Related Posts with Thumbnails

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

மகளுக்கொரு தாலாட்டு...!

காலைப் பொழுதின்
பனித்துளியாக
கண்மணி வந்தாய்
கருவழியாக....


பிஞ்சுக் காலால்
எட்டி உதைந்து
காலக்கதவின்
பூட்டைததிறந்தாய்...

மெல்ல மலரும்
ரோஜா இதழாய்..
கண்கள் திறந்தாய்
பூவைப் போல

நீ கண்கள் திறந்து
வருடம் ஒன்றாம்..
மெய்தான் மரியம்
உனக்கு வயது ஒன்று

உம்மா உம்மா ....
உன் இனிக்கும் மொழிகள்
வாப்பா என்றழைக்கும்.
வசந்த வார்த்தை

என்றும் அழுக்கா..
உன் மழலை மொழியில்
வழுக்கி விழுந்து
பரவசம் அடையும்..
இன்பம் தந்தாய்
இனிய மகளே.

நஸ்மி என்ற
நறுமலர் தந்த..
பாசப் பூவே
வருடம் ஒன்றில்
காலை வைத்து..
எட்டி நடக்க
எத்தனிக்கும்
எந்தன் மகளே..
நாளும் உனக்காய்
வாழ்த்துப்பாடும்
இந்த தந்தை நெஞ்சு..

23 /05 / 2010 முதலாவது பிறந்த தினத்தை கொண்டாடும் மகள் பாத்திமா மரியத்திட்க்கு

நாச்சியாதீவு பர்வீன். இலங்கை.

3 கருத்துகள்:

வித்யாசாகரின் எழுத்துப் பயணம் 20 ஏப்ரல், 2010 அன்று AM 4:51  

ஒரு குழந்தைக்கு பாடும் தாலாட்டை கூட, சிந்தை குளிர கேட்கப் பாடும் தமிழர் பண்பு மறவாது, தங்கள் மகளின் பிறந்த தின வாழ்த்திற்கு கவியெழுதி வாழ்த்தியுள்ள தங்களுக்கு பாராட்டுக்களும்; இத்தனை அன்பிற்குறிய அந்த அன்புக் குழந்தைக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்களும், ஆசியும் உண்டாகட்டும். .

பர்வின் என்று பெயர் கண்டதால் தோழியென்றுணர்ந்தேன். தோழர் என திருத்திக் கொள்கிறேன்.

தங்கள் வலைக்கு 'நாச்சியா தீவு பர்வின் பக்கம்' என்று சூட்டியதை காட்டிலும் 'பர்வினின் கவிதை பூங்கா' என்று வைத்திருக்கலாம் போல். அத்தனை அழகான தளம். வார்த்தைகளால் உணர்வுகளால் இதயம் நனைக்கும் கவிதைகளும், சமூக அவலத்திற்கு சவுக்கடி சொடுக்கும் முயற்சியாகவும் தங்களின் எழுத்துப் பணி நெஞ்சில் நீண்ட இடம் கொள்கிறது.

தங்களின் இந்த கீழ்வரும் கவிதை வாழ்தலின் ஆதாரக் கவிதை எனலாம்.

<>

திருத்த வேண்டிய சில எழுத்துப் பிழைகளும், வரிசை அமைப்பும் கூடுதல் பலம் சேர்க்கலாம். தொடருங்கள் மெல்ல காலூன்றி எழுந்து நிற்க முயன்றவர்களுக்கு; எட்டி வானத்திற்கு மேல் தொடுவதொன்றும் அத்தனை கடினமான சவாலல்ல.

வெல்வீர்கள்; வாழ்த்துக்கள்!

வித்யாசாகர்
குவைத்

நாச்சியாதீவு பர்வீன். 20 ஏப்ரல், 2010 அன்று PM 10:30  

நன்றி வித்யாசாகர்! உங்களின் விமர்சனமும் கருத்துக்களும் மெச்சத்தக்கவை
எழுத்துப்பிழைகளை எத்துனை முயற்சித்தும் சிலபொழுதுகளில் தவிர்க்க முடிவதில்லை, இருந்தும் பிழை பிழைதான். உங்கள் வருகைக்கும்
வார்த்தைக்கும் நன்றிகள்.

வித்யாசாகரின் எழுத்துப் பயணம் 21 ஏப்ரல், 2010 அன்று AM 12:17  

மிக்க நல்லது தோழரே. உணர்வு வருடும் கவிதைகளில் தவறுகள் மறைந்து தான் போகிறது. நமக்கே அது பிறகு படிக்கையில் தெரிய வருகிறது. தவிர, கணினியில் செய்யும் தமிழ் தட்டச்சினாலும் பிழைகள் ஏற்படுகின்றன. பார்வையை மறைத்தும் விடுகின்றன. நம் வலையிலும் (www.vidhyasaagar.com) நிறைய ஆங்காங்கே பிழைகள் உண்டு. நண்பர்கள் வருகையில் கூறுகிறார்கள் பின், சரி பார்த்து திருத்திக் கொள்கிறேன்.

தவறுகள் நிகழ்வது இயல்பு; திருத்திக் கொள்வதே மனிதத்துவம் என எண்ணுகிறேன். என் எண்ணத்தையே தங்களுக்கும் சொன்னேன். தொடருங்கள். நிறைய எழுதுங்கள். பதிவதில் தேர்ந்தெடுத்து புத்தகமாக்குங்கள். நாளைய தலைமுறைக்கு நாம் கிடைக்க மாட்டோம், படைப்பு; நம் சுவடாக இருக்கும்!

மீண்டும் வாழ்த்துக்கள் இனிய தோழரே!

வித்யாசாகர்!

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by