Related Posts with Thumbnails

ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

கட்டுரை




ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் .அஷ்ரப் அவர்களின் 19 வது நினைவு தினத்தை முன்னிட்டு இந்த கட்டுரை வெளியிடப்படுகின்றது

தனித்துவ கட்சிமீதான அஷ்ரபின் தணியாத தாகம்

- நாச்சியாதீவு பர்வீன்.

இலங்கை அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத அரசியல் கூறாக முஸ்லிம் அரசியலை கொள்ள முடியும்.  பெரும் தேசியக்கட்சிகளின் ஆதரவுத்தளத்தில் நின்று செயற்பட்டு வந்த முஸ்லிம் சமூகம் ஒருகட்டத்தில் இன்னொரு சிறுபான்மை சமூகமான தமிழ் சமூகத்தின் அரசியல் பங்காளிகளாக செயற்பட்டு வந்தன. ஆனால் பெருந்தேசிய கட்சிகள் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றியது போலவே தமிழர்கள் சார்ந்த கட்சியும் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றியது. இதனால் விரக்தியுற்ற முஸ்லிம் தலைமைகளின் மாற்றுத்தீர்மானம்தான் முஸ்லிம்களுக்கான தனிக்கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் தனித்துவமான கட்சி உருவாகியது.
ஆரம்பகாலத்தில் சமூதாய சிற்பிகளாக  செயற்பட்ட அறிஞர் சித்திலெப்பை, ரி.பி.ஜாயா, சேர்.ராசிக் பரீட் , டாக்டர் பதியுதீன் மஹ்மூத் போன்றவர்கள் தம்மாலான சமூக பணிகளை மேற்கொண்டாலும் அது முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்கான பரிபூரண தளத்தை உண்டுபண்ணவில்லை. அவர்களது காலத்தில் தனியான முஸ்லிம் கட்சி ஒன்றின் தேவைப்பாடு தொடர்பில் சிந்தனைகள் எழுவதற்கு ஆணித்தரமான காரணங்கள் எதுவும் இருக்கவில்லை ஆனால் பிற்காலத்தில் அது உணரப்பட்டது. அவர்களின் பின்னர் பாராளுமன்றத்தினை பிரதிநிதிப்படுத்திய முஸ்லிம்களினால் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அடைவுகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே முஸ்லிம் சமூகத்தினை ஒன்றிணைத்து பலமான அரசியல் சக்தியாக அதனை மாற்றவேண்டிய தேவை உணரப்பட்டது. அந்த தேவையை நிறைவேற்றும் சக்தியாக அஷ்ரப் தன்னை உருவாக்கிக் கொண்டார்.

1980 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தோற்றமானது வெறுமனே எழுந்தகமாக எடுக்கப்பட்ட முடிவு கிடையாது. அஷ்ரப் எனும் அரசியல் மேதையின் தூர சிந்தனையின் வெளிப்பாடாகவே அது அமைந்தது. அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் தனித்துவமான குரலாக இருக்கவேண்டும் என்ற பேரவாவின் அடையாளமாகவே இந்த கட்சி தோற்றம் பெற்றது.       எல்லா நிலையிலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகமாக முஸ்லிம் சமூகம் இருப்பதை கண்டு மர்ஹூம் அஷ்ரப் மனம் வெதும்பினார். முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்றவர்கள் தாம் சார்ந்த கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருந்தனர் . அதனால் அவர்களால் தமது சமூகம் தொடர்பில் வாய்திறக்க முடியாத நிலை இருந்தது. அத்தோடு  குறுகிய அரசியல் காரணங்களை அடிப்படையாக வைத்து அவ்வப்போது  உருவாகிய பல முஸ்லிம் கட்சிகள் அடையாளமற்று காணாமல் போயின. இந்நிலையில் பலத்த போராட்டங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போது நீண்ட நெடுமரமாக கிளைவிட்டு செழித்து வளர்ந்துள்ளமை அஷ்ரப் அவர்களின் தூய எண்ணத்தின் அடையாளமே. 

இலங்கை அரசியல் வரலாற்றை  எழுதுகின்ற எவரும் இனிமேல் அஷ்ரபுக்கு முந்திய அரசியல் வரலாறு, அஷ்ரபுக்கு பின்னரான வரலாறு என்று பிரித்தே எழுத வேண்டும். அந்தளவுக்கு இலங்கை அரசியல் வரலாற்றில் மர்ஹூம் அஷ்ரப்  அவர்களின் காத்திரமான பங்களிப்பும்,சடுதியான முடிவுகளும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின. ஒரு காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகள் வெறும் செல்லாக்காசுகளாகவே பயன்படுத்தப்பட்டன. ஆனால் அஷ்ரப் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை நிறுவி அதன் மூலம் கிடைக்கப்பெற்ற அரசியல் அதிகாரத்தின் பயனாக  ஆட்சியை மாற்றுகின்ற அல்லது தீர்மானிக்கின்ற சக்தியாக  முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சக்தியாக நிறுவிக்காட்டினார்.

சட்டக்கல்லூரி மாணவனாக இருந்த காலத்திலேயே முஸ்லிம் சமூகம் தொடர்பில் கரிசனையும்,அக்கறையும் மர்ஹூம் அஷ்ரப் அவர்களிடத்தில் மேலோங்கி காணப்பட்டது. அதன்விளைவாக வெவ்வேறான அரசியல் கட்சிகளுடன் அவர் பயணித்தார். ஆனால் முஸ்லிம் சமூகத்தின்  உரிமைகளை பெற்றுக்கொள்வதிலும், அதன் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்வதிலும் ஏற்பட்ட தேக்க நிலையே அஷ்ரப் அவர்களின் தனித்துவமான அரசியல் கட்சிக்கு வழிவகுத்தது எனலாம். பெருந்தேசிய கட்சிகளின் நிழலில் பயணித்த முஸ்லிம் அரசியல் தளம் அஷ்ரபின் முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கத்தின் பின்னர் அதனை சுற்றி நகரத்தொடங்கியது. இதனால் பெரும் தேசிய கட்சிகளில் அங்கம் வகித்த முஸ்லிம் பிரதிநிதிகள் அஷ்ரப்பை வெகுவாக எதிர்த்தார்கள். அதற்க்கான காரணம் அஷ்ரப் அவர்களின் தனிக்கட்சி தமது வாக்கு வங்கிகளில் பலத்த பின்னடைவை உண்டு பண்ணும் என்பதனை அவர்கள் உணர்ந்தார்கள்.
முஸ்லிம் சமூகத்தின் வாக்குப்பலத்தின் பெறுமானத்தை மூலதனமாக்கி பேரம் பேசுகின்ற சக்தியாக அஷ்ரப் உருவெடுத்திருந்தார். அஷ்ரபின் இந்த தார்மீக போராட்டத்தில் மக்கள் கவர்ந்திழுக்கப்பட்டார்கள்.இதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கான மவுசு நாளுக்குநாள் அதிகரித்தது. 1985 ஆம் ஆண்டு தலைவர் அஷ்ரப் கட்சிப்பணிகளில் சற்று ஓய்வுடன் இருந்தார் ஆனால் 1986ஆம் ஆண்டு பாஷா விலாவில் நடைபெற்ற கட்சியின் 6வது தேசிய மாநாட்டில் போராளிகள் மற்றும் புத்திஜீவிகளின் ஆதரவினை கண்டு மீண்டும் புத்துணர்ச்சி பெற்று கட்சியை மேலும் விரிவாக்கம் செய்யும் வேலையில் ஈடுபட்டார்.

முஸ்லிம் காங்கிரஸ் சில முக்கிய கோரிக்கைகளை முன்னிறுத்தி செயற்பட்டது. அதிலும் அபிவிருத்தி அரசியலை விடவும் சமூகத்தின் உரிமையை பெற்றுக்கொடுப்பதிலும் அதனை பாதுகாப்பதிலும் உறுதியாக நின்றது. இலங்கை முஸ்லிம்கள் தனித்துவமிக்க ஒருதேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே அதன் தாரக மந்திரமாக இருந்தது. சிங்களவர்களையும்  , தமிழர்களை போல முஸ்லிம்களும் ஒரு தேசிய இனமாக அங்கீகரிப்பதோடு இனரீதியாக அதிகாரபரவலாக்கத்தில் முஸ்லிம்களுக்கான தனியலகுக்கோரிக்கை கருத்தில் கொள்ளப்படவேண்டும் என்பதில் உறுதியாக அஷ்ரப் இருந்தார். அத்தோடு முஸ்லிம்களின் தனித்துவமான சட்டமான ஷரிஆ சட்டத்தை மாற்றும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என்று உறுதியாக குரல் எழுப்பியது முஸ்லிம் காங்கிரஸ். அஷ்ரபின் உரிமை சார்ந்த கோஷங்கள் முஸ்லிம்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றன.
1987 ஆம் ஆண்டு பிரதேச சபைத்தேர்தல் நியமனப்பத்திரம் தாக்கல் செய்கின்ற போது முஸ்லிம் காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை. இருந்தும் மு.கா சுயேற்சையாக கிழக்கில் களமிறங்கியது. அந்த தேர்தலை பகிஷ்கரிக்குமாறு விடுதலைப்புலிகள் அனைத்து தரப்பினருக்கும் அச்சுறுத்தல் விடுத்தனர் அன்றைய ஆளும்தரப்பே இந்த அச்சுறுத்தலினால் ஆடிப்போயிருந்த போது தலைவர் அஷ்ரப் அவர்கள் தமது ஆதரவாளர்களுடன் கொழும்புக்கு சென்று அந்த தேர்தலுக்கு முகம் கொடுக்க தயாரானார். இதில் சில முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் உயிருக்கு பயந்து தாமாகவே விலகிக்கொண்டார்கள். ஆனால் எவ்விதமான உயிராபத்தையும் எதிர்கொள்ள குறிப்பிட்ட சிலர் பெருந்தலைவர் அஷ்ரபுக்கு துணையாக இருந்தனர். மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் இந்த துணிச்சலான முடிவு தேசியத்தில் பிரசித்தமாக பேசப்பட்டது. எல்லா ஊடகங்களும் தலைவர் அஷ்ரபை மையப்படுத்தியே செய்திகளை வெளியிட்டன. அன்றைய தினத்திலிருந்து முஸ்லிம்கள் மத்தியில் புகழ் மிக்க ஒரு தலைமையாக அஷ்ரப் அவர்கள் நோக்கப்பட்டார்கள்.

1988 ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி தேர்தல் ஆணையாளரினால் அங்கீகரிக்கப்பட்டு முழுநேர அரசியல் கட்சியாக பரிணமித்தது. 1988 ஆம் ஆண்டு மாகாண சபைத்தேர்தலில் வடகிழக்கு வெளியே பிரசித்தம் பெற்ற ஒரு முஸ்லிம் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விளங்கியது. அவ்வாறே இணைந்த வடகிழக்கு மாகாண சபைத்தேர்தலில் 17 ஆசனங்களை முஸ்லிம் காங்கிரஸ் பெற்று இலங்கை அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு கட்சியாக தன்னை நிரூபித்தது. 1989 ஆம் ஆண்டு அஷ்ரப் அவர்கள் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற பிரதிநியாக தெரிவு செய்யப்பட்டார். தனது பாராளுமன்ற கன்னியுரையில் முஸ்லிம் சமூகத்திற்கான தனித்துவமான ஒரு கட்சியின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். 12.5 % விகிதமாக இருந்த பிரதிநிதித்துவ அரசியல் விதியை சிறிய கட்சிகளுக்கு இலகுவில் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளும் வகையில்  5% வெட்டுப்புள்ளியாக மாற்றியது அஷ்ரபின் அரசியல் அதிகாரத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட பெரும் வெற்றியாகும். இதன் பிரதிபலனை தற்போது சிறிய கட்சிகள் பலவும் அனுபவிக்கின்றன. மக்கள் விடுதலை முன்னணி  உட்பட என்பது வரலாற்றுப்பதிவாகும்.

மிகச்சிறந்த இலக்கிய வாதியாகவும், எழுத்தாளராகவும்,மேடைப்பேச்சாளராகவும் இருந்த பெருந்தலைவர் அஷ்ரப் தமது கொள்கைகளை மக்கள் மயப்படுத்தும் ஊடகமாக இவற்றை பயன்படுத்தினார். இதனால் இலகுவில் அஷ்ரபின் கொள்கைகள் பாமர மக்களையும் சென்றடைந்தது எனலாம். கட்சிக்கான எழுச்சிப்பாடல்கள்,வீரியமிக்க புரட்சிக்கவிதைகள், உணர்வுபூர்வமான மேடைப்பேச்சுக்கள் என மக்களை கவருகின்ற சகல யுக்திகளும் தலைவர் அஷ்ரப்பிடம் இருந்தன. இதனால் அன்று கோலோச்சிய முஸ்லிம் இலக்கிய வாதிகள் அஷ்ரபை நேசித்தார்கள். அவரின் புகழ் பாடினார்கள் அவரின் அறப்போராட்டத்தில் தங்களையும் இணைத்து இந்த கட்சியின் பங்காளிகளாக தம்மை மாற்றிக்கொண்டார்கள்.

1994 ஆம் ஆண்டு அஷ்ரப் மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு முழு அமைச்சராகின்றார். மு.காவின் வெற்றிக்காக கிடைத்த தேசியப்பட்டியலை  இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைமை ரவூப் ஹக்கீமுக்கு வழங்கி அவர் குழுக்களின் பிரதித்தலைவராக வருவதற்கு வழிசமைத்து கொடுக்கிறார் மர்ஹூம் அஷ்ரப். ரவூப் ஹக்கீம் என்ற இந்த ஆளுமையின் வீரியத்தை அன்றே அஷ்ரப் அவர்கள் அறிந்தமையும் தனக்கு பின்னால் ஒரு தலைமையை அடையாளப்படுத்தியுமே ரவூப் ஹக்கீமுக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்டதாக அஷ்ரப் அவர்களின் மரணத்தின் பின்னர் பேசப்பட்டது. அது உண்மையும் கூட. 1989 ஆம் ஆண்டு தனிமரமாக பாராளுமன்றம் சென்ற அஷ்ரப் 1994 ஆம் ஆண்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசனங்களுடன் பாராளுமன்றத்தினுள் நுழைந்தார்.
உரிமை கோஷங்களை மூலதனமாக வைத்து இயங்கிவந்த அஷ்ரப் அவர்களின் அரசியல் வியூகம் 1994 ஆம் ஆண்டின் பின்னர் உரிமை சார்ந்த விடயங்களோடு அபிவிருத்தியின் பக்கமும் தனது பார்வையை செலுத்தியது. ஏராளமான தொழில் வாய்ப்புக்கள், அபிவிருத்தி திட்டங்கள், சமூகம் தொடர்பிலான பல கோரிக்கைகள் என்று தனக்கு கிடைத்த வாய்ப்பினை மிகவும் சமயோசிதமாக பயன்படுத்தி பாரிய அபிவிருத்தியை மேற்கொண்டார். இதனால் பெரும்பான்மை அரசியல் சக்திகள் அஷ்ரபிமீது பொறாமை கொண்டனர். அஷ்ரபை  வீழ்த்த பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டனர். அவர்களின் சூழ்ச்சிகள் எதுவும் பழிக்கவில்லை மாறாக அஷ்ரப் தொட்டதெல்லாம் பொன்னாக மாறியது அவரை விமர்சித்தவர்கள், அவர்மீது பொறாமை கொண்டு வீண்பழி சுமத்தியவர்கள்,அவரை ஒரு இனவாதியாக சித்தரித்தவர்கள் எல்லோரும் ஒரு கட்டத்தில் ஓய்ந்து போயினர் அஷ்ரப் தனது பணியில் காட்டாறு போல வேகமாக முன்னேறிக்கொண்டே போனார். அஷ்ரபின் சேவைகளில் மிக முக்கியமானவையாக கருதக்கூடிய பல சேவைகள் உள்ளன அதில் ஒலுவில் பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுகம், கல்முனை அஷ்ரப் மருத்துவமனை என்பன சிலவாகும்.

அஷ்ரப் அவர்களின் காலத்தில் துறைமுக அதிகார சபையில் பல்லாயிரம் முஸ்லிம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தும் இங்கு குறிப்பிட வேண்டிய முக்கிய விடயமாகும். அஷ்ரபின் ஏறுமுகத்தில் உள்ளூர வெந்து கொண்டிருந்த சிலரின் சூழ்ச்சியால் 2000 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு பெருந்தலைவர் அஷ்ரப் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த கொலையின் சூத்திரதாரிகள் இதுவரை அடையாளம் காணப்படாமல் மர்மமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.  அஷ்ரபின் இழப்பு முஸ்லிம் சமூகத்தை மீண்டும் அனாதைகளாக ஆக்கியது எனலாம். அஷ்ரபின் வளர்ச்சியில் வெறுப்புற்றிருந்த பலர் அஷ்ரப் அவர்களின் மரணத்தின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அழிந்து போய்விடும் என்று கனவு கண்டார்கள். பிற்காலத்தில் அவர்கள் கண்டது கனவு மட்டுமே என்பது நிரூபணமாகியது.

அஷ்ரப் விட்ட இடம்.

2000 ஆம் ஆண்டு அஷ்ரப் அவர்களின் அகால மரணத்தின் பின்னர் கட்சியின் தலைமைப்பொறுப்பானது தலைவர் ரவூப் ஹக்கீமிடம் வருகிறது. முஸ்லிம் காங்கிரசை மர்ஹூம் அஷ்ரப் விட்ட இடத்தலிருந்து தூக்கி சுமக்கின்ற தார்மீக பொறுப்பனாது அவரின் தோள்களில் சுமத்தப்படுகின்றன. தேர்தல் காலம் கிழக்கில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்தும் கிழக்குக்கு வெளியே குறிப்பாக கண்டியில் மரச்சின்னத்திலும் மு.கா களமிறங்கியது. அந்த தேர்தல் முஸ்லிம் காங்கிரசுக்கு சவால் மிக்க தேர்தலாக அமைந்தது. அதிலும் தலைவர் ரவூப் ஹக்கீமை தோற்கடித்து முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியை அழித்துவிட ஆளும் கட்சியே திட்டம் தீட்டியது. இதற்காக உட்கட்சி பூசலை உருவாக்கியது, கட்சிக்குள் இருந்தே பிளவுகளையும், முரண்பாடுகளையும் தோற்றுவித்து பிரித்தாளும் தந்திரத்தை மேற்கொண்டது. இன்னும் சொல்லப்போனால் பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களை பலவீனப்படுத்த எடுத்த முயற்சிகளைவிடவும் பலமடங்கு அழுத்தங்கள் தலைவர் ரவூப் ஹக்கீமை பலவீனப்படுத்தவும்,தோல்வியடைய செய்யவும் முன்னெடுக்கப்பட்டன.
முஸ்லிம்களின் சுமார் 10 உயிர்களை அந்த தேர்தல் காவுகொண்டது. இருந்தும் அஷ்ரபின் மரணம் தந்த மக்கள் அலை அந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரசுக்கு முன்னரைவிடவும் அதிகமான ஆசனங்களை பெற்றுக்கொடுத்தன. தலைவர் ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்டத்தில் மரச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மர்ஹூம் அஷ்ரப் அவர்களுக்கு வழங்கப்பட்ட அதே கௌரவமும்,அந்தஸ்த்தும் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கட்சி தொண்டர்களால் வழங்கப்பட்டது. கட்சியின் ஆதரவாளர்களை, தொண்டர்களை மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் போராட்ட வீரர்களாக விழித்தார். எனவே அவர்களை போராளிகளே என்று வாஞ்சையுடன் விழித்தார். பின்னர் தலைவர் ரவூப் ஹக்கீமும் அதே முறைமையை பின்பற்றினார்.

தலைவர்  ரவூப் ஹக்கீம் இந்த கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று இப்போது 19 வருடங்கள். இந்த கால எல்லையில் முஸ்லிம்களின் கட்சியான இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை பலவீனப்படுத்த பலர் முயற்சிகள் மேற்கொண்டுதான் வருகின்றார்கள். அவற்றை சாதுரியமாக எதிர்த்து கட்சியை வீழ்ச்சிப்பாதையிலிருந்து மீட்டெடுத்து இயங்கிக்கொண்டிருக்கிறார் இன்றைய தலைவர் அமைச்சர் ஹக்கீம். பெருந்தலைவரின் காலத்தை விடவும் பெரும் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் இன்றைய தலைவருக்கு தொடர்ந்தும் ஏற்பட்டு வருகிறது. அவ்வப்போது கிளர்ந்தெழுகின்ற இனவாத பேய்களிடமிருந்து முஸ்லிம் சமூகத்தை சேதாரமில்லாமல் பாதுகாக்குகின்ற அரும்பணி அவருக்கு எழுந்துள்ளது. அந்தப்பணியில் அவர் காத்திரமாக இயங்கி வருவது தனது பணியை அவர் புறக்கணிக்கவில்லை என்பதனை தெளிவு படுத்துகின்றது.

மர்ஹூம் அஷ்ரப் மரணித்து சுமார் 19 வருடங்கள் ஆனபோதும் மக்கள் மனதைவிட்டு நீங்காத உன்னத தலைவனாக இன்னும் ஆராதிக்கப்படுவது அவரின் நேர்மையான மக்கள் பணிக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கொள்ள வேண்டும். இலங்கை முஸ்லிம்களின் உரிமைக்குரலாக அஷ்ரப் வகுத்த அதே பாதையில் முஸ்லிம் காங்கிரஸ் இன்னுமின்னும் வீரியத்துடன் எழுச்சியடைய வேண்டும். வீணான முரண்பாடுகள்,தலைமைத்துவ ஆசைகள்,காட்டிக்கொடுப்புக்கள் என்று கொஞ்சமும் குறைவில்லாமல் தற்போதும் கட்சிக்குள் எழுந்தாலும் இந்த கட்சியின் மெய்யான போராளிகள் அவற்றை முறியடித்து இந்தக்கட்சியை பாதுகாப்பதில் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு பக்கபலமாக இருக்கின்றனர்.

       19 வது நினைவு தினம்

மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் 19வது நினைவு தின நிகழ்வு குருநாகல், சியம்பலாகஸ்கொடுவயில்  இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ரிஸ்வி ஜவஹர்ஷா அவர்களினதும் அந்த மாவட்டத்து மத்திய குழுவினரினதும் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நிகழ்வு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா மூன்று முறைகள் வடமேல் மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரசின் பிரதிநிதியாக சபையை அலங்கரித்தவர். குருநாகல் மாவட்டத்து முஸ்லிம்களின் பாராளுமன்ற கனவை நிறைவேற்ற இருக்கின்ற ஒரேயொரு தெரிவாக கணிக்கப்படுபவர். சுமார் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட குருநாகல் மாவட்ட முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாக அண்மைக்காலமாக மிளிரும் ரிஸ்வி ஜவஹர்ஷா கோடிக்கணக்கான ரூபாய்களுக்கான அபிவிருத்தியையும, ஏராளமான தொழில் வாய்ப்புகளையும் அந்த மாவட்டத்திற்கு பெற்றுக்கொடுத்தவர்.

அண்மையில் நடத்தப்பட்ட கூலிப்படை குண்டுத்தாக்குதலின் விளைவாக குருநாகல் மாவட்டத்தில் அதிகமான முஸ்லிம் இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட போது அவர்களின் விடுதலைக்காக களத்தில் நின்று செயற்பட்டவர். வெறுமனே குருநாகல் மாவட்டத்தில் கைதானவர்களை மட்டுமே கருத்திற்கொள்ளாமல் நாடளாவிய ரீதியில் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலைக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் அமைக்கப்பட்ட செயலணியில் முக்கிய செயற்பாட்டாளராக செயற்பட்டவர். எனவே வடக்கு,கிழக்கை தாண்டி செறிவான முஸ்லிம் வாக்குகளையும், முஸ்லிம் காங்கிரசின் ஆதரவு தளத்தையும் கொண்ட குருநாகல் மாவட்டம் மறைந்த பெருந்தலைவரின் நினைவு தினத்தை ஞாபகப்படுத்த சிறந்த தெரிவுதான். எல்லாம் வல்ல இறைவன் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களுக்கு உயர்தரமான சொர்க்கத்தை வழங்குவதோடு, இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் நீண்ட ஆயுளை வழங்கி சமூகப்பணியில் இன்னும் தீவிரமாக இயங்க உதவி புரிவானாக.

Read more...

புதன், 21 ஆகஸ்ட், 2019

கட்டுரை /அரசியல்

முஸ்லிம் தலைமைகளின் பதவி துறப்பும் – ஏற்பும்  சாதித்தவை என்ன ?.

-நாச்சியாதீவு பர்வீன் -



இலங்கை அரசியலில் எதிர்பாராத சடுதியான மாற்றங்கள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறான சடுதியான நிகழ்வுகளின் மூலம் ஆட்சியில் பாரிய மாற்றங்கள் ஏற்படவில்லையானாலும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் அவை தாக்கம் செலுத்துகின்ற பிரதான காரணியாக அமைந்து விடுகின்றது. இதற்க்கு நல்ல உதாரணங்களாக அண்மைய சில நிகழ்வுகளை அடையாளமிட்டு கூற முடியும். இதில் குறிப்பாக அண்மையில் ஸஹ்ரான் என்ற முஸ்லிம் பெயர்தாங்கி தீவிரவாதியினால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான,வெறுக்கத்தக்க தற்கொலை குண்டு தாக்குதலும் அமைந்தது எனலாம் .

இந்த குண்டு தாக்குதலின் பின்னர் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளிக்கூண்டில் ஏற்றிவைத்து விசாரணைக்குற்படுத்தி, குறித்த செயலோடு சம்பந்தப்பட்டவர்கள் என்று அடையாளப்படுத்த பேரினவாத சக்திகள் கடும் முயற்சி மேற்கொண்டது. ஆனால் அவர்களின் சூழ்ச்சி அவர்கள் நினைத்த மாதிரி நூறுவிகிதம் பலனளிக்கவில்லை. அதற்க்கு பிரதானமான காரணம் இலங்கையில் முஸ்லிம்களுக்கு இருக்கின்ற வலுவான அரசியல் தலைமைத்துவங்களாகும். அதிலும் குறிப்பாக ஆளும் தரப்பில் அதிகாரமிக்க அமைச்சு பொறுப்புக்களில் முஸ்லிம் தலைமைகள் அமர்ந்திருப்பதும், இந்த நல்லாட்சியை அமைப்பதில் மிக முக்கிய பங்காளிகளாக முஸ்லிம் அரசியல் கட்சிகள் முன்னின்று செயற்பட்டமையும், அரசுக்கெதிரான சூழ்ச்சிகளின் போது அவற்றை நேருக்குநேர் எதிர்கொண்டு ஜனநாயகத்தை காப்பதில் முஸ்லிம் தலைமைகளின் செயற்திறனும் முஸ்லிம் சமூகத்தை பேரினவாத சக்திகளிடமிருந்து காப்பதற்கு உதவியது எனலாம்.

ஆனால் முஸ்லிம் தலைமைகளின் சக்திக்கு அப்பாலும் சில வன்முறைகளும், அடாவடித்தனங்களும் திட்டமிட்ட அடிப்படையில் நடந்தேறின. முஸ்லிம் சமூகத்திற்கெதிரான வன்முறைகளின் பின்னணியில் வலுவான அரசியல் காரணங்கள் இருப்பதும், அதனை திட்டமிட்டவர்கள் தொடர்பிலான தகவல்களும் தற்போது வெளிவந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த அரசாங்கத்தை முற்றுமுழுதாக நம்பி செயற்பட்டு வந்த முஸ்லிம் சமூகத்திற்கு அரசாங்கம் எவ்விதமான நன்றிக்கடனையும் செலுத்தவில்லை என்கின்ற விமர்சனம் பரவலாக முஸ்லிம் சமூகத்தினர் மத்தியில் உலவி வருகின்றது. பாதுகாப்பு தரப்பினரின் முன்னிலையிலேயே சகல வன்முறைகளும் நிகழ்த்தப்பட்டன என்கின்ற உண்மையை அரசாங்கம் ஏற்றுக்கொண்டாலும், அரசின் கையாலாகாத தனத்தை இது மிகத்தெளிவாக சுட்டிக்காட்டுவதோடு, இந்த அரசின் பங்காளிகளாக முஸ்லிம் தலைமைகளுக்கு இது சமூகத்தின் மத்தியில் பலத்த எதிர்வினைகளை ஏற்படுத்தியது.

இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில்தான் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் கூட்டாக தமது அமைச்சுப்பொறுப்புக்களை துறந்து அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்கள். ஜூன் 3 ஆம் திகதி முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்தபோது அதற்கான காரணத்தை அவர்கள் ஊடகங்களுக்கு தெளிவாக கூறியிருந்தார்கள். இந்த ஊடக சந்திப்பானது அன்றைய தினமே சகல தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு  மறுநாள் பத்திரிகைகளில்  தலைப்பு செய்தியாக வெளியாகியது.

அமைச்சுப்பொறுப்புகளை துறந்த முஸ்லிம் அமைச்சர்கள் பிரதானமாக பின்வரும் காரணங்களை முன்வத்தே தமது அமைச்சுப்பொறுப்புக்களை துறப்பதாக பகிரங்கமாக அறிவித்தார்கள்.

 A1-முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் திட்டமிட்ட செயற்பாடுகள் உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவேண்டும் .  

A2-  பயங்கரவாத செயற்பாடுகளுக்கு  முஸ்லிம் அரசியல்வாதிகள் எவராவது துணை போயிருந்தால்  அவர்கள்  எவ்வாறான உயர்பதவிகளை வகித்தாலும் அவர்களுக்கு எதிரான விசாரணைகளை துரிதப்படுத்தலும் சுயாதீனமாகஅவற்றை  மேற்கொள்ள வழிவிடலும் , 

A3- பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புள்ளவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில்  கைதாகியுள்ள முஸ்லிம் இளைஞர்களின் விசாரணைகளை துரிதப்படுத்தி அப்பாவிகளை விடுதலை செய்தல்.  

 A4-நாட்டில் இனநல்லிணக்கத்தையும், சமாதானத்தையும் மீண்டும் நிறுவுதல் ,



மேற்சொன்ன காரணங்கள் தவிர்த்து வேறு எந்த கோரிக்கைகளையும் அவர்கள் அந்தநேரத்தில் முன்வைக்கவில்லை என்பது நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். முஸ்லிம் அமைச்சர்களின் கூட்டு இராஜினாவின் பின்னர் அதன் பிரதிபலனாக சில விடயங்கள் சடுதியாக அமுலுக்கு வந்தன



B1-நாடு தழுவிய ரீதியில் முஸ்லிம்கள் மீது கட்டவிழ்த்து விட திட்டமிடப்பட்டிருந்த வன்முறைகள், உடனடியாக கட்டுக்குள் வந்ததன. 

B2- அரச குற்றப்புலனாய்வு துறையினரும் , பாதுகாப்பு தரப்பினரும் விசாரணைகளை துரிதப்படுத்தி முடித்து , முஸ்லிம் அமைச்சர்களோ அல்லது பதவி துறந்த முஸ்லிம் ஆளுநர்களோ குறித்த தீவிரவாத செயலோடு சம்பந்தப்பட்டிருக்கவில்லை  என்கின்ற முடிவினை தமது இறுதி அறிக்கையில் பகிரங்கப்படுத்தினர் . . 

B3-குண்டு வெடிப்பு சம்பவத்துடன்  சம்பந்தப்படாமல் புனையப்பட்ட,சில்லறை  குற்றசாட்டுகளுக்காக  கைது செய்யப்பட்ட பெரும்பாலானவர்வகள் விடுதலை செய்யப்பட்டு ( Dr ஷாபி உட்பட)  சிலர் பிணையிலும்  விடப்பட்டுள்ளனர். 

B 4- பெரும்பான்மை சமூகத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் இடையிலான நல்லிணக்கம் மெல்ல உருவாகிவருகின்ற ஆரோக்கியமான சூழல் உருவாகிவருகிறது.

இந்த சடுதியான முன்னேற்றகரமான மாற்றம் அதிஸ்டவசத்தால் நிகழ்ந்தது என்று வாதாடமுடியாது. ஏனென்றால் முஸ்லிம் சமூகத்தை சுற்றி பின்னப்பட்டிருந்த இனவாத வலையில் இருந்து இந்த சமூகத்தை சேதாரமில்லாமல் காக்குகின்ற அரும்பணியை முஸ்லிம் தலைமைகள் செவ்வனே செய்துள்ளன. இதன் அர்த்தம் முஸ்லிம் சமூகத்தின் ஒட்டுமொத்த பிரச்சினைகளும் தீர்ந்து விட்டன என்பதல்ல மாறாக கடுமையான நெருக்குவாரங்களில் இருந்து முஸ்லிம் சமூகம் தற்காலிகமாக மீற்கப்பட்டுள்ளது என்பதே ஆகும்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகத்தில் இயங்கும் “ காரணமின்றி கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்கும் செயலணிக்கு “ கிடைத்த முறைப்பாடுகள் அனைத்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தூடாக கையாளப்பட்டு , 90% மானோர் பிணையில் அல்லது முற்றாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர் . தீவிரவாதிகளுடன் தொடர்பை பேணியவர்கள் அல்லது ஏதாவது சட்டவிரோத செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என 18 கோப்புகளே எஞ்சியுள்ளன. நீண்ட விசாரணைகளுக்கு ஆளாகவேண்டியுள்ளது . இவர்களின் விடுதலைக்கு மு.கா செயளணியினர் தொடர்ந்தும் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர்.

இராஜினாமாவின்போது முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளுக்கும் சாதகமான முடிவுகள் எட்டப்பட்டதுடன் அதற்கு மேலதிகமாக -

  • அப்பாவிகளின் கைதுகள் முற்றாக நிறுத்தப்பட்டு உறுதிசெய்யப்பட்ட ஆதாரங்களுடன் மட்டுமே தற்போது கைதுகள் இடம்பெறுகின்றன.  
  • முஸ்லிம்களின் வீடுகள் , வியாபார நிலையங்கள் பள்ளிவாயல்கள் போன்ற இடங்களில் நடாத்தப்பட்ட திடீர் சோதனைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன  
  • குண்டுவெடிப்பினை தொடர்ந்து பூதாகாரமாக்கப்பட்ட ஹபாயா பிரச்சினை புதியதொரு சுற்றுநிருபத்தின் மூலமாக தீர்வுக்கு வந்தது. 
  • முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை சர்வதேசத்தின் கவனத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  தலைமை சர்வதேச ஊடகங்களின் பல நேர்காணல்களுக்கூடாக கொண்டு சென்றதால்   சர்வதேசமும்  தமது வலுவான கண்டனத்தை இலங்கை அரசுக்கு தெரிவித்தது .


எத்தகைய காரணங்களை முன்வைத்து முஸ்லிம் அமைச்சர்கள் தமது பதவிகளை துறந்தார்களோ அவற்றில் கணிசமான அடைவை அரசின் துணையுடன்  எட்டியுள்ளதுடன் முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளவிருந்த  பாரிய பிரச்சினைகளிலிருந்து  விடுபட்டு ஓரளவு சுதந்திரமாக நடமாடும் சூழல் தற்போது  உருவாகியுள்ளது. இந்நிலையில் கூட்டு இராஜினாவின் போது முன்வைக்கப்படாத கோரிக்கைகளை காரணம் காட்டி அமைச்சுக்களை பொறுப்பெடுக்காமல் காலம் தாழ்த்துவது , 

  • பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் “ பேரம் பேசல் “ போன்ற பிழையான மனப்பதிவுகளை ஏற்படுத்தலாம் ,
  • அஸ்கிரிய, மல்வத்து உயர்பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் வேண்டுகோள்களை தொடர்ந்தும்  புறந்தள்ளுவது அவர்களை அகௌரவப்படுத்துவதாக அமையலாம். 
  • பெரும்பான்மை சமூகத்திற்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் இடையிலான நல்லிணக்கம் மெல்ல உருவாகிவருகின்ற ஆரோக்கியமான சூழலில் பாதிப்புக்களை உண்டாக்கலாம் . 

இவற்றுக்கு புறம்பாக பேசப்படும் பிரச்சினைகளான 

  • கல்முனை உள்ளூராட்சி எல்லைப்பிரச்சினை , 
  • முஸ்லிம் விவாக -விவாகரத்து சட்டம், 
  • மத்ரஸாக்களின் பாடத்திட்டம் தொடர்பிலான முரண்பாடு , 
  • புர்கா-நிகாப் தடை விவகாரம் 

போன்றவை உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னரே அவ்வப்போது பேசப்படுவதும் பின்னர் கிடப்பில் போடப்படுவதுமாக இருந்த பிரச்சினைகளாகும். அத்தோடு மேற்சொன்ன எந்தப்பிரச்சினைக்கும் தீர்வினை வேண்டி இந்த இராஜினாமா இடம்பெறவில்லை என்பதனை நாம் மனங்கொள்ளவேண்டும். 

முஸ்லிம் சமூகத்தின் உரிமைக்குரலாக செயற்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குறித்த காலப்பகுதியில் பல்வேறு சமூக செயற்பாடுகளில் தனித்து நின்று செயற்பட்டது. குருநாகல், புத்தளம்,கம்பஹா மாவட்டங்களில் சிங்கள காடையர்களினால் திட்டமிட்டு நாடாத்தப்பட்ட வன்முறைகளினால்  பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக விஜயம் செய்து அப்பகுதிகளில் சேதமாக்கப்பட்ட பள்ளிவாசல்கள், வியாபார ஸ்தலங்கள், வாகனங்கள், அசையும் அசையா சொத்துக்கள் தொடர்பிலான சேதவிபரத்தையும், இழப்பு தொடர்பிலான மதிப்பீட்டு அறிக்கையையும் துல்லியமாக பெற்று அரசுக்கு வழங்கியது. அதன் பிரதிபலனாக அண்மையில் சேதமாக்கப்பட்ட பள்ளிவாசல்களுக்கான இழப்பீடுகள் அரசினால் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.   

புர்கா -நிகாபுக்கு மாத்திரம் தடை என்றிருந்த போதும் அபாய அணிவதும் குற்றமாக சித்தரிக்கப்பட்ட போது முஸ்லிம் பெண்கள் மானசீகமாக பாதிக்கப்பட்டார்கள். இதற்காக முஸ்லிம் காங்கிரஸ்  அதன் தலைமை ரவூப் ஹக்கீமின் ஆலோசனைக்கு இணங்க ஒரு செயலணியை  அமைத்து பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு நேரடியாக சென்று இந்த பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதில் முன்னின்று செயற்பட்டது. 

அத்தோடு புனையப்பட்ட கைதுகளில் இருந்து முஸ்லிம் இளைஞர்களை காப்பாற்றும் முகமாக அவர்களுக்கான ஆலோசனைகளை வழங்கி வீணான கைத்துகளில் இருந்து பலரை காப்பாற்ற ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கியது. மேற்சொன்ன செயற்பாடுகள் அனைத்தையும் ஒருகட்சியாக இருந்து முஸ்லிம் காங்கிரஸ் மாத்திரமே செய்தது என்பது யாவரும் அறிந்த உண்மை.
இவைகள் அந்தக்கட்சியின் கடமையும் கூட. இவைகள் கூட்டு இராஜினாவுக்கு முன்னரே இருந்து செய்யப்பட்டு வந்த செயற்பாடுகளாகும்.

அத்தோடு கூட்டாக இராஜினாமா செய்தவர்களுள் ஐக்கிய தேசியக்கட்சி முஸ்லிம் பிரதிநிதிகள் ஏற்கனவே அமைச்சுக்களை பொறுப்பேற்றுள்ள நிலையில் , மற்றைய கட்சியான மக்கள் காங்கிரஸ் பிரதிநிதிகள் அனைவரும் அமைச்சுக்களை பொறுப்பேற்க தீர்மானித்துள்ள சூழலில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகள் மீண்டும் அமைச்சுப்பொறுப்புக்களை ஏற்பதா , இல்லையா என்கிற கருத்து முரண்பாடு 29.07.2019 அன்று  பேசப்பட்டபோது  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீடத்தின் முடிவின் பிரகாரம் முஸ்லிம் காங்கிரசை பிரதிநிதித்துவப்படுத்தும் எவரும் பதவி ஏற்பதில்லை என்கின்ற முடிவில்  தலைவர்  ரவூப் ஹக்கீம்  உறுதியாக இருந்தார். ஆனால்  இராஜினாமாவுக்காக முன்வைத்த காரணங்களில் கணிசமான அடைவினை எட்டியிருப்பதனாலும், தேர்தல்கள் நெருங்கி வருகிற சூழலில், அமைச்சரவையில் வளைந்து கொடுக்காத  முஸ்லிம் தலைமைத்துவத்தின் அவசியத்தை முன்னிறுத்தியும்   தலைவர் ஹக்கீமை அமைச்சுப்பொறுப்பை ஏற்குமாறு அன்றையதினம் இது விடயமாகவும் விவாக விவாகரத்து சட்டத்திருத்தம் குறித்தும் நடைபெற்ற கலந்துரையாடல்களில் பங்குபற்றிய   மு .காவின் உயர்பீட செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் மற்றும்  உயர்பீடத்தில் பொறுப்பான பதவிகளை வகிப்பவர்களும் பாராளுமன்ற பிரதிநிதிகளுமான   பைசல் காசிம், அலி ஸாஹிர் மௌலானா, எம் .எஸ் .தௌபீக், ஏ .எல் .நசீர், எம்.ஐ .மன்சூர்  ஆகியோர்  வலியுறுத்தினர். 

ஆகவே மிக முக்கியமான இக் காலக்கட்டத்தில்  அமைச்சரவை தீர்மானங்கள் முஸ்லிம் சமூகத்திற்கு பாதகமாக அமைந்து விடக்கூடாது என்ற நோக்கில் தலைவர் ஹக்கீம் மாத்திரம் அமைச்சுப்பொறுப்பை ஏற்பதென்றும்  ஏனைய மு.கா சார்பிலான முன்னாள் அமைச்சர்கள் முஸ்லிம் சமூகத்தின் குறித்த பிரச்சினைகளில் நியாயமான அடைவுகளை எட்டும்வரை எவ்வித  அமைச்சுப்பதவிகளையும்  ஏற்காது தொடர்ந்தும் அரசுக்கு அழுத்தம் கொடுப்பதென்றும் கூட்டாக முடிவெடுத்தனர் . 

அமைச்சுப்பொறுப்புக்களை மீளப் பாரமெடுத்ததற்கு அடுத்த தினம்  ( 30.07.2019 )காலையில் கூடிய அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்டிருந்த “நிகாப் – புர்கா” தடைக்கான அமைசரவைப் பத்திரம் , அமைச்சர் , தலைவர் ஹக்கீம் அவர்களின் பலத்த கண்டனத்தினால் பிற்போடப்பட்டமை தலைவர் ஹக்கீம் மீளவும் அமைச்சுகளைப் பொறுப்பேற்றதன் உடனடிப் பிரதிபலனாகும் .  அத்தோடு மாகாண சபைதேர்தலை புதிய தொகுவாரியான முறையில் நடத்துவதற்கான முஸ்தீபுகள் நடப்பதாக அரசல்புரசலாக கதை வெளியாகியது, முஸ்லிம் அமைச்சர்கள் அமைச்சரவையில் இல்லாத நிலையில் அந்த பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டால் 41 ஆக இருந்த முஸ்லிம் மாகாண சபை உறுப்பினர்களின் எண்ணிக்கையானது வெறும் 13 க்கு மட்டுப்படுத்தப்படும் அபாயம் நிகழும். எனவே முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவம் அமைச்சரவையில் மிக முக்கியமாகும்.

அமைச்சர்களான ஹலீம் -கபீர் ஹாஷிம் ஆகியோர் அமைச்சரவையில் இருக்கின்றார்கள் தானே இந்தவிடயத்தை அவர்கள் பார்க்க மாட்டார்களா? என்ற கேள்வி சில புத்திசாலிகளுக்கு எழலாம். உண்மையில் அவர்களும் இந்த கூட்டு இராஜினாமாவின் பங்காளிகளாக இணைந்து கொண்டமையே சகல அரசியல் தரப்புக்களையும், பௌத்த உயர்பீடங்களையும் ஆழமாக சித்திக்க வைக்க ஏதுவாக அமைந்தது. அவர்களின் இராஜினாமாவானது நன்றிக்கும்,பாராட்டுக்கும் உரியது என்பதில் இருவேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால் அவர்கள் இருவரும் பெரும் தேசிய கட்சி ஒன்றின் பிரதிநிதிகள் அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ அந்த கட்சியின் கொள்கைக்கும்,கோட்பாட்டுக்கு, கட்டளைகளுக்கும் செவிசாய்க்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது அதனால் அவர்களினால் சுயமாக முடிவெடுக்க முடியாது. அவர்களின் கட்சி தலைமையின் விருப்பத்திற்கு அமையவே பெரும்பாலான விடயங்களில் அவர்கள் முடிவெடுப்பார்கள். ஆனால் ரவூப் ஹக்கீம் போன்ற முஸ்லிம் தலைமைகளுக்கு அவ்வாறான இக்கட்டான நிலை கிடையாது சமூகம் பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் அரசுக்கெதிராக முடிவெடுக்கின்ற திராணியும், அதிகாரமும் நூறுவிகிதம் உண்டு. அது பலதடவைகள் நிரூபிக்கப்பட்டும் உள்ளன,

எனவே முஸ்லிம் தலைமைகளின் பதவி துறப்பு எவ்வாறு கொண்டாடப்பட்டதோ ! அவ்வாறே அவர்களின் பதவியேற்பும் சமூக நலனுக்காகவே என்கின்ற உண்மையை முஸ்லிம் சமூகம் ஏற்கத்தான் வேண்டும். ஒரு சிக்கலான அரசியல் சுழிக்குள் நாம் சிக்கியிருக்கிறோம் அதிலிருந்து நம்மை மீட்டெடுக்கும் சக்தியை இறைவன் நமது முஸ்லிம் தலைவர்களுக்கு வழங்குவானாக என்று பிரார்த்திப்போம்.

நன்றி : விடிவெள்ளி (16/08/2019)

Read more...

புதன், 6 ஜனவரி, 2016

கவிதை- ஒரு மறு வாசிப்பு



நாச்சியாதீவு பர்வீன்.

ஒரு நல்ல கவிதை மனதிற்க்கு  மருதாணி போட்டு அழகாக்கின்றது, நம்மை நாமே மறு வாசிப்பு செய்வதற்க்கும் , நமதான கவிதைபுலமையை உரசிப்பார்ப்பதட்க்கும் கவிதை வாசிப்பானது மிக அவசியமான ஒன்றாக ஆகிப் போய் விட்டது சில கவிதைகள் எத்துனை வாசித்தாலும் எனக்கு விளங்குவதே இல்லை அந்த கவிதை எழுதிய கவிஞர்களிடம்  அதற்கான விளக்கம் இல்லை ஆனால் அந்தக் கவிதைகளை விளங்கிக் கொள்ள ஆழமான கவிதை வாசிப்பும்  கவிதை பற்றிய அறிவும் அவசியமாம்?  பாரதி அவனுக்கே இந்தக்கவிதைகள் புரிந்திருக்குமா என்று யோசித்துப் பார்த்தால் அதுவுவும் சிக்கலாகத் தான் இருக்கிறது, இன்று கவிதையின் வடிவம் வெறும் சொல்லடுக்குகளால் பின்னப்பட்ட  கோர்வைகளாகிப் போய்விட்டதாக ஆதங்கப் படுகிறார் நா.காமராசன்  அதுவும் உண்மையில்லாமல்  இல்லை வெறும் சொல்லடுக்குகளை கவியாக பிரவகித்துக் கொண்ட காலாமாக வானம்பாடிகளின் காலத்தையும் சிலர் அடையாளப்படுத்துவது உண்டு ஆனால் வானம்பாடிகளின் காலத்தில் புதுக்கவிதை புதுப் பாய்ச்சலுடன் தனக்கான ஒரு பாதையில் அடையாளப்படுத்தப் பட்டது என்பதை யாராலும் மறுக்க முடியாது , கவிதையின் வடிவம் கால மாற்றத்தோடு பாரிய மாற்றங்களை கொண்டுள்ளது அந்தவகையில் செய்யுள் ஆக இருந்து- இன்று புதுக்கவிதைப் பாணியில் விளங்காக் கவிதை வரை அதன் வடிவம் மாற்றம் பெற்றுள்ளது எனலாம் செய்யுளை மக்கள் புரிந்து கொள்வதில் இருந்த சங்கடம்தான் மரபில் எளிமையும் புதுக்கவிதையும் தோன்றுவத்ட்க்கு காரணம் ஆகும்,  அந்த வகையில் இடையில் குறுங்கவிதை, நெடுங்கவிதை , வசனக்கவிதை, போன்ற பெயரிலேயே கவிதைகள் வலம் வந்தன இன்னும்  ஜப்பானிய கவிதை வடிவான ஹைக்கூ கவிதைகளும் விடுகதைப் பாணியிலான கவிதைகளும் வெளிவந்தன  இவைகள் அந்த அந்தக் காலங்களில் பிரபல்யமாக பேசப்பட்டதும்   உண்டு மந்திரச் சொற்களால் வாசகனை வளைத்துப் போடும் வரிகளுக்கு ஒரு தனியான இடம் இருக்கிறது சில மூத்த கவிஞர்கள் இதனை வெறும் சொல்லடுக்கு என்கிறார்கள் இன்னும் சிலர் ஆஹா இது அற்புதமான கவிதை என்கிறார்கள் ஆக வாசகனை தெளிவாக  குழப்புவதில் இந்த இருசாராரும் வெற்றி பெறுகிறார்கள்.

கவிதைபற்றிய இவ்வளவு ஆராய்ச்சி எதட்கேன்றால்   சில கவிதைகள் அல்லது வரிகள் வாசித்த மாத்திரத்திலேயே நம்மை வளைத்துப் போட்டுவிடுகின்றன அந்த வகையில் சில வரிகளை நான் பகிர்ந்து கொள்கிறேன் இது கவிதையா அல்லது வெறும் சொற்கள் கொண்ட  சித்திரங்களா என்பதெல்லாம் யான் அறியேன் ஆனால் எனது கவிதை பற்றிய சின்ன அறிவுக்கு இவைகள் நல்ல கவிதைகலாவே படுகிறது..நீங்களும் கொஞ்சம் வாசித்து பாருங்கள்...

நள்ளிரவிலே வாங்கினோம்
இன்னும் விடியவில்லை

என்று இந்திய சுதந்திரத்தைப் பற்றி கவிக்கோ அப்துர் ரஹ்மானின் சிஷ்யர் ஒருவர் பாடியுள்ளார்  இது திறனாய்வாலர்களால் அற்புதமான கவிதை என்று அடையாளப்படுத்தப் பட்ட போதும் சிலர் இது கவிதையே இல்லை என்கிறார்கள் புதுக் கவிதைக்கான மிகக் காத்திரமான கட்டமைப்ப உருவாக்கியவர் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவரது சிஷ்யர் எழுதியதால் தான் இது கவிதையாக கொள்ளப்படுகிறது என்கிறது  இன்னொரு வாதம் ஆனால் ஒரு நாட்டின் சுதந்திரம் பற்றி நொந்து போய் இத்தனை இலகுவான  மொழிநடையில் யாரும் கவிதை யாத்துள்ளார்களா? என்பது தெரியாத விடயம் .

கவிதை என்றால் என்ன?  என்று யாரும் கேட்டால் என்ன பதில் சொல்லுவது கேட்பவருக்கு பதில் சொல்வதை விடவும் நல்ல கவிதை ஒன்றை அடையாளப் படுத்தி இதுதான் கவிதை என்று கொடுக்க முடியும் அந்த வகையில் மேற்சொன்ன கவிதையானது பலராலும் விதந்துரைக்கப்பட்டது... இதே பாணியில் இன்னொரு கவிதை

வெள்ளையனிடம் வாங்கினோம்
கொள்ளையனிடம் கையளித்தோம்

இதுவும் ஒரு இந்திய கவிஞரால் எழுதப்பட்டதுதான் இது கவிதையா? அல்லது வெறும் சொல்லடுக்கா ? என்ற ஆராய்ச்சிகளையும் தாண்டி
இது வெறும் இந்தியாவை மட்டும் சுட்டுவதாக இல்லை மாறாக வெள்ளையர்களின் காலனித்துவத்தின் கீழ் இருந்து சுதந்திரம் பெற்று இன்று மட்டுக்கும் ஊழல் நிறைந்த அரசுகளினால் ஆளப்பட்டுக்கொடிருக்கின்ற நாடுகளுக்கான பொதுவான வாசகம் இந்த வரிகள் அநேகமானவர்களுக்கு பிடித்துள்ளது எனக்கும் தான் இப்படி பல குறுங்கவிதை என்ற பெயரிலேயே வானம்பாடிகளின் காலத்தில் கோஷங்களாகவும், எதுகை மோனைகளுடனான வார்த்தை வருடல்கலாகவும் வெளிக்கிளம்பின

இவ்வாறே ..............

எமக்கென்று  எஞ்சுவதெல்லாம்
இரக்கமில்லாத உறவுகளும்
உறக்கமில்லாத இரவுகளும்

இந்த வரிகளின் ஆழம் அல்லது கவர்ச்சி என்னை மிகவும் கவர்துள்ளது இதை யார் எழுதினார் என்ற தகவல் தெரியாவிட்டாலும் இது கவிதையா அல்லது வெறும் சொற்கள் கொண்ட  சிலம்பமா என்ற வாதங்களையும் தாண்டிய கவித்துவமான வரிகளாகவே இதனை கொள்ள முடிகின்றது இதனை வாசித்து மாத்திரத்திலேயே ஆஹா என்று சப்புக்குக் கொட்டும் வாசகனை  நம்மால் காண முடியும் இதற்க்கு கவிதைபற்றிய வெறும் மேலுந்தவாரியான ரசனை போதுமானதாகும் பாமரர்களையும் கவர்கின்ற வகையில் அவர்களுக்கு விளன்க்கும் இலகு நடையில் கவிதை எழுதுவது அவர்களை அந்தக் கவிதை சென்றைடைய மிக இலகுவான வழியாகும் இந்த உயரிய பணியை சினிமாப்பாடல்கள் மூலமாக கவிஞர்களான கண்ணதாசன், வாலி, மு.மேத்தா, ந.காமராசன், வைரமுத்து ஆகியோர் செவ்வனே செய்துள்ளனர்

இன்றைய கவிதைச் சூழல் மிகவும் ஆரோக்கியமானதாக உள்ளதாக கருதப்படுகிறது ஏனென்றால் ஒரே சொல்லையும் ஒரே வார்த்தையையும் வைத்து கவிதைபன்னிய பலர் இப்போது இல்லாமல் போய்விட்டனர் புதிய இளம் தலைமுறைபடைப்பாளிகளின் தேடல் உத்வேகம் புலமை என்பது புதிய கோணத்தில் கவிதை உலகத்தை தரிசிக்க வைக்கிறது
அந்தவகையில்

வானம்
அது வெள்ளை
நிலா அது இரவில் வரும்
மேகம் அது உன் கூந்தல்
பூ உன்னிடம் வாசத்தை
கடன் வாங்கியதா?    

என்ற பாணியிலான முதலாம் ஆண்டுப் பாடப்புத்தகத்தைப் மனப்பாடம் செய்த மாதிரியான்  சொற்களை இன்னும் சிலர் எழுதிக் குவித்து வேருப்பெற்றுக்கின்ற்றனர் பின்னாலும் முன்னாலும் பெரிய பட்டங்கள் வேறு இவர்களிடம் நான் வினயமாக கேட்டுக் கொள்வது...கவிதை என்ற பெயரில் பாடப்புத்தகங்களில் உள்ளதை பார்த்து எழுதாதீர்கள்.
நான் வாசிக்கின்ற ஒரு காத்திரமான கவிஞர் யாழ் ஜன்சி கபூர் அனுராதபுரத்திலுள்ள இவரின் கவிதைகள் சுருகென்று மனதை தைத்து சோகத்தை தரக்கூடியது இன்றுகளில் முகப் புத்தகத்தில் வெகுவாக கவிதைமூலம் பிரகாசிக்கும் இவரது அண்மைக்காலக் கவிதை ஒன்று என்னளவில் மிகவும் ரசிக்கக் கூடியதாகவும் வித்தியாசமானதாகும் இருக்கின்றது

என் விழிக்குள் இறங்கிய
உன் பார்வை
வாந்தியெடுத்தது காதலை..

காதல் பற்றிய மிக ஆழமான அவதான  குறிப்பு காதலை வெகு லாவண்யமாக சொல்லும் பங்கும் காதல் தோல்வியை உருகி வெளிப்படுத்தும் ஆளுமையும் ஜன்சி கபூரின் தனித் தன்மை
சின்ன சின்ன கவிகளை அலுக்காமல் வாசிக்க முடியும் அது வெறும் சிள்ளடுக்கு களாக இருந்தாலும் சில வேளைகளில் வாசகனை கவர்ந்து விடுகிறது ....

இப்போதுகளில் முகப் புத்தகத்தில் அநேகமான பல நல்ல கவிதைகள் வருகின்றன அதிலும் பஸ்லி ஹமீட் இன் கவிதைகள் வெகு பிரமாதம்

அழகு என்கிறார்கள்
கறுப்பு மை
வெள்ளைக் காகிதத்தில்
சிந்தும் போது
ஆனால் அசிங்கம் என்கிறார்கள்
கறுப்பு என்னுடன்
வெள்ளை நீ இருக்கும் போது

இந்த வரிகளையும் தாண்டிய இரண்டு வரிக்கவிதைகள் பல எழுதியுள்ளார் இவரின் பல கவிதைகள் படத்துடன் முகப்புத்தகத்தில் வலம்வருவது குறிப்பிடத்தக்கது..இன்னும் பல நல்ல இளம் கவிஞர்கள் தம்மை அடையாலப்படுத்தியுள்ளார்கள்  அமல்ராஜ் ,அமுதன், சிஹார், சிபான்,ராஜு சுகா, பிரகாசகவி அன்வர், ஜெம்சித் சமானம்,ரிஷான் செரீப், சிப்லி, லுணுகலை ஸ்ரீ   இவர்களெல்லாம் முகப் புத்தகத்தில் கலக்கிக் கொண்டிருப்பவர்களில் சிலர்.இன்னும் பலர் உளர்

கவிதை  உலகம் மிகவும் விரிந்தது, கவிஞனின் பார்வையும் இந்த பரந்த கவிதை உலகம் முழுக்க பரவ வேண்டும், அப்போது தான் நல்ல கவிதைகள் எழும், எழுத முடியும்.

Read more...

புதன், 23 டிசம்பர், 2015

நானும் ரவடி தான்

தலைப்பை பார்த்து யாரும் மெய்யாலுமே இவன் ரவுடி தான் என்று நினைத்து விடாதீர்கள்-க்கும் நெனச்சிட்டாலும் என்று நீங்க நினைப்பது கேட்கிறது எப்படியோ மீண்டும் இந்த பகுதிக்கு எட்டிப்பார்க்கும் எண்ணத்தை ஊட்டியவர் அஸ்ரப் சிஹாப்தீன் அவர்கள் ப்ளாக்கர் ஆரம்பித்த காலங்களில் மிகவும் சீரியசாக எழுதியவன் அடியேன் பின்னர் முகநூலுக்குள் முடங்கிக்கிடப்பர் போனதால் இந்தப்பக்கம் எட்டிக்கூட பார்க்க முடியவில்லை, தேங்கிய சாக்கடை போல ஆகிப்போய்விட்டது இந்தப்பகுதி, ஆனால் சிரேஷ்ட எழுத்தாளர் அஸ்ரப் சிஹாப்தீன் எவ்விதமான அலட்டலோ,அலம்பலோ இல்லாமல் தனது பக்கத்தை செவ்வனே செய்து வருகின்றார், யாருக்காகவும்,எதற்காகவும் அவரது பக்கத்தையும் எழுத்தையும் அவர் தொய்வாக்கி விடவில்லை அதுதான் அவரது பலம் ................அவர் முகநூலில் இட்ட பதிவொன்றின் தாக்கம் தான் இந்த மீளப் பிரவேசம்........இனி இந்தப் பக்கத்தை தொடரவுள்ளேன் 

Read more...

புதன், 4 மார்ச், 2015

எனது மூன்றாவது இதயம் வெளியீடு உங்களை அன்புடன் அழைக்கிறேன் .....

அனுராதபுரத்து இலக்கிய ஆர்வமுள்ள அனைத்து நண்பர்களுக்கும் ஒரு மனம் திறந்த அழைப்பு  எதிர்வரும் ஞாயிறு எட்டாம்  திகதி சி டி சி  மண்டபத்தில் நடைபெறவுள்ள
எனது மூன்றாவது இதயம் கவிதை நூல் வெளியீட்டுக்கு அன்புடன் அழைக்கிறேன் 

Read more...

செவ்வாய், 19 நவம்பர், 2013

பழமில்லா மரம்

பழமில்லா மரம் முன்னரெல்லாம் முற்றிப்பழுத்த பழம் இருந்த காலத்தில் மரத்தை சுற்றி மாம்பழத்தான் குருவியும் பச்சைக்கிளியும் மஞ்சள் நிரக்குருவிகளும் இன்னும் பழந்திண்ணி பறவைகள் பலவும் மரத்திலே முகாமிட்டு மந்திர ஆலோசனை நடத்தும் ஒவ்வொரு கிளையையும் தம் வசமாக்கி தந்திரமாய் பழம் உண்ணும் அரசியல் நுணுக்கம் அந்தப் பறவைகளுக்கு தெரிந்திருந்தது மரத்தை குதூக்கலாமாக்கும் பறவைகளின் கும்மாளத்தில் அந்தப் பிரதேசமே கலகலத்துப் போகும் காலம் நகர மரம் மரத்துப்போனது இலை இழந்து கிளை இழந்து கலை இழந்து போனது மரம் கூடு கட்டி குடும்பம் நடத்திய குருவிக்கூட்டம் அருவிக்கரை நோக்கி இடம்பெயர்ந்து சென்றன பழமில்லாத காரணத்தால் பலமிழந்து போனது மரம் மரத்தை நோக்கிய பறவைகளின் வரவு இல்லாமல் போனது ஒரு பொழுதில் யாருமற்ற அனாதையாக தனிமையில் இருந்தது அந்த மரம் இன்னொரு பழ மரம் தேடிப் பறந்த பறவைகள் இந்த மரத்தை மறந்து போயின மரம் நினைத்துக்கொண்டது இந்தப்பறவைகளும் மனிதர்கள் போலவே ஆகிப்போய் விட்டது என்று நாச்சியாதீவு பர்வீன் 2013/11/20

Read more...

ஞாயிறு, 3 நவம்பர், 2013

என் மரணம்.....

இலையுதிர் காலத்தில் சத்தமில்லாமல் உதிரும் ஒரு இலைபோல எனதுயிரும் ஒரு நாள் பிரிந்து போகும் மரங்கொத்திப் பறவைகளின் டொக் டொக் ஒலியினையும் சில் வண்டுகளின் இறைச்சல்களையும் இன்னும் தேனீ க்கலின் ரீங்காரத்தையும் எனது செவிகள் அப்போது உணரமாட்டா ..... ஒரு அதிகாலையோ அல்லது அந்திப்போழுதோ இல்லை ஒரு கும்மிருட்டோ எனது உயிர் பிரியும் நேரமாக இருக்கலாம் இன்றோ அல்லது நாளையோ இன்னும் சில நாட்களின் பின்போ எழுதப்பட்ட பிரகாரம் நான் மரணித்துப் போவது உறுதி என் மரணம் உறவுகளுக்கு இழப்பாகவும் நண்பர்களுக்கு கவலையாகவும் என் எதிரிகளுக்கு சந்தோசமானதாகவும் இருக்கும் தொலைந்தான் சனியன் என்று எதிரிகள் சந்தோசிக்க இறுமாப்பும் ஆணவமும் அவர்களுக்குள் பிரவாகித்து ஓடும் என் மீது சாமரம் வீசிய உறவுகள் என்கபுருக்கு மேலால் பூமரம் நாட்ட முனைவார்கள் நண்பர்களோ என் இழப்பின் உஸ்னத்திலிருந்து வெளிவர முயற்சிப்பார்கள் ஊரவர்கள் இன்னொரு மரணம் வரைக்கும் என்னைப்பற்றி பேசுவார்கள் எப்போதும் கண்ணீர் விட்டு நிரப்ப முடியாத குவலையொன்ராக தேம்பித் தேம்பித் அழும் எனது கவிதைகள் அதன் மரணம் மட்டும் நாச்சியாதீவு பர்வீன்.

Read more...

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by