Related Posts with Thumbnails

ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

கட்டுரை




ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஸ்தாபக தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் .அஷ்ரப் அவர்களின் 19 வது நினைவு தினத்தை முன்னிட்டு இந்த கட்டுரை வெளியிடப்படுகின்றது

தனித்துவ கட்சிமீதான அஷ்ரபின் தணியாத தாகம்

- நாச்சியாதீவு பர்வீன்.

இலங்கை அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத அரசியல் கூறாக முஸ்லிம் அரசியலை கொள்ள முடியும்.  பெரும் தேசியக்கட்சிகளின் ஆதரவுத்தளத்தில் நின்று செயற்பட்டு வந்த முஸ்லிம் சமூகம் ஒருகட்டத்தில் இன்னொரு சிறுபான்மை சமூகமான தமிழ் சமூகத்தின் அரசியல் பங்காளிகளாக செயற்பட்டு வந்தன. ஆனால் பெருந்தேசிய கட்சிகள் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றியது போலவே தமிழர்கள் சார்ந்த கட்சியும் முஸ்லிம் சமூகத்தை ஏமாற்றியது. இதனால் விரக்தியுற்ற முஸ்லிம் தலைமைகளின் மாற்றுத்தீர்மானம்தான் முஸ்லிம்களுக்கான தனிக்கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் தனித்துவமான கட்சி உருவாகியது.
ஆரம்பகாலத்தில் சமூதாய சிற்பிகளாக  செயற்பட்ட அறிஞர் சித்திலெப்பை, ரி.பி.ஜாயா, சேர்.ராசிக் பரீட் , டாக்டர் பதியுதீன் மஹ்மூத் போன்றவர்கள் தம்மாலான சமூக பணிகளை மேற்கொண்டாலும் அது முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்கான பரிபூரண தளத்தை உண்டுபண்ணவில்லை. அவர்களது காலத்தில் தனியான முஸ்லிம் கட்சி ஒன்றின் தேவைப்பாடு தொடர்பில் சிந்தனைகள் எழுவதற்கு ஆணித்தரமான காரணங்கள் எதுவும் இருக்கவில்லை ஆனால் பிற்காலத்தில் அது உணரப்பட்டது. அவர்களின் பின்னர் பாராளுமன்றத்தினை பிரதிநிதிப்படுத்திய முஸ்லிம்களினால் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அடைவுகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே முஸ்லிம் சமூகத்தினை ஒன்றிணைத்து பலமான அரசியல் சக்தியாக அதனை மாற்றவேண்டிய தேவை உணரப்பட்டது. அந்த தேவையை நிறைவேற்றும் சக்தியாக அஷ்ரப் தன்னை உருவாக்கிக் கொண்டார்.

1980 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தோற்றமானது வெறுமனே எழுந்தகமாக எடுக்கப்பட்ட முடிவு கிடையாது. அஷ்ரப் எனும் அரசியல் மேதையின் தூர சிந்தனையின் வெளிப்பாடாகவே அது அமைந்தது. அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் தனித்துவமான குரலாக இருக்கவேண்டும் என்ற பேரவாவின் அடையாளமாகவே இந்த கட்சி தோற்றம் பெற்றது.       எல்லா நிலையிலும் புறக்கணிக்கப்பட்ட ஒரு சமூகமாக முஸ்லிம் சமூகம் இருப்பதை கண்டு மர்ஹூம் அஷ்ரப் மனம் வெதும்பினார். முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்றவர்கள் தாம் சார்ந்த கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருந்தனர் . அதனால் அவர்களால் தமது சமூகம் தொடர்பில் வாய்திறக்க முடியாத நிலை இருந்தது. அத்தோடு  குறுகிய அரசியல் காரணங்களை அடிப்படையாக வைத்து அவ்வப்போது  உருவாகிய பல முஸ்லிம் கட்சிகள் அடையாளமற்று காணாமல் போயின. இந்நிலையில் பலத்த போராட்டங்களுக்கு மத்தியில் உருவாக்கப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தற்போது நீண்ட நெடுமரமாக கிளைவிட்டு செழித்து வளர்ந்துள்ளமை அஷ்ரப் அவர்களின் தூய எண்ணத்தின் அடையாளமே. 

இலங்கை அரசியல் வரலாற்றை  எழுதுகின்ற எவரும் இனிமேல் அஷ்ரபுக்கு முந்திய அரசியல் வரலாறு, அஷ்ரபுக்கு பின்னரான வரலாறு என்று பிரித்தே எழுத வேண்டும். அந்தளவுக்கு இலங்கை அரசியல் வரலாற்றில் மர்ஹூம் அஷ்ரப்  அவர்களின் காத்திரமான பங்களிப்பும்,சடுதியான முடிவுகளும் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தின. ஒரு காலத்தில் முஸ்லிம் சமூகத்தின் வாக்குகள் வெறும் செல்லாக்காசுகளாகவே பயன்படுத்தப்பட்டன. ஆனால் அஷ்ரப் அவர்கள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை நிறுவி அதன் மூலம் கிடைக்கப்பெற்ற அரசியல் அதிகாரத்தின் பயனாக  ஆட்சியை மாற்றுகின்ற அல்லது தீர்மானிக்கின்ற சக்தியாக  முஸ்லிம் சமூகத்தின் அரசியல் சக்தியாக நிறுவிக்காட்டினார்.

சட்டக்கல்லூரி மாணவனாக இருந்த காலத்திலேயே முஸ்லிம் சமூகம் தொடர்பில் கரிசனையும்,அக்கறையும் மர்ஹூம் அஷ்ரப் அவர்களிடத்தில் மேலோங்கி காணப்பட்டது. அதன்விளைவாக வெவ்வேறான அரசியல் கட்சிகளுடன் அவர் பயணித்தார். ஆனால் முஸ்லிம் சமூகத்தின்  உரிமைகளை பெற்றுக்கொள்வதிலும், அதன் அபிலாஷைகளை நிறைவேற்றிக்கொள்வதிலும் ஏற்பட்ட தேக்க நிலையே அஷ்ரப் அவர்களின் தனித்துவமான அரசியல் கட்சிக்கு வழிவகுத்தது எனலாம். பெருந்தேசிய கட்சிகளின் நிழலில் பயணித்த முஸ்லிம் அரசியல் தளம் அஷ்ரபின் முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கத்தின் பின்னர் அதனை சுற்றி நகரத்தொடங்கியது. இதனால் பெரும் தேசிய கட்சிகளில் அங்கம் வகித்த முஸ்லிம் பிரதிநிதிகள் அஷ்ரப்பை வெகுவாக எதிர்த்தார்கள். அதற்க்கான காரணம் அஷ்ரப் அவர்களின் தனிக்கட்சி தமது வாக்கு வங்கிகளில் பலத்த பின்னடைவை உண்டு பண்ணும் என்பதனை அவர்கள் உணர்ந்தார்கள்.
முஸ்லிம் சமூகத்தின் வாக்குப்பலத்தின் பெறுமானத்தை மூலதனமாக்கி பேரம் பேசுகின்ற சக்தியாக அஷ்ரப் உருவெடுத்திருந்தார். அஷ்ரபின் இந்த தார்மீக போராட்டத்தில் மக்கள் கவர்ந்திழுக்கப்பட்டார்கள்.இதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கான மவுசு நாளுக்குநாள் அதிகரித்தது. 1985 ஆம் ஆண்டு தலைவர் அஷ்ரப் கட்சிப்பணிகளில் சற்று ஓய்வுடன் இருந்தார் ஆனால் 1986ஆம் ஆண்டு பாஷா விலாவில் நடைபெற்ற கட்சியின் 6வது தேசிய மாநாட்டில் போராளிகள் மற்றும் புத்திஜீவிகளின் ஆதரவினை கண்டு மீண்டும் புத்துணர்ச்சி பெற்று கட்சியை மேலும் விரிவாக்கம் செய்யும் வேலையில் ஈடுபட்டார்.

முஸ்லிம் காங்கிரஸ் சில முக்கிய கோரிக்கைகளை முன்னிறுத்தி செயற்பட்டது. அதிலும் அபிவிருத்தி அரசியலை விடவும் சமூகத்தின் உரிமையை பெற்றுக்கொடுப்பதிலும் அதனை பாதுகாப்பதிலும் உறுதியாக நின்றது. இலங்கை முஸ்லிம்கள் தனித்துவமிக்க ஒருதேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதே அதன் தாரக மந்திரமாக இருந்தது. சிங்களவர்களையும்  , தமிழர்களை போல முஸ்லிம்களும் ஒரு தேசிய இனமாக அங்கீகரிப்பதோடு இனரீதியாக அதிகாரபரவலாக்கத்தில் முஸ்லிம்களுக்கான தனியலகுக்கோரிக்கை கருத்தில் கொள்ளப்படவேண்டும் என்பதில் உறுதியாக அஷ்ரப் இருந்தார். அத்தோடு முஸ்லிம்களின் தனித்துவமான சட்டமான ஷரிஆ சட்டத்தை மாற்றும் முயற்சியை அரசு கைவிட வேண்டும் என்று உறுதியாக குரல் எழுப்பியது முஸ்லிம் காங்கிரஸ். அஷ்ரபின் உரிமை சார்ந்த கோஷங்கள் முஸ்லிம்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றன.
1987 ஆம் ஆண்டு பிரதேச சபைத்தேர்தல் நியமனப்பத்திரம் தாக்கல் செய்கின்ற போது முஸ்லிம் காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கவில்லை. இருந்தும் மு.கா சுயேற்சையாக கிழக்கில் களமிறங்கியது. அந்த தேர்தலை பகிஷ்கரிக்குமாறு விடுதலைப்புலிகள் அனைத்து தரப்பினருக்கும் அச்சுறுத்தல் விடுத்தனர் அன்றைய ஆளும்தரப்பே இந்த அச்சுறுத்தலினால் ஆடிப்போயிருந்த போது தலைவர் அஷ்ரப் அவர்கள் தமது ஆதரவாளர்களுடன் கொழும்புக்கு சென்று அந்த தேர்தலுக்கு முகம் கொடுக்க தயாரானார். இதில் சில முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் உயிருக்கு பயந்து தாமாகவே விலகிக்கொண்டார்கள். ஆனால் எவ்விதமான உயிராபத்தையும் எதிர்கொள்ள குறிப்பிட்ட சிலர் பெருந்தலைவர் அஷ்ரபுக்கு துணையாக இருந்தனர். மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் இந்த துணிச்சலான முடிவு தேசியத்தில் பிரசித்தமாக பேசப்பட்டது. எல்லா ஊடகங்களும் தலைவர் அஷ்ரபை மையப்படுத்தியே செய்திகளை வெளியிட்டன. அன்றைய தினத்திலிருந்து முஸ்லிம்கள் மத்தியில் புகழ் மிக்க ஒரு தலைமையாக அஷ்ரப் அவர்கள் நோக்கப்பட்டார்கள்.

1988 ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சி தேர்தல் ஆணையாளரினால் அங்கீகரிக்கப்பட்டு முழுநேர அரசியல் கட்சியாக பரிணமித்தது. 1988 ஆம் ஆண்டு மாகாண சபைத்தேர்தலில் வடகிழக்கு வெளியே பிரசித்தம் பெற்ற ஒரு முஸ்லிம் கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விளங்கியது. அவ்வாறே இணைந்த வடகிழக்கு மாகாண சபைத்தேர்தலில் 17 ஆசனங்களை முஸ்லிம் காங்கிரஸ் பெற்று இலங்கை அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு கட்சியாக தன்னை நிரூபித்தது. 1989 ஆம் ஆண்டு அஷ்ரப் அவர்கள் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற பிரதிநியாக தெரிவு செய்யப்பட்டார். தனது பாராளுமன்ற கன்னியுரையில் முஸ்லிம் சமூகத்திற்கான தனித்துவமான ஒரு கட்சியின் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். 12.5 % விகிதமாக இருந்த பிரதிநிதித்துவ அரசியல் விதியை சிறிய கட்சிகளுக்கு இலகுவில் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ளும் வகையில்  5% வெட்டுப்புள்ளியாக மாற்றியது அஷ்ரபின் அரசியல் அதிகாரத்தின் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட பெரும் வெற்றியாகும். இதன் பிரதிபலனை தற்போது சிறிய கட்சிகள் பலவும் அனுபவிக்கின்றன. மக்கள் விடுதலை முன்னணி  உட்பட என்பது வரலாற்றுப்பதிவாகும்.

மிகச்சிறந்த இலக்கிய வாதியாகவும், எழுத்தாளராகவும்,மேடைப்பேச்சாளராகவும் இருந்த பெருந்தலைவர் அஷ்ரப் தமது கொள்கைகளை மக்கள் மயப்படுத்தும் ஊடகமாக இவற்றை பயன்படுத்தினார். இதனால் இலகுவில் அஷ்ரபின் கொள்கைகள் பாமர மக்களையும் சென்றடைந்தது எனலாம். கட்சிக்கான எழுச்சிப்பாடல்கள்,வீரியமிக்க புரட்சிக்கவிதைகள், உணர்வுபூர்வமான மேடைப்பேச்சுக்கள் என மக்களை கவருகின்ற சகல யுக்திகளும் தலைவர் அஷ்ரப்பிடம் இருந்தன. இதனால் அன்று கோலோச்சிய முஸ்லிம் இலக்கிய வாதிகள் அஷ்ரபை நேசித்தார்கள். அவரின் புகழ் பாடினார்கள் அவரின் அறப்போராட்டத்தில் தங்களையும் இணைத்து இந்த கட்சியின் பங்காளிகளாக தம்மை மாற்றிக்கொண்டார்கள்.

1994 ஆம் ஆண்டு அஷ்ரப் மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு முழு அமைச்சராகின்றார். மு.காவின் வெற்றிக்காக கிடைத்த தேசியப்பட்டியலை  இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைமை ரவூப் ஹக்கீமுக்கு வழங்கி அவர் குழுக்களின் பிரதித்தலைவராக வருவதற்கு வழிசமைத்து கொடுக்கிறார் மர்ஹூம் அஷ்ரப். ரவூப் ஹக்கீம் என்ற இந்த ஆளுமையின் வீரியத்தை அன்றே அஷ்ரப் அவர்கள் அறிந்தமையும் தனக்கு பின்னால் ஒரு தலைமையை அடையாளப்படுத்தியுமே ரவூப் ஹக்கீமுக்கு தேசியப்பட்டியல் வழங்கப்பட்டதாக அஷ்ரப் அவர்களின் மரணத்தின் பின்னர் பேசப்பட்டது. அது உண்மையும் கூட. 1989 ஆம் ஆண்டு தனிமரமாக பாராளுமன்றம் சென்ற அஷ்ரப் 1994 ஆம் ஆண்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆசனங்களுடன் பாராளுமன்றத்தினுள் நுழைந்தார்.
உரிமை கோஷங்களை மூலதனமாக வைத்து இயங்கிவந்த அஷ்ரப் அவர்களின் அரசியல் வியூகம் 1994 ஆம் ஆண்டின் பின்னர் உரிமை சார்ந்த விடயங்களோடு அபிவிருத்தியின் பக்கமும் தனது பார்வையை செலுத்தியது. ஏராளமான தொழில் வாய்ப்புக்கள், அபிவிருத்தி திட்டங்கள், சமூகம் தொடர்பிலான பல கோரிக்கைகள் என்று தனக்கு கிடைத்த வாய்ப்பினை மிகவும் சமயோசிதமாக பயன்படுத்தி பாரிய அபிவிருத்தியை மேற்கொண்டார். இதனால் பெரும்பான்மை அரசியல் சக்திகள் அஷ்ரபிமீது பொறாமை கொண்டனர். அஷ்ரபை  வீழ்த்த பல்வேறு சூழ்ச்சிகளை மேற்கொண்டனர். அவர்களின் சூழ்ச்சிகள் எதுவும் பழிக்கவில்லை மாறாக அஷ்ரப் தொட்டதெல்லாம் பொன்னாக மாறியது அவரை விமர்சித்தவர்கள், அவர்மீது பொறாமை கொண்டு வீண்பழி சுமத்தியவர்கள்,அவரை ஒரு இனவாதியாக சித்தரித்தவர்கள் எல்லோரும் ஒரு கட்டத்தில் ஓய்ந்து போயினர் அஷ்ரப் தனது பணியில் காட்டாறு போல வேகமாக முன்னேறிக்கொண்டே போனார். அஷ்ரபின் சேவைகளில் மிக முக்கியமானவையாக கருதக்கூடிய பல சேவைகள் உள்ளன அதில் ஒலுவில் பல்கலைக்கழகம், ஒலுவில் துறைமுகம், கல்முனை அஷ்ரப் மருத்துவமனை என்பன சிலவாகும்.

அஷ்ரப் அவர்களின் காலத்தில் துறைமுக அதிகார சபையில் பல்லாயிரம் முஸ்லிம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்தும் இங்கு குறிப்பிட வேண்டிய முக்கிய விடயமாகும். அஷ்ரபின் ஏறுமுகத்தில் உள்ளூர வெந்து கொண்டிருந்த சிலரின் சூழ்ச்சியால் 2000 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டு பெருந்தலைவர் அஷ்ரப் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த கொலையின் சூத்திரதாரிகள் இதுவரை அடையாளம் காணப்படாமல் மர்மமாகவே இருப்பது குறிப்பிடத்தக்கது.  அஷ்ரபின் இழப்பு முஸ்லிம் சமூகத்தை மீண்டும் அனாதைகளாக ஆக்கியது எனலாம். அஷ்ரபின் வளர்ச்சியில் வெறுப்புற்றிருந்த பலர் அஷ்ரப் அவர்களின் மரணத்தின் பின்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அழிந்து போய்விடும் என்று கனவு கண்டார்கள். பிற்காலத்தில் அவர்கள் கண்டது கனவு மட்டுமே என்பது நிரூபணமாகியது.

அஷ்ரப் விட்ட இடம்.

2000 ஆம் ஆண்டு அஷ்ரப் அவர்களின் அகால மரணத்தின் பின்னர் கட்சியின் தலைமைப்பொறுப்பானது தலைவர் ரவூப் ஹக்கீமிடம் வருகிறது. முஸ்லிம் காங்கிரசை மர்ஹூம் அஷ்ரப் விட்ட இடத்தலிருந்து தூக்கி சுமக்கின்ற தார்மீக பொறுப்பனாது அவரின் தோள்களில் சுமத்தப்படுகின்றன. தேர்தல் காலம் கிழக்கில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்தும் கிழக்குக்கு வெளியே குறிப்பாக கண்டியில் மரச்சின்னத்திலும் மு.கா களமிறங்கியது. அந்த தேர்தல் முஸ்லிம் காங்கிரசுக்கு சவால் மிக்க தேர்தலாக அமைந்தது. அதிலும் தலைவர் ரவூப் ஹக்கீமை தோற்கடித்து முஸ்லிம் காங்கிரஸ் என்ற கட்சியை அழித்துவிட ஆளும் கட்சியே திட்டம் தீட்டியது. இதற்காக உட்கட்சி பூசலை உருவாக்கியது, கட்சிக்குள் இருந்தே பிளவுகளையும், முரண்பாடுகளையும் தோற்றுவித்து பிரித்தாளும் தந்திரத்தை மேற்கொண்டது. இன்னும் சொல்லப்போனால் பெருந்தலைவர் அஷ்ரப் அவர்களை பலவீனப்படுத்த எடுத்த முயற்சிகளைவிடவும் பலமடங்கு அழுத்தங்கள் தலைவர் ரவூப் ஹக்கீமை பலவீனப்படுத்தவும்,தோல்வியடைய செய்யவும் முன்னெடுக்கப்பட்டன.
முஸ்லிம்களின் சுமார் 10 உயிர்களை அந்த தேர்தல் காவுகொண்டது. இருந்தும் அஷ்ரபின் மரணம் தந்த மக்கள் அலை அந்த தேர்தலில் முஸ்லிம் காங்கிரசுக்கு முன்னரைவிடவும் அதிகமான ஆசனங்களை பெற்றுக்கொடுத்தன. தலைவர் ரவூப் ஹக்கீம் கண்டி மாவட்டத்தில் மரச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மர்ஹூம் அஷ்ரப் அவர்களுக்கு வழங்கப்பட்ட அதே கௌரவமும்,அந்தஸ்த்தும் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கட்சி தொண்டர்களால் வழங்கப்பட்டது. கட்சியின் ஆதரவாளர்களை, தொண்டர்களை மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் போராட்ட வீரர்களாக விழித்தார். எனவே அவர்களை போராளிகளே என்று வாஞ்சையுடன் விழித்தார். பின்னர் தலைவர் ரவூப் ஹக்கீமும் அதே முறைமையை பின்பற்றினார்.

தலைவர்  ரவூப் ஹக்கீம் இந்த கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்று இப்போது 19 வருடங்கள். இந்த கால எல்லையில் முஸ்லிம்களின் கட்சியான இந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை பலவீனப்படுத்த பலர் முயற்சிகள் மேற்கொண்டுதான் வருகின்றார்கள். அவற்றை சாதுரியமாக எதிர்த்து கட்சியை வீழ்ச்சிப்பாதையிலிருந்து மீட்டெடுத்து இயங்கிக்கொண்டிருக்கிறார் இன்றைய தலைவர் அமைச்சர் ஹக்கீம். பெருந்தலைவரின் காலத்தை விடவும் பெரும் சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் இன்றைய தலைவருக்கு தொடர்ந்தும் ஏற்பட்டு வருகிறது. அவ்வப்போது கிளர்ந்தெழுகின்ற இனவாத பேய்களிடமிருந்து முஸ்லிம் சமூகத்தை சேதாரமில்லாமல் பாதுகாக்குகின்ற அரும்பணி அவருக்கு எழுந்துள்ளது. அந்தப்பணியில் அவர் காத்திரமாக இயங்கி வருவது தனது பணியை அவர் புறக்கணிக்கவில்லை என்பதனை தெளிவு படுத்துகின்றது.

மர்ஹூம் அஷ்ரப் மரணித்து சுமார் 19 வருடங்கள் ஆனபோதும் மக்கள் மனதைவிட்டு நீங்காத உன்னத தலைவனாக இன்னும் ஆராதிக்கப்படுவது அவரின் நேர்மையான மக்கள் பணிக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கொள்ள வேண்டும். இலங்கை முஸ்லிம்களின் உரிமைக்குரலாக அஷ்ரப் வகுத்த அதே பாதையில் முஸ்லிம் காங்கிரஸ் இன்னுமின்னும் வீரியத்துடன் எழுச்சியடைய வேண்டும். வீணான முரண்பாடுகள்,தலைமைத்துவ ஆசைகள்,காட்டிக்கொடுப்புக்கள் என்று கொஞ்சமும் குறைவில்லாமல் தற்போதும் கட்சிக்குள் எழுந்தாலும் இந்த கட்சியின் மெய்யான போராளிகள் அவற்றை முறியடித்து இந்தக்கட்சியை பாதுகாப்பதில் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு பக்கபலமாக இருக்கின்றனர்.

       19 வது நினைவு தினம்

மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் 19வது நினைவு தின நிகழ்வு குருநாகல், சியம்பலாகஸ்கொடுவயில்  இம்முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ரிஸ்வி ஜவஹர்ஷா அவர்களினதும் அந்த மாவட்டத்து மத்திய குழுவினரினதும் வேண்டுகோளுக்கு இணங்க இந்த நிகழ்வு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சட்டத்தரணி ரிஸ்வி ஜவஹர்ஷா மூன்று முறைகள் வடமேல் மாகாண சபையில் முஸ்லிம் காங்கிரசின் பிரதிநிதியாக சபையை அலங்கரித்தவர். குருநாகல் மாவட்டத்து முஸ்லிம்களின் பாராளுமன்ற கனவை நிறைவேற்ற இருக்கின்ற ஒரேயொரு தெரிவாக கணிக்கப்படுபவர். சுமார் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட குருநாகல் மாவட்ட முஸ்லிம்களின் எதிர்பார்ப்பாக அண்மைக்காலமாக மிளிரும் ரிஸ்வி ஜவஹர்ஷா கோடிக்கணக்கான ரூபாய்களுக்கான அபிவிருத்தியையும, ஏராளமான தொழில் வாய்ப்புகளையும் அந்த மாவட்டத்திற்கு பெற்றுக்கொடுத்தவர்.

அண்மையில் நடத்தப்பட்ட கூலிப்படை குண்டுத்தாக்குதலின் விளைவாக குருநாகல் மாவட்டத்தில் அதிகமான முஸ்லிம் இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட போது அவர்களின் விடுதலைக்காக களத்தில் நின்று செயற்பட்டவர். வெறுமனே குருநாகல் மாவட்டத்தில் கைதானவர்களை மட்டுமே கருத்திற்கொள்ளாமல் நாடளாவிய ரீதியில் கைது செய்யப்பட்டவர்களின் விடுதலைக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகமான தாருஸ்ஸலாமில் அமைக்கப்பட்ட செயலணியில் முக்கிய செயற்பாட்டாளராக செயற்பட்டவர். எனவே வடக்கு,கிழக்கை தாண்டி செறிவான முஸ்லிம் வாக்குகளையும், முஸ்லிம் காங்கிரசின் ஆதரவு தளத்தையும் கொண்ட குருநாகல் மாவட்டம் மறைந்த பெருந்தலைவரின் நினைவு தினத்தை ஞாபகப்படுத்த சிறந்த தெரிவுதான். எல்லாம் வல்ல இறைவன் மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களுக்கு உயர்தரமான சொர்க்கத்தை வழங்குவதோடு, இன்றைய தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் நீண்ட ஆயுளை வழங்கி சமூகப்பணியில் இன்னும் தீவிரமாக இயங்க உதவி புரிவானாக.

0 கருத்துகள்:

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by