்யும் இருமாணவர்களையும் அழைத்துக் கொண்டு கொழும்பு புறப்படுமுன், செய்தித் தாள்களுக்கு தந்து அச்செய்தி புதுச்சேரி ‘தினகரன்’ செய்தித் தாளில் மட்டும் வெளியாகியுள்ளது.



பாரதி கவிஞன் மட்டும் அல்ல, வீர சுதந்திரம் வேண்டிநின்ற போராளி. அச்சம் தவிர், ஆண்மை தவறேல் என நெஞ்சுரத்தை உரைத்ததின் வழி – மானுட இனத்துக்கு நெஞ்சுத் திடம் போதித்தவன். கொடுங்கோல் அரசுகளுக்கு அடிபணியாதவன். ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று கொண்டாடிக் கொண்டிருக்கும் கொழுப்பை, பாரதி இருந்திருந்தால் யுகப்புரட்சி ஆவேசம்போல் கொதித்திருக்க மாட்டானா? மகாகவியின் பெயரால் எடுக்கும் இந்த விழா நிச்சயம் அந்தக் கொலைக் கொழுப்புக்கு கொம்பு சீவிவிடும் காரியமாக ஆகாதா?



‘இயல்பாய் நாங்களேதான் விழா எடுக்கிறோம்’ என்று சொல்லலாம். இந்த இயல்பை இனக் கொலைகாரர்கள் தமக்கு. கிட்டிய வாய்ப்பாய் பயன்படுத்திக்கொள்ளவும், “தமிழர்கள் இந்த அரசோடு இணக்கமாகவும், புரிதலோடும் இருப்பதால், மாநாடு கண்டு தமிழ் வளர்த்து, செழிக்கச் செய்கிறார்கள். சிங்களரும் தமிழரும் பகைமறப்புக் கொண்டு சுமூகமாக சுவாசிப்பதால் தமிழ்வளர்த்து மகிழ்கிறார்கள்” என பேரின இராசபக்ஷேக்கள் உலகின்முன் அறிவித்து உரிமை கொண்டாடவும் இந்த இயல்பு கைகொடுக்குமா அல்லவா? ஆஸ்திரேலியாவாழ் தமிழ்ப் பேராசிரியர் இலங்கையில் தமிழர் என்னும் நூலாசிரியர், முனைவர் மு.குணசிங்கம் இது குறித்து “இவர்கள் எடுக்கும் பாரதி விழாவானது, ஈழத்தமிழர்களுக்கு எதுவித பிரச்சனைகளும் இல்லை. அவர்கள் விழா எடுத்துக் கொண்டாடும் நிலையிலேயே இருக்கிறார்கள் என்பதையே உலகிற்கு காட்டி நிற்கும். இவ்வாறான தேவையற்ற விழாக்கள் சிங்கள இனவாத அரசிற்கு நிச்சயம் ஒரு சாதகமான சூழ்நிலையையே ஏற்படுத்திக் கொடுப்பதாக அமையும்” என்கிறார்.



வரும் அக்டோபரில் ஜெனிவா மனித உரிமை அவையில், இலங்கை மீதான விவாதம் களை கட்டப்போகிறது. ராசபக்ஷேக்களின் திட்டமிட்ட பொதுமக்கள் படுகொலையையும், மனித உரிமை மீறல்களையும் பெரும்பாலான நாடுகள் கண்டித்து வருகின்றன. பயங்கரவாதிகள் என்று தாம் எண்ணிய விடுதலைப்புலிகளை அழிப்பதற்கு ஆதரவாய் நின்ற பல நாடுகளும், விடுதலைப் புலிகளை இல்லாமல் ஆக்குவது என்று போர்வையில் அப்பாவிப் பொதுமக்களையும் ஒன்றாய்க் குவித்து கொலை புரிந்த செயல் திட்டமிட்ட இன அழிப்புச் சூழ்ச்சியே என அறிந்து அதிருப்தி கொண்டுள்ளனர். இந்தியா வயிற்றுப் பிள்ளைபோல் இலங்கையைப் பொத்திப் பொத்திக் காத்தாலும், நடத்திய கொடூரங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய இலங்கை அது தொடர்பான சிறு செயலும் மேற்கொள்ளாமல், மேலே மேலே ஒடுக்குமுறைக் களத்தை விரிவுபடுத்திக் கொண்டே செல்கிறது.



‘புதியன பாடிய புலவன்’ - இது கருத்தரங்கத் தலைப்பு. அரசியல் நோக்கில், சமுதாய நோக்கில், அறிவியற்பார்வையில், கற்பனை ஓட்டத்தில், அறம் சொல்லும் பண்பில், காவியம் படைத்தலில் என்ற தலைப்புக்களில் இங்கிருந்து சென்றோரும் அங்குள்ளோரும் உரையாற்றியுள்ளார்கள். இந்தத் தமிழறிஞர்கள் என்ன உரைநிகழ்த்தினார்கள் என்பதினும், என்ன பேசியிருக்கமாட்டார்கள் என்பதை நம்மால் அவதானிக்க முடியும். பிற்பகலில் நடைபெற்ற மகளிர் மட்டுமே பங்கேற்கும் “மகளிர் முற்றம்” நிகழ்வின் தலைப்பு – ‘பாரதியார் கவிதைகளில் உளம் கவர்ந்த ஓர் அடி’



‘விதியே விதியே தமிழச் சாதியை



என்செய்ய நினைத்தாய்’



என்ற அடியையோ,



‘கரும்புத் தோட்டத்திலே அவர் கரும்புத் தோட்டத்திலே’



என்ற ஓர் அடியையோ எடுத்து எவரும் பேசினார்களா, தெரியவில்லை. அறியத் தந்தால் நல்லது



“எலும்புக் கூடுகளின் குவியல்களை நான் காணவில்லை. இரத்தம் கசிய இறந்து கிடந்த உடல்களைத் தொகை தொகையாய்க் கண்டேன். கண்விழித்து என்னையே பார்ப்பதுபோல் காணப்பட்ட பச்சை உடல்களை நான் எப்படி மறப்பேன். உயிர் உண்டோ என நப்பாசையில் தலையைத் திருப்பும் போது, மடிந்து சரிந்த அந்தத் தலைகளை எப்படி மறப்பேன். சூடாறா அந்த உடலங்களின் பரிசம் என் கைகளில் இன்னும் ஒட்டுண்டு கிடக்கிறது. மனிதகுல விடுதலையின் பெயரால் அந்தப் பரிசம் ஒருபோதும் என்னை விட்டு நீங்க முடியாது. அந்தப் பரிசத்தால் மனித குல விடுதலைக்கான நாதத்தை நான் மீட்டியாக வேண்டும்”



பாரதி இருந்தால், இந்த வார்த்தைகளைப் பேசிருப்பான். மு. திருநாவுக்கரசு என்ற வரலாற்றாய்வாளனே இதைப் பேச வேண்டி வந்தது.



பாரதி இருந்திருந்தால், சத்தியமான அவனது குரல் இவ்வாறுதானே வெளிப்பட்டிருக்கும். ஈரல் குலை உருகும் உருக்கத்தை, அதன் மேல் நிறுவும் வெஞ்சின சபதத்தை இந்த வரலாற்றாய்வாளன் எவ்வாறு கொண்டு வர முடிந்தது? அவனுக்குள் ஒரு பாரதி அமர்ந்தான். அவனுக்குள் இருந்தவன் பாரதி அதனால்.



ஆனால் தமிழ்ச்சங்க நண்பர்களே! ஒன்றை நான் உங்களுக்குக் காட்டியாக வேண்டும். பாரதியை, கம்பனை, இளங்கோவை, பாரதிதாசனைப் பேசிட நீங்கள் அழைத்த பேச்சு வியாபாரிகளுக்குள் பாரதி இல்லை. அவர்கள் அழைத்தாலும் பாரதி வரப் போவதில்லை.



“காயப்பட்ட மகனைக் கைவிட்டு, காயப்படாத தன்பிள்ளைகளைக் காப்பாற்ற ஓடினாள் தாய். காயப்படாத பிள்ளைகளைக் காப்பாற்றித் திரும்புகையில், காயப்பட்ட பிள்ளை இறந்திருந்தான். காயப்பட்ட பிள்ளையைப் பிரிய ஒரு தாயால் ஒரு போதும் முடியாது. இந்தத் தாயோ, எறிகணையிலிருந்து ஏனைய பிள்ளைகளைக் காக்க சற்று நேரம், அந்தப் பிள்ளையை பிரியவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அந்தவேளை அந்தத் தாய் அழுத அழுகையை எப்படி விவரிப்பது? எப்படி மறப்பது?”



இதுவும் மு. திருநாவுக்கரசு என்ற வரலாற்றாய்வாளர் தான்



“அவர் விம்மி விம்மி விம்iமியழும் குரல் கேட்டிருப்பாய் காற்றே” என்ற பாரதியின் வரிகளில் அந்தத் தாய்மார்களின் அழுகுரலை நீங்கள் கேட்கவில்லையா? இதை மாநாட்டில் சொல்லவும் திறனற்றுப் போனீரோ?



“நாட்டை நினைப்பாரோ – எந்த



நாள் இனி அதைப் பார்ப்பதென்று அன்னை



வீட்டை நினைப்பரோ



கரும்புத் தோட்டத்திலே – அவர்



கரும்புத் தோட்டத்திலே”



முள்வேலி முகாம்களுக்குள் நிறைந்த ஓலத்தில், நீங்கள் கரும்புத் தோட்டத்தினைக் காணவில்லையா?



“ஆப்பிரக்கக் காப்பிரி நாட்டினும்



தென்முனை அடுத்த தீவுகள் பலவினும்



பூமிப்பந்தின் கீழ்ப் புறத்து உள்ள பற்பல தீவினும் பரவி,



இவ்வெளிய தமிழச் சாதி தடியுதையுண்டும்



காலுதையுண்டும் கயிற்றடியுண்டும்



வருந்திடம் செய்தியும் மாண்டிடும் செய்தியும்



பெண்டிரை மிலேச்சர் பிரித்திடல் பொறாது



செத்திடும் செய்தியும் பசியாற் சாதலும்”



வன்னியில், முல்லைத் தீவில், முள்ளிவாய்க்காலில், முள்வேலி முகாமில், தமிழர் பிரதேசங்களில் இக்காட்சிகள் தாமே நடந்தேறின. இன்றும் நடந்தேறுகின்றன.



“பிணிகளாற் சாதலும் பெருந்தொலைவுள்ள தன்



நாட்டினைப் பிரிந்த நலிவினாற் சாதலும்



இஃதெலாம் கேட்டு எனதுளம் அழிந்திலேன்”



- கண்ணீர், கதறல், கொடுந்துயரம் அறிந்தும் கேட்டும் எனது உயிர் இன்னும் தரித்துளதே என அந்த மகாகவி அழுதான்; பாரதிக்கு அப்போது கேட்டு கிரகிக்கும் வாய்ப்பே கிடைத்தது. இப்போதுபோல் சாட்சியங்களின்றி நடந்த கொலைகளைக் காட்டிய காணொளிகள் அன்று பாரதிக்கு கிட்டவில்லை.



ஜூன் 2-லிருந்து 5-முடிய நடந்த உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டில், நான்கு நாட்கள் பலரும் பல தலைப்பில் உரையாற்றி நடந்த நிகழ்வுகளில் இன, மொழி, பண்பாட்டு அழிப்பினைப் பேசாமல் அவ்வளவு பாதுகாப்பாக மொழியைப் பேணிக் கொண்டார்கள். தங்கள் புலமைசார் பசியைத் தீர்த்துக் கொள்ளவதைவிட, வேறு எந்த நோக்கமும் நிறைவேறியதாகத் தெரியவில்லை. துறைசார் புலமையை, புலமைத் திறனை புலப்படுத்தக்கூடாது என்றோ, புலப்படுத்தும் வாய்ப்பை நழுவவிடல் வேண்டுமென்றோ நாம் யாரும் சொல்வதில்லை. புலமை வெளிப்பாட்டுக்கு, மேதமைக்கு எல்லை வரையறுத்துக் கொள்வது எவ்வகைத் தர்க்க பூர்வம் என்று கேட்கத் தோன்றுகிறது.



இக்கரையில் இருந்துகொண்டு உபதேசிப்பதில் எங்களுக்கு ஒருவித சிக்கலுமில்லை. அக்கரை வாழ் ஜீவன்களாகிய உங்களுக்கு நடைமுறைச் சிக்கல் உண்டு என நாங்கள் அறிவோம். அதற்காக அறிவுத்தள செயல்பாடுகளில் ஒடுக்கம் கொள்வோர் பாரதிவழி நடப்போர் எனில் சரியா?



பெரும்பான்மை வீதத்தில் மக்களை அழித்தாகி விட்டது; மக்களை அழித்தபின் மொழி வாழுமா? மொழியைக் காக்க வேண்டுமாயின், மிச்சம் மீதி இருக்கும் மக்களையும் அழிப்புக்குள் விட்டுவிடாமல் காப்பது பற்றியே முதற்சிந்திப்பு நடக்க வேண்டும். மொழிக்காப்புக்குள், மொழி வளர்ச்சிக்குள், இலக்கிய ஆய்வுக்குள் ஒரு அரசியல் உள்ளார்ந்து இருக்கிறது என்பதைப் புறக்கணித்து விடக்கூடாது. வாழும் தமிழ், வளரும் தமிழ் எது? தமிழன் வாழ்ந்தால்தான் தமிழ்வாழும்; தமிழர் இல்லாமல் தமிழ்வாழும் என்பது நல்ல, திறமான கற்பனை. டென்மார்க் ஜீவகுமாரன் போன்றவர்கள் இதனைச் சிந்திக்கக் கடமைப்பட்டவர்கள். “தமிழ் உணர்வு என்பது வேறு; தமிழருக்கு நிரந்திர அரசியல் தீர்வு என்பது வேறு” என்று ஜீவகுமாரன் முன்னெடுக்கிற சமாதான முன்னெடுப்பில் யதார்த்தம் இல்லை; உண்மை ஒளி இல்லை.



“அரசியலுக்கு விலை போகாத சுயமும் தன்னம்பிக்கையும். யதார்த்தமும் நேர்மையும் எழுத்திலும் எழுதுபவன் வாழ்விலும் இருந்தால் கணதியான இலக்கியங்கள் பிறக்கும் என்பதில் ஐயமில்லை” என்பது ஜீவகுமாரனின் வாசகம்; இதில் நமக்கும் ஐயமில்லைதான். ஆனால் மக்களின் விடுதலை அரசியலுக்கு துணை போகும் சுயத்துடன்தான் அங்கு இணைந்திருந்தீர்களா? மனச்சாட்சி கொண்ட எந்த ஒரு கலைஞனும் இலக்கியவாதியும் விடுதலைப் புலிகளின் அரசியலிலிருந்து வேறுபடலாமேயன்றி, மக்களுக்கான விடுதலை அரசியலிலிருந்து விடுபடுவது அல்ல.



இன்றைய இலங்கைச் சூழலில், எந்த இதழியலாளரும், அறிவுத் துறைச் செயற்பாட்டாளரும் சுயமாக எழுதினால், விமரிசித்தால், அரசிடமிருந்து அல்லது அதன் ஏவலாட்களிடமிருந்து அச்சுறுத்தல் வருகிறது.



“ராசபக்ஷே, ஊடக நிறுவனங்களின் உரிமையாளர்களை அலரி மாளிகைக்கு அழைத்து, நீங்கள் ராணுவத்தினருடன் மோதி பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டால் அதனை என்னால் தீர்க்க முடியாது என பொறுப்பற்றவகையில் அச்சுறுத்தியிருந்தார்?”



கூட்டுக் கொலையாளியான முன்னாள் ராணுவ ஜெனரல் பொன்சேகா, இப்போது கூறுகிறார். இதே கதிதானே அங்கு அறிவுத்துறைச் செயற்பாட்டாளருக்கும் தற்போதும் நிகழ்ந்து கொண்டுளது.



இத்தகைய அச்சுறுத்தலின் சிறு காற்றும் படாத பெரும்பயன், நம் கொழும்பில் கூடிய இலக்கியவாதிகளுக்கு கிட்டியுள்ளது. ஜீவகுமாரனின் பின்வரும் வார்த்தைகளிலேயே பேசலாம் “கருத்துச் சுதந்திரமும், பத்திரிகை சுதந்திரமும் இல்லாமை நிலவிய அல்லது நிலவும் நாட்டில் இவ்வாறான இலக்கியங்கள்தான் தோன்ற முடியும். இதையும் தாண்டி இலக்கியம்படைக்க முற்பட்டோரின் இலக்கியங்கள்தான் வாழுகின்றன. ஆனால் இலக்கியவாதிகள் இலக்கியவாதிகளாக இல்லை என்பதே வேதனையான விடையமாகும்”



கிரேக்க அறிஞன் சாக்ரடீஸ் நஞ்சு அருந்திச் சாகவேண்டும் என்று தீர்ப்புக் கூறப்பட்டது. தீர்ப்பைச் சொன்ன நீதிபதிகள் அவரிடம், “உனது கருத்துக்களைக் திரும்பப்பெற்று உயிரைக் காப்பாற்றிக் கொள்ளப் போகிறாயா? அல்லது உயிரைவிட்டு கருத்துக்களைக் காக்கப் போகிறாயா?” எனக் கேட்டார்கள். சாக்ரடீஸின் மனைவி, நண்பர்கள் உட்பட கருத்தைத் திரும்பப் பெற்று உயிரைக் காத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறார்கள். நீதிபதிகளைப் பார்த்து சாக்ரடீஸ் சொன்னார், “என்னைப் புதைத்து என் கருதத்தை வாழவிடுவதா அல்லது என் கருத்தைப் புதைத்து என்னை வாழவிடுவதா என்று கேட்கிறீர்கள். உங்களின் கேள்விக்கு என்பதில் - என்னைப் புதையுங்கள்; என் கருத்து வாழட்டும்”




கொழும்புவாழ் தமிழ் அறிஞர்களே, பாரதிவிழாவிலும், உலகத்தமிழ் இலக்கிய மாநாட்டிலும் பங்கேற்க சென்ற தமிழ்ப் புலமைகளே, யாரைப் புதைத்து, யாரை வாழச் செய்யப்போகிறீர்கள்? கொழும்பையா? பாரதியையா?



- பா.செயப்பிரகாசம்

thanks for- keetru.com


Read more...

வெள்ளி, 8 ஜூன், 2012

மானா எனும் ஆளுமை

மானா மக்கீன் அவர்களுக்கு 75 வயதா? நம்பவே முடியவில்லை, இன்னும் ஒரு துடிப்பான வாலிபனைப் போல இயங்கும் அவரது சுறுப்பு ஓடும்  நதியைப்போல சதா இயங்கிக் கொண்டிருக்கும் அவரது வேகம் அவர் கலை மேல் கொண்ட காதலை ஞாபக படுத்துகிறது..
 
லைட் ரீடிங் என்ற ஞாயிறு தினகரன் பல்சுவை பகுதி ஒன்றின் மூலமே மானா மக்கீன் அவர்கள் எனக்கு அறிமுகம், 1992 களில் லைட் ரீடிங் வெகு பிரபல்யம் எனது ஒரு தொகுப்பும் அதில் இடம்பெற்றுள்ளது..அதன் பின்னர் மானா மக்கீன் அவர்களின் ஆளுமைபற்றி பலர் சொல்ல கேட்டிருக்கின்றேன்...
 
நாடக நடிகராக..
நாடக எழுத்தாளராக
பத்தி எழுத்தாளராக
பயணக்கட்டுரை எழுதுபவராக
ஒரு ஆய்வாளனாக..
சிறுகதைப் படைப்பாளியாக..
 
பல ஆளுமைகளை தன்னகத்தே கொண்டு வெகு லாவகமாக தன்னை நிரூபித்துக்கொண்டிருக்கிறார் திரு மானா மக்கீன் அவர்கள், அவருக்கும் எனக்கும் சில முரண்பாடுகள் இருந்தது ஆனால் அவை எதனையும் மனதில்  வைத்துக் கொள்ளாமல் எனது தாயின் மரணத்தின் போது அவரின் அனுதாபத்தை தெரிவித்ததானது அவரது பெருந்தன்மையை கோடிட்டு காட்டியது..
 
எப்படியோ..75 வது அகவையை அடைந்துள்ள பவள விழா நாயகனான திரு மானா அவர்களை அனுராதபுர கலை இலக்கிய வட்டம் சார்பில் வாழ்த்துகிறோம், அவரது இலக்கியப் பணி மேலும் தொடரட்டும்.

Read more...

திங்கள், 28 மே, 2012

நீண்ட பாலத்தின் நினைவுகள்.கிண்ணியா பயணம்.

கவிஞர்களான நஸ்புல்லாஹ், மற்றும் கவிஞர் ஏ.எம்.எம்.அலி.

கிண்ணியா இலக்கியப் பயணமானது மிக அலாதியானது , யாத்ராவை மீளறிமுகம் செய்யும் நோக்கமே பிரதானமாக அந்த பயணத்தின் அடிப்படையாக இருந்ததது, எனது மிக நீண்ட நாள் கனவுகளில் ஒன்று கிண்ணியா செல்ல வேண்டு மென்பது, ஏலவே கிண்ணியா நஸ்புல்லாஹ், மற்றும் கிண்ணியா சபருல்லாஹ் ஆகிய இருவரும் எனது நண்பர்களாக இருந்தார்கள் சமீப காலமாக இன்னும் பல இலக்கிய நண்பர்கள் எனக்கு புதிதாக உருவாகி இருந்தார்கள்.


எனது வகுப்பு தோழர்களான நளீம் ஆசிரியர் மற்றும் பிரபலமான விஞ்ஞான ஆசிரியரான கிபாரி ஆகியோரை சந்திக்க வேண்டும் என்ற அவா? இப்படி பல எதிர்பார்ப்புகளுடன் எங்கள் கிண்ணியா பயணம் ஆரம்பமானது நானும் எனது மாமாவின் மகன் நுஸ்கானும் நாச்சியாதீவில் இருந்து மோட்டார் சைக்களில் சென்றோம், அஸ்ரப் சிஹாப்தீன் குடும்பத்தினருடன் அவரது காரில் வந்திருந்தார்.



கிண்ணியாவில் முதலாவது பாரூக் சேரின் மகன் பதீசின் வீட்டுக்கு சென்றோம், பகல் சாப்பாட்டு வேளை பதீசின் சகோதரி பிர்தொவ்சியா ஆசிரியையின் வீட்டில் பகலுனது, கடல் மீன் நாவுக்கு மிக ருசியாக இருந்தது, அன்று மாலை கடற்கரை ஓரத்தில் இலக்கிய ஒன்று கூடல், மூத்த கவிஞர் கிண்ணியா ஏ,எம்,ஏ, அலி தலைமையில் இடம்பெற்றது,

சுமார் பதினைந்துக்கும் அதிகமான கவிஞர்கள் அதில் கலந்து கொண்டனர் இளைய மூத்த கவிஞர்கள் என ஒவ்வொருவரும் தனதான இலக்கிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர், அதில் கலைக்காதலன் சத்தார் என்ற கவிஞரின் கருத்துக்களில் சில வித்தியாசம் தொனித்தது பின்நவீனத்துவம் பற்றிய கதையாடல்கள் இப்போதுகளில் பேசப்பட்டுக்கொண்டிருக்க அவர் இலகு நவீனத்துவம் என்ற பதம் பற்றி சொல்ல முனைந்தார் எதிர் காலத்தில் அப்படி ஒரு பதம் உபயோகிக்க படலாம்.

கவிஞர்கள் பலரும் தமது கருத்துக்களை முன் வைத்தனர், யாத்ராவின் ஆசிரியர் அஸ்ரப் சிஹாப்தீன் தனது கருத்துக்களை முன் வைத்தார்,




கிண்ணியா கடற்கரையோர ஒன்று கூடலில் கலந்து கொண்ட ஒரு பகுதியினர்.


மகரிபு தொழுகையின் பின்னர் கவிஞர் எம்.ரி சாஜாதின் வீட்டில் சிற்றுண்டி ஏற்பாடு செய்திருந்தார், இரவுச் சாப்பாடு கவிஞர் பாயிஸா அலியின் வீட்டில். அன்றே இரவோடு இரவாக நாங்கள் மூதூருக்கும் சென்று வந்தோம் மூதூர் முஹைதீன் அவர்களையும், வரால் மீன்கள் தந்த அமானுல்லாவையும் சந்திப்பதாக இருந்தோம் ஆனால் மூதூர் மொஹிதீன் அவர்களை மட்டுமே சந்திக்க கிடைத்தது..


அன்றிரவு நாங்கள் நண்பர் பதீசின் வீட்டில் தங்கி விட, அஸ்ரப் சிஹாப்தீன் குடும்பத்தினர் கவிஞர் பாயிஷா அலியின் வீட்டில் தங்கி விட்டனர்.



மறுநாள் காலை அஸ்ரப் சிஹாப்தீன் குடும்பத்தினர் வெள்ளை மணலாறு செல்ல, நான் கின்னியாவிலையே தங்கி விட்டேன், காலையிலேயே கவிஞர் அக்பர் அலி அவர்களின் வீட்டுக்கு சென்றோம் எம்மோடு நண்பர் மீள்பார்வை நாசிக் மஜீத் இணைந்து கொண்டார், பதிஸ் எம்முடனேயே இருந்தார், கவிஞர் நஸ்புல்லாஹ் எமக்காக அன்று விடு முறை எடுத்து எம்முடனே தங்கியிருந்தார்,.

பதிசின் வீட்டிலிருந்து வெளியேறும் போது நண்பர் நியாசின் வீட்டுக்கும் சென்று வந்தோம் நண்பர் நியாஸ் புத்தளம் நீதிமன்றத்தில் வேலை செய்கிறார், நல்ல இலக்கிய ரசனை உள்ளவர், நிறைய தகவல்களை பகிர்ந்து கொண்டார் அதன் பின்னரே நாங்கள் கவிஞர் அலி அக்பரின் வீட்டுக்கு சென்றோம்..

அங்கிருந்து நண்பர் நாசிக் மஜீத்தின் வீட்டுக்கு சென்றோம், அங்கெ கவிஞர் ஏ.எம்.ஏ. அலி, உட்பட பலர் அங்கு கூடி விட்டனர்.

ஏலவே நான் நண்பர் பதீசிடம் எனது வகுப்பு நண்பர் நளீமையும், கிபாரியையும் பற்றி கூறியிருந்தேன். நண்பர் பதீஸ் உடனடியாக கிபாரியை அங்கே வரவழைத்து விட்டார், நண்பர் கிபாரியுடன் நளீமின் வீட்டுக்கு சென்று வந்தோம்.

அன்றைய ஜும்மா தொழுகையை வெள்ளை மணலாறில் தொழுது விட்டு எழுத்தாளர் அஸ்ரப் சிஹாப்தீன் அவர்களின் உறவினர் ஒருவரின் வீட்டில் பகலுணவை..உண்டோம், சாப்பாட்டின் பின்னர் அஸ்ரப் சிஹாதீன் குடும்பத்தினர் கன்னியா நீர் ஊற்று பார்க்கச்சென்று விட்டார்கள், நானும் பதீசும் எழுத்தாளர் நந்தினி செர்வியரை பார்க்க சென்றோம், அங்கே நண்பி முபீதா அவரது கணவருடன் வந்து எங்களை சந்தித்தார்


கவிஞர் கஹ்ஹார் மற்றும் கிண்ணியா அலி ஆகியோருடன் நாச்சியாதீவு பர்வீன்.

அங்கே மாபெரும் கவிஞர் கஹ்ஹார் அவர்களை சந்திக்கின்ற வாய்ப்பு கிடைத்தது இரவு ஒன்பது மணி மட்டுக்கும் எங்கள் இலக்கிய அரட்டை தொடர்ந்தது..பின்னர் கிண்ணியா நஸ்புல்லாஹ் வீட்டில் இரவுச்சாப்பாடு
நண்பர் நளீமின் வீட்டில் இரவுத்தங்கல்..அடுத்த நாள் காலையிலேயே நண்பர் கவிஞர் கிண்ணிய அசீஸ் அவர்களை சந்தித்து விட்டு கிண்ணியாவிலிருந்து விடை பெற்றோம் ஒரே ஒரு குறையுடன் ....அது தான் நண்பர் சபருல்லவை சந்திக்க முடியவில்லை அப்போது அவர் உம்ராவுக்கு சென்றிருந்தார்.

நண்பர் பதீசுடன்..


எம்மோடு இணைந்திருந்து எம் கிண்ணியா பயணத்தை இனிக்க வைத்த நண்பர்களான அனைவருக்கும் குறிப்பாக நண்பர் கவிஞர் பெரோஸ்கான் மற்றும் பதீஸ் ஆகிய இருவருக்கும். எமது நன்றிகள்.









Read more...

ஞாயிறு, 6 மே, 2012

REAL HERO

நாச்சியாதீவு பிரதேச செயலாளர் கித்சிறி , எழுத்தாளர் நாச்சியாதீவு பர்வீன். ஹிதோகம போலிஸ் பொறுப்பதிகாரி IP கஸ்தூரி,. ஆராய்ச்சி.ஆகியோருடன் நாச்சியாதீவு முஸ்லிம் மக்கள்

சிங்கள முஸ்லிம் தமிழ் என்ற மூவின மக்களும் இந்த நாட்டின் சொந்தக்காரர்கள் அவர்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, அவரவர் மதங்களையும் கலாச்சாரங்களையும் அடுத்தவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பின் பற்ற வேண்டும் நாம் எல்லோரும் இந்த சின்ன நாட்டின் மக்கள், வாழப்போகும் சிறுது காலத்தில் இன மத பேதங்களை மறந்து நாம் வாழ்வதன் மூலம் நிம்மதியான எதிர்காலத்தை நமது அடுத்த பரம்பரைக்கு ஏற்படுத்தி கொடுக்க முடியும், என்ற ஹிதோகம போலிஸ் பொறுப்பதிகாரி IP கஸ்தூரி ஆராய்ச்சி கருத்து தெரிவித்தார் கடந்த 5 /5 /2012 சனியன்று ஹிதோகம பொலிசாரும் நாச்சியாதீவு முஸ்லிம் மக்களும் இணைந்து நடாத்திய வெசாக் தின தன்சலையின் போது இவ்வாறான கருத்தை அவர் தெரிவித்தார்.





ஹிதோகம போலிஸ் பொறுப்பதிகாரி IP கஸ்தூரி ஆராய்ச்சி

இவ்வாறான அதிகாரிகள் தான் ஒவ்வொரு பொலிஸ் நிலையத்திட்க்கும் தேவை, கடந்த காலங்களில் ஹிதோகம பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிகளாக இருந்தவர்கள் இலஞ்சத்தையும் ஊழலையும் வெகுவாக செய்து வந்தனர் அனுராதபுர மாவட்டத்திலேயே மிகக் கேவலமான ஒரு பொலிஸ் நிலையமாக இருந்த இந்த பொலிஸ் நிலையத்தை திரு கஸ்தூரி ஆராய்ச்சி அவர்கள் முன்மாதி பொலிஸ் நிலையமாக மாற்றிக்காட்டி உள்ளார்.எல்லா இன மக்களையும் மதிக்கின்ற உயர்ந்த பண்பு பாராட்டப்பட வேண்டியது.







பவுத்த, முஸ்லிம் மத குருமார்களுடன்,நாச்சியாதீவு பிரதேச செயலாளர் கித்சிறி , எழுத்தாளர் நாச்சியாதீவு பர்வீன், நாச்சியாதீவு முஸ்லிம் ஜூம்மா பள்ளி நிருவாக சபை தலைவர் எச்.எம்.இஸ்மாயில்.ஆகியோருடன் நாச்சியாதீவு முஸ்லிம் மக்கள்.மற்றும் பிரதேச சிங்கள மக்கள்.


நாட்டு நிலைமை தலை கீழாக சென்று கொண்டிருக்க நிரந்தரமான அமைதிக்காகவும், சுபீட்சமான நல்வாழ்வுக்காகவும் பொலிஸ் உங்கள் நண்பன் என்ற பதத்தை நூறு விகிதம் செய்து காட்டும் இந்த பொலிஸ் அதிகாரி REAL HERO தான், நீதி சட்ட ஒழுங்கை பாதுகாப்பதில் முன் நிற்க்கும் இவர் குடு கஞ்சா கள்ள சாராயம் போன்ற வற்றை விற்பவர்களுக்கும், அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் கமே அரசியல்வாதிகளுக்கும் சிம்ம சொப்பனமாகிப் போனார் இந்த REAL HERO . (பட உதவி- ஏ.ஆர்.எம்.ரபியுதீன்,நண்பர் நஸ்வர்)

Read more...

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by