Related Posts with Thumbnails

செவ்வாய், 17 செப்டம்பர், 2019

கட்டுரை


சகல தரப்புக்களையும் ஒன்றிணைத்து பலம்வாய்ந்த இயக்கமாக இதனை புடம்போட புறப்படுங்கள்.

(மர்ஹூம் அஷ்ரபின் 19வது நினைவு தின நிகழ்வில் அமைச்சர் ஹக்கீமின் உரை )

                        நாச்சியாதீவு பர்வீன்.


(ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபின் 19 வது நினைவேந்தல் நிகழ்வுகள் கடந்த திங்கட்கிழமை (16) குருநாகல்,சியம்பலாகஸ்கொட்டுவ "ரிச்வின்" வரவேற்பு மண்டபத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வின் சிறப்பு பேச்சாளராக அஷ்ஷெய்க் ரவூப் செய்ன் அழைக்கப்பட்டிருந்தார். இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த காயல் மஹ்பூப் குழுவினர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் பெரும்திரளான கட்சி ஆதரவாளர்களும் இந்தநிகழ்வில் கலந்து கொண்டனர். நிகழ்வுகளை குருநாகல் மாவட்டத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும், முன்னைய நாள் வடமேல் மாகாண சபை உறுப்பினருமான சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா மற்றும் குருநாகல் மாவட்டத்து முஸ்லிம் காங்கிரசின் குருநாகல் மாவட்ட மத்திய குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர். மர்ஹூம் அஷ்ரபின் கவிதைகளை சிரேஷ்ட கலைஞர்களான கலைக்கமல் மற்றும் அமீர்கான் ஆகியோர் பாடல்வடிவில் நிகழ்வின் இடையிலே தந்தனர் )

மறைந்த எமது பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் இழப்பினை வருடாவருடம் நாம் நினைவு கூறுவது என்பது அவரது சகவாசத்தை கொண்டாடுகின்ற ஒரு நிகழ்வாகத்தான் தொடர்ந்தும் இருந்து வந்திருக்கிறது.

என்றும் எங்களோடு உடனிருக்கின்ற ஒருவராகத்தான் அவரை நாங்கள் எல்லோரும் பார்க்கிறோம்.மறைந்தும் மறையாத இந்த நாட்டு முஸ்லிம்களின் தனிப்பெரும் தானைத்தளபதியாக அடையாளப்படுத்துகிற மிகப்பெரிய ஆளுமையாக அவரை என்றென்றும் நாங்கள் நிலைநிறுத்தி நினைத்து கொண்டாடுகிறோம்.அந்த கொண்டாட்டத்தின் ஒரு அம்சமாகத்தான் அவர் எங்களை விட்டு பிரிந்த அகோர நிகழ்வின் பின்னணியிலேயே 19 வருடங்கள் உருண்டோடிவிட்டன. இந்த 19 வருடங்களுக்குள் இந்த நாட்டின் அரசியல் பலவிதமான புதிய பரிணாமங்களை அடைந்திருக்கிறது.

                  சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா

இந்த கால எல்லையில் முஸ்லிம் சமூகம் அவ்வப்போது நிறைய சவால்களை எதிர்கொண்டிருக்கிறது. இந்த ஒவ்வொரு கட்டத்திலும் எங்களுடைய பெருந்தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களுடைய வழிகாட்டல் அவருடைய வாழ்வில் பல சந்தர்ப்பங்களில் எதிர்கொண்ட சவால்கள் என்பன எப்போதெல்லாம் நாங்கள் நெருக்குவாரங்களை எதிர்நோக்குகின்ற பொழுதுகளில் எங்கள் கண்முன்னே வந்து நிழலாடுகின்ற விஷயங்களாகும் என்று சொன்னால் அது மிகையாகாது.

தலைவருடைய குணவியல்புகளை அவருடைய நினைவேந்தல் நிகழ்ச்சியிலே இரைமீட்டி பார்ப்பதென்பது மாமூலாக எல்லோரும் செய்கின்ற மரியாதையாக இருந்துவிட்டு போகும் என்பதற்காக நாங்கள் அதனை செய்யவில்லை. எந்த சந்தர்ப்பத்திலும் அவருடைய அரசியலை உரசிப்பார்க்கின்ற போது என்னென்ன சந்தர்ப்பங்களிலே அவரை நாங்கள் நினைவு கூறுகிறோம், அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர் இருந்திருந்தால் எவ்வாறு எதிர் கொண்டிருப்பார் என்று அதனோடு ஒத்துப்பார்க்கின்ற ஒரு விஷயமாகத்தான் நாங்கள் அவருடைய, வாழ்க்கையை எங்களோடு இரண்டற கலந்த ஒன்றாக வடிவமைத்துக் கொண்டிருக்கிறோம்.


கடந்த வருடம் சம்மாந்துறையிலே நாங்கள் தலைவருடைய இந்த நினைவு நாளை கொண்டாடிய போது அடுத்து வருகின்ற வருஷத்திலே என்னென்ன சவால்களை எதிர்கொள்வோம் என்று யாரும் ஆரூடம் கூறக்கூடிய நிலையிலே நாங்கள் இருக்கவில்லை. நினைவு நாளை கொண்டாடி ஒருமாதம் கழிந்தவுடனேயே இந்த நாட்டிலே மிகப்பெரியதொரு அரசியல் பிரளயம் தலையெடுத்தது. பெரியதொரு அரசியல் சதி அரங்கேறியதை நாங்கள் எல்லோரும் பார்த்தோம். அதிலே முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரதிநிதிகளை வெறும் பகடைக்காயாக பாவித்து இந்த சதுரங்க விளையாட்டில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை காவு கொண்டு மிகப்பெரியதொரு அரசியல் சதியை அரங்கேற்றிவிடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த சக்திகள, முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் எடுத்த முடிவினால் தடுமாறிப்போனார்கள். அதுவும் மறைந்த எங்கள் தலைவரின் பாசறையிலே கற்ற விடயங்கள்தான்.

சவால் என்று வருகின்ற போது உம்ராவுக்கு சென்று, கஹ்பத்துல்லாஹ்வை தரிசிக்கின்றமை அவரது வழமை. அவற்றைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம். அனைவரையும் கப்பலேற்றி கொண்டு போகின்ற அந்த நிகழ்வு தலைவர் அவர்கள் மறைந்த அந்த வருஷம் எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும் அவருடைய அந்த உம்ரா பயணம்.தன்னுடைய இஹ்ராம் துணியை கலையாமல் ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக, இந்த நாட்டில் அடுத்த கட்டமாக வரப்போகின்ற தேர்தலை எவ்வாறு முகம் கொடுப்பது அதற்கான தயார் படுத்தல்களை செய்வதற்காக பக்கம்பக்கமாக அவர் ஆவணங்கள் தயாரித்துக்கொண்டிருந்தார். ஜித்தாவிலே இருந்து கொண்டு தன்னுடைய உம்ரா கடமையை முடிப்பதற்கு முன்பு தன்னுடைய சமூகம் சார்ந்த அரசியலை சாதுரியமாக கையாள்வதற்கு எதையெல்லாம் செய்யலாம் திட்டம் போட்டுக்கொண்டு செயற்பட்டார்.

எனக்கு இன்று போல ஞாபகம் இருக்கிறது நள்ளிரவு 10.30 மணிக்கு தலைவரிடமிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. சுமார் 40 நிமிடங்கள் அவர் என்னோடு பேசினார்.தொலைபேசி அழைப்பினுடைய நோக்கம் அன்று முஸ்லிம் காங்கிரஸுடைய பொதுச்செயலாளர் பொறுப்பிலே இருந்த எனக்கு முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் மரச்சின்னத்தை தான் அமைத்திருந்த தேசிய ஐக்கிய முன்னணி (நுஆ) கட்சிக்கு நாங்கள் சின்னத்தை மாற்றியெடுப்போம். சின்னத்தை மாற்றுவதற்கு தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் கட்சியின் செயலாளர் நான் தேர்தல் ஆணையாளருக்கு நான் கடிதம் எழுத வேண்டும். ஒரு பாராளுமன்ற தேர்தல் அறிவித்ததன் பின்னால் இரண்டு கட்சிகள் தாம் விரும்பினால் தமது சின்னங்களை மாற்றிக்கொள்ள முடியும் என்ற சரத்தினை மிக நுணுக்கமாக தேடிப்பிடித்து, முஸ்லிம் காங்கிரசை விடுத்து நாங்கள் ஒரு புதிய பொதுவான அரசியலுக்காக தயாராக வேண்டும் என்ற நோக்கிலே அதை மாற்றி எடுப்பதற்காக இது சரியா பிழையா என்பதற்கான அந்த விஷயத்தில் என்னை திருப்திப்படுத்துவதற்காகவே இது விவகாரமாக பேசினார்.

ஈற்றிலே உம்ரா முடித்து வந்தவுடனேயே எல்லோருக்கும் ஞாபகம் இருக்கும் அன்றைய ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டலில் மு.காவின் பேராளர் மாநாடு, விகாரமகாதேவி பூங்காவிலே  நுஆ கட்சியின் இன்னொரு பேராளர் மாநாடு. அவர் என்ன செய்யப்போகிறார் என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை இரு கட்சிகளிலுமிருந்து செயலாளர்கள் பதவி விலகினோம். தலைவரின் இந்த முடிவுகள் பற்றி அவர் யாரிடமும் சொல்லவில்லை. இராஜினாமா கடிதத்தை வாங்கினார் வாங்கி அவர் செய்த அடுத்த வேலை முஸ்லிம் காங்கிரஸ் பொதுச்சயலாளர் பதவியிலிருந்து நான் பதவியிறக்கப்பட்டு , மு காவின் செயலாளர் பதவிக்கு இந்த குருநாகல் மாவட்டத்திலிருந்து கட்சியின் மூத்த போராளியான டாக்டர் ஹப்ரத் நியமிக்கப்படுகிறார். எனக்கும் ஒரு கௌரவ பதவி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசிலே தரப்படுகின்றது. பிரதி தவிசாளர் என்று நினைக்கிறேன்.

எல்லோரும் ஆச்சிரியத்துடன் பார்த்தார்கள் முஸ்லிம் காங்கிரசின் தலைவரிடத்தில் செயலாளர் நம்பிக்கை இழந்து விட்டாரோ,திடிரென்று அவரது பதவி பறிக்கப்பட்டுவிட்டதென்று. கட்சி தலைமைக்கு விசுவாசமாக இருக்கவேண்டிய ஒரு பதவியாகிய செயலாளர் பதவியிலிருந்து ரவூப் ஹக்கீம் அகற்றப்பட்டார் என்ற விஷயம் எல்லோருக்கும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் போல இருந்தது. யாரும் பேசவில்லை தலைவர் சொன்னால் எதையும்  திருப்பிக்கேட்காமல் இருக்கின்ற போராளிகள் என்ற வகையிலே நாங்கள் இருந்தோம். விகாரமகாதேவி பூங்காவிலே தான் ரகசியம் என்னவென்று தெரிந்தது அங்கு பிரகடனப்படுத்தப்படுகிறது தேசிய ஐக்கிய முன்னணியின் (நுஆ) செயலாளராக முன்னர் நண்பர் ஹிஸ்புல்லாஹ் இருந்த இடத்திற்கு நான் நியமிக்கப்படுகிறேன். ஏனென்றால் தேசிய ஐக்கிய முன்னணிதான் தேர்தலில் களமிறங்கப்போகிறது அதிலேதான் நாங்கள் தேர்தல் கேற்கப்போகிறோம். மரச்சின்னம் அதற்கு மாற்றி எடுக்கப்படுகிறது.

தேசிய ஐக்கிய முன்னணியும், பொதுஜன ஐக்கிய முன்னணியும் அன்று தேர்தல் ஒப்பந்தம் செய்து  தலைவர் அவர்கள் அம்பாறை மாவட்டத்திலே பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதிரச்சின்னத்திலே கேட்பதற்கான ஏற்பாடு, தொப்பி மொஹிதீன்,அதாவுல்லா உட்பட ஏனைய உறுப்பினர்கள் மூன்று முஸ்லிம் உறுப்பினர்கள் கேட்பது. அதிலே கேட்பதற்காக விமல வீர திஸாநாயக்கவும், தேசிய பட்டியலுக்காக தெவரப்பெருமவும் போடப்படுகின்றார்கள். இப்படியெல்லாம் செய்யப்பட்டமை தலைவருடைய எதிர்பார்ப்பு மிகத்தெளிவாக சொன்னார் நிச்சியமாக எங்களுக்கு 11 ஆசனங்கள் வரும் என்று கணக்குப்போட்டு சொன்னார். தேர்தல் முடிவுகள் வந்தபோது தலைவர் எங்களோடு இருக்கவில்லை. அந்த கோரவிபத்தில் அவரை நாங்கள் இழந்தோம் . அல்ஹம்துலில்லாஹ்   அவர் சொன்ன வாக்கு அப்படியே பலித்தது.

அவர் சொன்னது போலவே 11 ஆசனங்களை நாங்கள் வென்றெடுத்தோம். ஏழு ஆசனங்கள் பொது முன்னணியுடன் கூட்டாக பெற்றோம்.நான்கு ஆசனங்களை நாங்கள் நுஆ கட்சியிலே வென்றெடுத்தோம். அந்த நான்கில் ஒரு ஆசனத்திற்குரியவனாக நான் பாராளுமன்றத்திற்கு மரச்சின்னத்திலே கண்டி மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டேன். எனக்கு இன்னும் ஞாபகமிருக்கிறது வேட்பாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு வெகு விமர்சையாக தாருஸ்ஸலாத்தில் நடைபெற்றபோது அதிலே என்னை ஆரத்தழுவி வடகிழக்கு வெளியிலே நீ எனது கட்சியின் முதலாவது தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினராக வருவாய் என்று சொன்னார். அத்தோடு இன்னொரு விடயத்தையும் சொன்னார் நீங்கள் என்னுடைய சபாநாயகராகவும் இருப்பீர்கள் என்றும் சொன்னார்.

அவர் அப்படி திட்டம் வைத்திருந்தார். அடுத்த பாராளுமன்றத்திலே பேரம் பேசுகின்ற ஒரு நிலையிக்கு தன்னுடைய கட்சியை கொண்டு வரவேண்டும். அதன்மூலம் சபாநாயகர் பதவியையும் நாங்கள் அடைய வேண்டும். என்பது அவரது மறைவுக்குப்பின்னால் பலருக்கு சொன்ன விடயங்களிலிருந்து நாங்கள் அறிந்து கொண்டோம். உண்மையில் எங்களது 11 ஆசனங்கள்தான் ஆட்சியை தீர்மானிக்கின்ற சக்தியாக இருந்தது.எங்களுடைய ஆசனங்கள் இல்லை என்றால் சந்திரிகா அம்மையார் ஆட்சி அமைத்திருக்க முடியாது. அந்த நிலைமையை கொண்டு வருவதற்காக அவர் தன்னுடைய இஹ்ராம் துணியை கலையாமல் செய்த அந்த அரசியல் சாகசங்களை இப்போது இரைமீட்டிப்பார்க்கிறோம்.

என்ன சவால் வந்தாலும் தலைவர் என்ன செய்திருப்பார், எப்படி நடந்திருப்பார் என்றெல்லாம் எண்ணிப்பார்க்கின்ற போது, ஒரு தேர்தல் காலத்திலே அவர் செய்கிற இந்த அசகாய சாமர்த்தியமான அரசியல் நகர்வுகள் என்கிற விஷயத்தில் அவருக்கு நிகர் அவர்தான்.

இன்று எல்லோரும் தடுமாறிப்போயிருக்கிறார்கள். நாடு முழுக்க ஒரு ஜனாதிபதி தேர்தலுக்கு முகம் கொடுப்பதற்கு பார்த்துக்கொண்டு இருக்கிறோம். அரசாங்கத்திலே இருக்கின்ற பங்காளிக்கட்சிகள் எல்லாம் அரசாங்கத்தின் பிரதான கட்சி என்ன முடிவு எடுக்கும் என்பதிலே எல்லோரும் அடிக்கடி சந்தித்து பேசிக்கொள்கிறோம். கள யதார்த்தங்களில் ஏதோ இருக்கத்தக்கதாக தலைமைகள் வேறு ஏதோ சிந்தனைகளில் இருப்பதைப்போல எங்களுக்கு தெரிகிறது. ஆனால் இந்த கள யதார்தங்களைப்பற்றிய எந்த புரிதலுமில்லாமல் குடும்பிச்சண்டை நடந்து கொண்டிருக்கிறது.

1988 ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதி தேர்தல் என்னுடைய நினைவுக்கு வருகிறது. எங்களது கட்சி சந்தித்த முதலாவது ஜனாதிபதி தேர்தல் இந்த நாட்டின் அரசியலையே தலைகீழாக புரட்டிப்போட்ட ஒரு தேர்தல் என்றுகூட சொல்லலாம். ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஆறில் ஐந்து பெரும்பான்மையோடு 77 ஆம் ஆண்டு தொடக்கம் 89 ஆம் ஆண்டு வரை ஒரு சர்வஜன வாக்கெடுப்பை மக்கள் மீது திணித்து ஸ்ரீமாவோ பண்டார நாயக்கவினது குடியுரிமையை பறித்து, மிகப்பெரிய ஜனநாயக விரோத நடவடிக்கையின் மூலம் ஒரு ஆட்சி நீடிப்பை பெற்று ஈற்றிலே வடக்கிலும் யுத்தம், தெற்கிலும் யுத்தம் இருபுறத்திலும் மிகப்பெரிய அரசியல் நெருக்கடிகள் மூண்டிருக்கின்ற நிலையில் அந்தக்கட்டத்திலே எங்களுக்கு என்ன நடந்தது என்று நான் நினைத்துப்பார்க்கிறேன்.

ஜே.ஆர்.ஜெயவர்தன வின் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதற்காக பெரிய எதிர்க்கட்சி கூட்டணி "ஜனநாயக மக்கள் கூட்டணி" என்ற பெயரில்  உருவாகிசெயற்பட்டது. அதிலே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் புரட்சிகரமான அரசியல் இயக்கம் இணைந்திருந்தது. இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் அதிருப்தி அடைந்த முஸ்லிம்கள் தங்களுடைய அடையாள அரசியலை நிலைநிறுத்துவதற்காக ஆரம்பித்த போராட்டம், நடந்து முடிந்த மாகாண சபை தேர்தல்களிலே எங்களுக்கு புதியதொரு அரசியல் அறிமுகத்தை நாடு முழுவதிலும் உருவாக்கி தந்திருந்தது. வடகிழக்கிலே நாங்கள் உத்தியோக பூர்வ எதிர்க்கட்சி. வடகிழக்குக்கு வெளியே 12 ஆசனங்கள் மொத்தம் 29 மாகாண சபை ஆசனங்களோடு இருந்த எங்களை சேர்த்துக்கொண்டு ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தை வீட்டுக்கனுப்ப வேண்டும் என்பதே இந்த கூட்டணியின் நோக்காக இருந்தது.

இந்த நேரத்தில் நினையாப்புறமாக சிலவிடயங்கள் நடந்தேறின. எங்களுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குமான தேர்தல் உடன்படிக்கையில் ஒரு முரண்பாடு வந்துவிட்டது. அந்த முரண்பாட்டின் பின்னர் இரவோடு இரவாக பிரேமதாச எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடாத்தினார். அதன்பயனாகத்தான் சகோதரர் ரவூப் செயின் சொன்ன அந்த சாதனைகளில் ஓன்று நிறைவேறுகிறது. இந்த நாட்டின் அரசியல் சாசனமே மாற்றி அமைக்கப்படுகிறது. ஆறில் ஐந்து பெரும்பான்மை இந்த பாராளுமன்றம் கலைப்பதற்கு ஒரு நாள் இருக்கத்தக்கதாக 15 வது சரத்து திருத்தப்பட்டு இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு மாத்திரமல்லாமல் சகல சிறிய கட்சிகளுக்கும், பல சிறுபான்மை இயக்கங்களுக்கும் ஒரு அரசியல் அடையாளத்தை தனித்துவத்தோடு அடையக்கூடிய வாய்ப்பை ஆக்கித்தந்த பெருமைக்குரிய பாரிய சாதனையை செய்தது எங்களுடைய தலைவருடைய சாணக்கியம் என்றால் அது மிகையாகாது.

ஒரு நள்ளிரவிலே அனைத்தும் நடந்து முடிந்து அடுத்தநாள் பாராளுமன்றத்திலே அரசியல் சாசனத்திற்கு திருத்தமும் பிரேரிக்கப்பட்டு அது இரவோடிரவாக வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டது.

அடுத்து வருகிற தேர்தலில் இவ்வாறான உபாயத்தை கையாள வேண்டிவருமோ தெரியாது. 1988 ஜனாதிபதி தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் ஆதரவளிப்பதாக நாங்கள் சொல்லவில்லை. ஸ்ரீமாவோ பண்டார நாயக்க எங்களுக்கு துரோகம் இழைத்து விட்டார். அவரைத்தவிர யாருக்கும் வாக்களிக்கலாம். இதனைத்தான் நாங்கள் சொன்னோம். ஏனென்றால் அந்த நேரத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்க சொல்ல முடியாத நிலை. இதனை பிரேமதாசாவுக்கும் தெளிவு படுத்தினோம் அவர் அதனை ஏற்றுக்கொண்டார் இதன் விளைவாகதான் பிரேமதாச ஜனாதிபதியானார். இது எதிர்காலத்தில் எங்களுக்கு இன்னொரு உபாயம்.இவ்வாறான மாற்றுவழிகளை எங்களுக்கு சொல்லித்தந்த பெருந்தலைவராகதான் அவரை என்றும் நாங்கள் நினைவு கூறுகிறோம்.

தேர்தல்காலங்களிலே தலைவரின் சுறுசுறுப்பை அருகிலிருந்து பார்த்தவர்கள் நாங்கள் இங்கு நிறையப்பேர் இருக்கிறோம். ஜனாதிபதி தேர்தல் என்றால் எப்படி அடுத்த பாராளுமன்ற தேர்தலில் ஆசனங்களை கூட்டிக்கொள்ள முடியும். அதனோடு சமுகம் சார்ந்த விடயங்களை எப்படி சாதித்துக்கொள்வது. என்பதை வடிவமைப்பதில் தொடர்ந்தும் ஊணின்றி, உறக்கமின்றி உழைக்கின்ற அந்த தலைமைதான இழந்து இழந்து பெருமூச்சு விட்டுக்கொண்டிருக்கிறது. ஒரு சமூகத்தின் அரசியல் தலைமை என்றால் என்ன? அதனுடைய ஆளுமையின் அம்சங்கள் என்ன? என்பதற்கான அடையாளச்சின்னம் அவர். அந்த அடையாளச்சின்னத்தைத்தான் நாங்கள் இன்று நினைவுகூர்ந்து கொண்டிருக்கிறோம்.அந்த தலைவனைப்போல ஒருத்தலைவனை இனிமேல் நாங்கள் பார்க்க முடியாது. தன்னுடைய சொந்த குடும்ப உறுப்பினராகவே கட்சியின் உறுப்பினர்களைப்பார்த்த ஒரு தலைவனைத்தான் நாம் இழந்துள்ளோம்.

பெரும் விருட்சமொன்றை எமக்கு அவர் தந்துவிட்டு சென்றுள்ளார். அதை தரிப்பதற்கு எத்தனை கோடாரிக்காம்புகள் வந்தாலும் அதனை தாங்கிநிற்கின்ற திராணியை போராளிகளுக்கு அவர் தந்திருக்கிறார். சமூகம் பாரிய சவால்களை சந்தித்தபோது நாங்கள் இணைந்து செயற்பட்டோம். அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாத செயற்பாடு எங்கிருந்து உருவெடுத்தது என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.இவர்களை யார் இயங்கினார்கள்?அது செய்திருக்கின்ற விபரீதம் இன்று எங்களை மட்டும் பாதிக்க வில்லை தமிழகத்தை பாதித்திருக்கிறது, கேரளத்தை பாதித்திருக்கிறது,மாலை தீவையும் அது பாதிக்கலாம் என்ற ஒரு அச்சத்தை உருவாக்கி எந்த சக்தி இதில் குளிர்காய நினைக்கிறது என்பதைப்பற்றி நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும்.  இந்த இந்து சமுத்திரத்தின் தென்பிராந்தியத்திலிருக்கின்ற முஸ்லிம் சமூகம் தன்னை ஒன்றுபடுத்தி ஒன்றாக நின்று இந்த சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டும். எங்களை கூறுபோட்டு எங்களுக்குள்ளே குழப்பத்தை ஏற்படுத்த நினைக்கின்ற சக்திகளின் மூலவித்தை நாங்கள் அடையாளம் காண வேண்டும் ஜனநாயக ரீதியாக அதெற்கெதிரான பலமான ஒரு அணியாக நாம் இருக்க வேண்டும். தலைவர் இருந்திருந்தால் இன்று அதைத்தான் செய்திருப்பார். அந்த தலைவனைப்போல அடுத்த கட்ட அரசியலை பொறுப்புணர்வோடு நாங்கள் கையாள்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்பாலிக்க வேண்டும் என்று பிரார்த்தித்தவனாக சகல தரப்புக்களையும் இணைத்த பலமான ஒரு இயக்கமாக இந்த இயக்கத்தை புடம் போடுவதற்கு புறப்படுவோம் வாருங்கள்.

0 கருத்துகள்:

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by