Related Posts with Thumbnails

வெள்ளி, 18 டிசம்பர், 2009

சட்டியிலேயே கிடந்து கொதிப்போமா? அல்லது அடுப்பில் விழுந்து எரிவோமா?



இன்றைய ஊடகங்களின் தலைப்புச் செய்தியே எதிவரும் ஜனாதிபதி தேர்தல் பற்றித்தான், இலங்கையின் பட்டி தொட்டி என்று எல்லா முனைகளிலும், எல்லா தரப்பினரும் குசுகுசுக்கும், வாதிக்கும் விடயம் எதிவரும் ஜனாதிபதி தேர்தல், இலங்கையையும் தாண்டி உலக அரசியல் அரங்கில் இலங்கையின் இந்த ஜனாதிபதி தேர்தல் பற்றிய அவதானிப்பு வெகுவாக அதிகரித்துள்ளது எனலாம், எப்படியோ ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியும் அறிவிக்கப்பட்டு, நோமிநேசன் கூட கட்டியாகிவிட்டது, சுமார் 22 பேர்கள் இம்முறை தேர்தல் களத்தில் குதித்துள்ளனர், இதில் பிரதானமாக இருவர் மட்டுமே களத்தில் வாக்கு வேட்டைக்காக குதித்துள்ளார்கள் என்பது
எல்லோரும் அறிந்த விடயமாகும், ஒருவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மற்றவர் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா!
இருவரும் ஒரே அணியில் கட்டிப் புரண்டவர்கள்தான் இருந்தும் ஆசை யாரைத்தான் விட்டு வைத்தது அந்த வகையில் நாட்டு மக்களுக்காக சரத் பொன்சேகா! தன்னை அரசியலில் ஈடு படுத்தியுள்ளாராம் (நல்லாவே காதில் பூ சுத்துகிறார்).

இந்த தேர்தலை மிகவும் ஆழமாக அவதானிக்கவும், ஆராயவும் வேண்டியுள்ளது, அதற்காக வலுவான பல காரணங்கள் உள்ளன,மட்டுமன்றி சிறுபான்மையினர் பற்றிய இரண்டு பிரதான வேட்பாளர்களினதும் அவதான குவிப்பு பற்றியும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

01 ) மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசியல் புலம்.
02 ) ஜெனரல் பொன்சேகா அவர்களின் அவர்களின் அரசியல் புலம்.
03 ) சர்வதேசத்தின் நிலைப்பாடு
04 ) சிறுபான்மை இனக் குழுமத்தின் நிலைப்பாடு.

மேற்சொன்ன தலைப்புகளில் இந்த ஜனாதிபதி தேர்தல் பற்றிய ஆய்வினை மேற்கொண்டால் இலகுவாக இருக்கம் எனக் கருதுகிறேன்.

01 ) மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசியல் புலம்

யுத்தம் தொடர்பான வெற்றியை மூலதனமாக வைத்தே மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன் எதுத்துச்செல்கின்றார், இது பெரும்பான்மை சிங்கள மக்களின் மனதில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பற்றிய ஒரு மாய விம்பத்தை
தோற்றுவித்துள்ளது, இலங்கையின் மொத்த சனத்தொகையில் சுமார் 74 வீதமானவர்கள் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களாவார்கள்.அதிலும் 65 வீதமானவர்கள் கிராமங்களை அண்டிய பிரதேசங்களில் வாழ்பவர்கள், இந்த 65 வீதமான கிராமங்களை அண்டிய பிரதேசங்களில் வாழ்பவர்கள் யுத்த வெற்றியை நாட்டுக்கு கிடைத்த சுத்தந்திரமாகவே கருதுகின்றனர், மட்டுமன்றி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அண்மைக்காலமாக பொதுக் கூட்டங்களில் தமிழில் உரையாற்றுவதும், சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்று எல்லா தரப்பினரும் இந்த நாட்டின் சொந்தக்காரர்கள் என்றும் சொல்லி வருவது சிறுபான்மையினர் மத்தியில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது, இருந்தும் தமிழ் முஸ்லிம் வியாபாரிகள் வெள்ளை வேனைக் கொண்டு கடத்தப் படுவதும், ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதும், சடுதியான பொருளாதார வீழ்ச்சியும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பின்னடைவுக்கான வலுவான காரணங்களாகும்.

மீள் குடியேற்றம் துரிதமாக நடை பெற்றுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அந்த மக்களின் மெய்யான உணர்வுகளை இந்த தேர்தல் பிரதிபலிக்கும், இதையும் தாண்டி வடமேல் மாகாண பாரளமன்ற உறுப்பினரும் ஜோன்சன் பெர்னாண்டோ, மத்திய மாகாண எதிர்க்கட்சி தலைவர் எஸ்.பி.திசாநாயக, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆசாத்சாலி, இப்படி எதிர் கட்சியில் பிரபல்யமான
பல தலைகள் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ள நிலையிலும், மஹிந்த ராஜபக்ஷ அவர்களினதும், அவர் சார் அரச ஊடகங்களினதும் சரத் பொன்சேகா மீதான அதீதமான தூற்றுதல்கள், கேவலமான வார்த்தைப் பிரயோகங்கள், சரத் போன்செகாவுக்கான இலவச விளம்பரங்களாகும்,

மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சி குடும்ப ஆட்சிஎன்றும் அதனை இல்லாது ஒழிக்கவே தாம் அரசியல் பிரவேசம் எடுத்துள்ளதாகவும் கூறும் ஜெனரலின் பேச்சு உண்மையாக இருந்தும் எடுபடுவதாய் தெரியவில்லை, அத்தோடு அர்ஜுன ரணதுங்கவின் பல்டி இன்னுமொரு பேரிடியாக மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு விழுந்துள்ளது, பலவிடயங்களில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலையை தடவி குட்டும் அரசியல் சாணக்கியத்தை கொண்டுள்ளதும் அரசியல் விமர்சகர்களால் விமர்சிக்கப் பட்டதும் பொதுமக்களால் குறிப்பாக சிறுபான்மையினாரால் அவதானிக்கப்பட்ட விடயமுமாகும், மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் என்னதான் இந்த நாடு எல்லா இனத்தினருக்கும் சொந்தம் என்று சொன்னாலும் இன்னும் "மே புதுன்கே தேசயே" இது பவுத்தர்களின் தேசம் என்கின்ற இனத்துவேச கோசம் எழுந்து கொண்டுதான் இருக்கின்றது.

அத்தோடு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசன் சந்திரகாந்தன், அமைச்சர் முரளிதரன் ஆகியோர் தமிழ் மக்களின் வாக்குகளை
திரட்டி ஜனாதிபதிக்கு தமது பலத்தை காட்ட முழு முனைப்புடன் செயற்படுவர், அமைச்சர் அதாவுல்லாஹ், அமைச்சர் அமீரலி, பேரியல் அஸ்ரப், பாயிஸ் முஸ்தபா, ஹிஸ்புல்லாஹ் போன்றோர் முஸ்லிம்களின் வாக்குகளை திரட்ட முயற்சி செய்வார்கள். இதே நிலை வடக்கிலும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் தலைமையில் முஸ்லிம்களின் வாக்குகளும், டக்லஸ் தேவானந்தா தலைமையில் தமிழர்களின் வாக்குகளும் திரட்ட ஆளும் கூட்டணி முயற்சி செய்யும்,
எப்படியோ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கணிசமான அளவு வாக்குகள் எடுப்பார்,...............

மலையகத்தில் இருக்கவே இருக்கிறார் ஆறுமுகம் தொண்டமான் மக்களாவது மண்ணாங்கட்டியாவது தனக்கு அமைச்சுப் பதவி கிடைத்தால் அதுவே நான் செய்த புண்ணியம் இவரை நம்பியும் இலட்ச்சக் கணக்கான அப்பாவி வாக்காளர்கள் எனவே இந்த அப்பாவி மக்களின் வாக்கில் பெரும்பான்மையான வாக்குகள் ஜனாதிபதிக்கே.எப்படியோ மகிந்த ராஜபக்ஷ அவர்கள் பயந்து டென்சனாகி காணப்பட்டாலும் ஓட்டப் பந்தயத்தில் அவரோடு ஓட வந்திருப்பது நொண்டிக் குதிரைகளாகும் எனவே நாம் விரும்பியோ
விரும்பாமலோ மீண்டும் ஜனாதிபதியாகும் சந்தர்ப்பம் மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கே அதிகம் உள்ளது அது நியாயமான தேர்தலாக இருந்தாலும் சரி.......அல்லது................

02 ) ஜெனரல் பொன்சேகா அவர்களின் அவர்களின் அரசியல் புலம்..

முன்னர் இருந்த எந்த இராணுவ தளபதிக்குமில்லாத அளவுக்கான புகழ் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு கிடைத்தது என்றால் அதற்கு காரணம் யுத்த வெற்றியாகும், வெறும் இராணுவத்தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவுக்கு திடீரென எப்படி அரசியல் ஆசை முளைத்தது அங்கேதான் நிற்கிறார் ரணில் விக்ரமசிங்க எனும் அரசியல் சாணக்கியன், ரணில் விக்ரமசிங்க எத்துனை முறை தோற்றாலும் அரசியல் ரீதியாக அவருக்கு இருக்கின்ற மதிநுட்பமும், ஆளுமையும் இன்னும் கிஞ்ச்சித்தும் குறையவில்லை எனலாம்,
இதற்கு நல்லபல உதாரணங்களை கூறமுடியும், 2001 களில் UNP ஆட்சி பீடமேரியது விடுதலை புலிகளுடன் பேச்சுவார்த்தை என்று
ஒரு புறம் யுத்த நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்த அதே காலப் பகுதியில் அலிசாகிர் மௌலானவை பாவித்து விடுதலை புலிகளின் கிழக்கு மாகாண பொறுப்பாளரும், வே.பிரபாகரனின் வலது கையுமான கருணா அம்மானை பிரித்து அசைக்க முடியாத ஒரு போராட்ட அமைப்பின் ஆணிவேரை பிடுங்கி பிளவு உண்டு பண்ணி அந்த அமைப்பே அடியோடு அழிவதற்கு பாதை சமைத்தவர். இதே நிலை தான் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் நடந்தது.

உண்மையிலேயே ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அரசியலில் குதிக்கும் ஆர்வமும் ஆசையும் ஆரம்பத்தில் இருக்கவில்லை
இதனால் தான் கனடாவில் வைத்து இலங்கை பவுத்தர்களுக்கான நாடு இதில் சிறுபான்மையினர் அதிகபட்ச உரிமைகளை எதிர்பார்க்கக் கூடாது என்றதும், மதுவும், போதையும் மக்கள் பாவிக்க வேண்டும் அது மூளையின் சுறுப்பான இயக்கத்திற்கும், உடம்பின் உற்சாகததிக்கும உதவும் என்ற முட்டாள் தனமான கருத்துக்களை இவர் வெளியிட்டார், இது இப்போதுகளில் பிரபல்யமாகியுள்ளன, இது ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பலத்த பின்னடைவாக கருத முடியும் மட்டுமன்றி அத்தோடு அரசியல் ஆசை இவருக்கு ஏலவே இருந்த்திருந்தால் மேற்சொன்ன மடத்தனமான கருத்துக்களை முன் வைத்திருக்க மாட்டார், எனவே பொன்சேகாவை அரசிலிருந்து பிரித்து ஜனாதிபதிக்கு எதிரான ஜனாதிபதி வேட்பாளராக்கிய பெருமை சாட்சாத் ரணில் விக்கிரமசிங்கவுக்கே சேரும்,

இனி பல கட்சி கூட்டணி, JVP ஏலவே மக்கள் மத்தியில் அதிருப்தியுடைய கட்சியாக பெயர் பெற்று, துவேசக் கருத்துகளை மூலதனமாக்கி அரசியல் பொழைப்பு நடத்தவந்து கேவலப் பட்டு நிற்கும் கட்சி, நிச்சியமாய் இவர்களினால் ஜெனரலின் வாக்கு வங்கி குறையுமே தவிர கூடாது, ரணிலையும் UNP கட்சியினையும் பாரதூரமாக விமர்சித்துவிட்டு தமக்கு சலுகை கிடைக்கவில்லை என்றதும் முரண்பட்டு மூட்டையை கட்டிக் கொண்டு வெளியேறிவிட்டார்கள், அதிலும் தமது பாராளமன்ற உறுப்பினர்கள் பலரை அரசுக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டுத்தான் சென்றுள்ளார்கள்.

UNP இன் திட்டம் தான் இது என்றாலும் ரணில் இந்தத் தேர்தலில் ஆரோக்கியமான காய் நகர்த்தலில் ஈடுபட்டுள்ளர், தான் வெற்றி பெறப் போவதில்லை என்ற எதார்த்தம் ரணிலுக்கு புரிந்திருக்கிறது, எனவேதான் மாற்றுவழி தேடினார், ஜெனரல் மாட்டினார். UNP இக்கான
வாக்கு வங்கியில் எந்த மாற்றத்தையும் காண முடியாது அது ரணில் விரல் நீட்டும் திசையில் விழும், அந்த வகையில் ஜெனரல் UNP இனருடைய வாக்குகளை தனதாக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது,

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கரஸ் முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகளாக தம்மை நினைத்துக் கொண்டு மேடைகளில் முழங்குகின்றனர், கண்ட இடங்களிலும் கும்பிடு போட்டு, சமூகம்,சமூகம் என்று கூறிக்கொண்டு UNP இன் பணக் கட்டுகளுக்கு அடிமையாகி இருக்கும் ரவுப் ஹகீம் போன்றவர்களால் வெற்றுக் கோசம் போட மட்டுமே முடியும், மாறாக
முஸ்லிகளின் 80 வீதமான வாக்குகளை கனவிலும் பெற்றுக்கொள்ள முடியாதாகும், இந்த அரசின் மீதான கோபத்தை முஸ்லிம்கள் ஒருவேளை சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக பயன்படுத்தலாமே ஒழிய அது ரவுப் ஹகீமுக்காக அல்லது ஸ்ரீ லங்கா முஸ்லிம் கண்க்ராசுக்காக என்பது முட்டாள்தனமே, உண்மையில் இனவாதத்தை தூண்டுபவர்களில் ரவுப் ஹக்கீமும் ஒருவர் என்றே கருத
முடியும்.

அடுத்து மேலக மக்கள் முன்னணியின் மனோ கணேஷன், தமிழ் என்றும் தமிழர் என்றும் குரல் கொடுக்கும் இவர் டமிலில் பேசுவது எந்த்தத் தமிழினத்தை காப்பாற்ற என்று புரியவில்லை, அடிக்கடி கொள்கை மாறும் இவரை நம்பியும் மக்கள் வாக்களிக்கின்றார்கள் எனும் போது நமது மக்களின் அரசியல் விழிப்புணர்வு மீது சந்தேகம் எழுகின்றது,
ஆக இந்த அரை வேக்காடுகள் எல்லாம் சேர்ந்து சரத் பொன்சேகாவை ஆற்றில் இறக்கியுள்ளர்கள், சரத் பொன்சேகாவும் இவர்களை நம்பி ........(மண்குதிரைகள் என்று தெரியாமல்) இறங்கியுள்ளார்.

இதற்கிடையில் கோசம் வேறு! நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு ஆப்பு வைப்போம், மன்னராட்சியை கவிழ்ப்போம், குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம், இவைகளெல்லாம் மக்களை உசுப்பேத்த போடும் மாய வார்த்தைகள், இதையேதான் JR தொடக்கம் இந்த மஹிந்த மட்டுக்கும் சொன்னார்கள் என்னத்தை கிழித்தார்கள், ஏதோ சரத் பொன்சேகா கொஞ்சம் வாக்கு எடுப்பார் ஆனால் நிச்சியமாய் வெற்றி பெறமாட்டார்.
இருந்தும் முன்னாள் ஜனாபதி சந்திரிகா, மங்கள சமரவீர ஆகியோரின் ஒத்துழைப்பு ஒருவேளை தேர்தல் முடிவுகளில் மாற்றங்களை கொண்டுவரலாம்........
( தொடரும்....)

Read more...

வியாழன், 17 டிசம்பர், 2009

அதிரடியும் அசத்தலும்,(50 /50 )



இலங்கை, இந்திய முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி கலக்கலாக முடிந்து போயுள்ளது, இந்திய அணியின் அதிரடியான துடுப் பாட்டம் இலங்கை பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தது, முரளியின் இடைவெளி தெளிவாக புரிந்து கொள்ளப்பட்ட ஆட்டமாக இதனைக் கொள்ள முடியும், ஒருவேளை முரளி இருந்திருந்தால் இந்திய அணியின் ஓட்ட வேகம் மட்டுப்படுத்தப் பட்டிருக்கலாம், சேவாக்கின் அதிரடி பந்து தடுப்பளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது, டெண்டுல்கர்,தோனி, ஆகியோரின் துடுப்பாட்டம், கடைசியில் ஜடேஜாவின் இரண்டு சிக்சர்கள் இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை
414 ஆக உயர்த்தியது,

இந்திய அணிக்கு நாம் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்ற தோரணையில் இலங்கை அணியின் துடுப்பாட்டம் தொடங்கியது,
தில்சானின் அபாரமான அதிரடி துடுப்பாட்டம், மைதானத்தை அழகு படுத்தியது, மட்டுமல்ல இந்திய அணியினரின் வயிற்றில் புளியை கரைத்தது, உபுல் தரங்கவின் நிதானமான துடுப்பாட்டம், இலங்கை அணியினை வெற்றியின் பக்கம் இட்டுச்சென்றது, எதிபாராத சந்தர்ப்பத்தில் உபுல் தரங்க ஆட்டமிழக்க அணித்தலைவர் சங்க கார வந்த வேகத்திலே விளாசத் தொடங்கினார், இந்திய பந்து வீச்சாளர்களுக்கு மீண்டும் தலைவலிதொடங்கியது எல்லா முனைகளிலும் சங்ககார இந்திய பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தார்,
அநேகமாய் இலங்கையின் வெற்றி நிச்சயிக்க பட்டு விட்டதாகவே விமர்சகர்கள், பார்வையாளகள் கருதினார்கள்,

அந்தோ பரிதாபம் சங்கவின் விக்கட் வீழ்ந்த போது, ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள்( நானும் தான்), தொடர்ந்து ஜெயசூரிய, ஜெயவர்தன, இருவருமே சொதப்பி வெறுப் பெற்றினார்கள், வந்த வேகத்தில் திரும்பிய இவர்கள் இருவரும்தான் இலங்கையின் தோல்விக்கு பொறுப்பு கூற வேண்டும் இருவரில் ஒருவர் கொஞ்சம் நிதானமாக ஆடியிருந்தால் இலங்கை அணி வெற்றி பெற்றிருக்கும்,
தொடர்ந்து தில்ஷன் இன் ஆட்டமிழப்பு இலங்கை அணியின் வெற்றிக்கனவை ஆட்டம் கொள்ளச்செய்தது,
கடைசியில் கண்டம்பி,அஞ்சல மேத்திவ் கொஞ்சம் நம்பிக்கை அளித்தார்கள், கடைசியில் 12 பந்துகளுக்கு 15 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய இலக்கு இலங்கை அணிக்கு இருந்தது, இது ஒன்றும் எட்ட முடியாத பெரிய இலக்கு இல்லை அத்தோடு
அன்றைய போட்டியைப் பொறுத்த மட்டில் அது ஒரு பெரிய இலக்குமல்ல, இந்த நிலையில் கூட இலங்கை அணி வெற்றி பெரும் என்ற நம்பிக்கை இருந்தது, அத்தோடு கண்டம்பி, மதிவ் ஆகிய இருவரும் குறைந்த பந்துகளில் கூடிய ஓட்ட எண்ணிக்கை எடுக்க கூடியவர்கள், ஆனால், இருவருமே சகிர்கானினதும், அசிஸ் நேஹ்ராவினதும் பந்துகளை எதிர்கொள்வதில் சிரமத்தை மேற்கொண்டனர், இதனால் இலங்கை அணிக்கு கிடைக்க வேண்டிய வெற்றிக்கனியை சகிர்கானினதும், அசிஸ் நேஹ்ராவினதும் நேர்த்தியான, துல்லியமான இறுதி ஓவர்கள் இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்தது, எல்லா அதிரடி துடுப்பாட்டக் காரர்களையும் தாண்டி இறுதி பந்து ஓவர்களை வீசிய அந்த இருவரின் அபாரமான ஆட்டம் பாராட்டத்தக்கது, வெறும் 3 ஓட்டங்களில் வெற்றி இலக்கை பறி கொடுத்த இலங்கை அணியில் சனத் ஜெயசூரிய ஒரு சிக்சர் அடித்து விட்டு ஆட்டம் இழந்திருந்தால் ஒரு வேளை வெற்றி பெற்றிக்கலாம்...........
நாளைய(18 / 12 / 2009 ) போட்டி இதை விடவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்வு கூற முடியாது இரண்டு அணியும் சமபலத்தில் இருந்தாலும், இந்திய அணிக்கே வெற்றிக்கான அதிக வாய்ப்பு இருக்கிறது, எப்படியோ நாளைய போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும் அது இலகுவான வெற்றியாகவே அமையும் என்பது என் கருத்து.................?

Read more...

வெள்ளி, 11 டிசம்பர், 2009

மலிவு விலையில் நட்பு?



மலிவு விலையில் நட்பு?

நட்பு என்பது அலாதியான அனுபவமாகும், ஒரு "நல்ல நண்பன் கிடைப்பது ஆயிரம் பொற்காசுகள் கிடைப்பதை விடவும் மேலானது" என்கிறது ஒரு பாரசீகப் பழமொழி
"ஒருவனை அறிந்து கொள்ள அவனது நண்பனுடன் பழகிப் பார்" என்கிறது ஒரு முது மொழி
"நல்ல நண்பர்கர்களை தேடிக்கொள் உன் வாழ்க்கை சந்தோசமாக அமையும்" என்கிறது ஒரு அராபிய பழ மொழி.
எனவே இந்த உலகத்தில் தாய், தந்தை, உறவுகள் இவைகளின் அன்பானது இயற்கையிலேயே நமக்கு
கிடைக்கும் ஒன்றாகும் அதையும் தாண்டி பிறப்பிலே நமக்கு கிடைப்பதாகும், ஆனால் நட்பின் மூலம் கிடக்கும் அன்பும், நேசமும், புரிந்துணர்வும் மிகவும் வித்தியாசமானதாகும், அது புரிந்துணர்வின் அடிப்படையில் இடையில் நம்மோடு சேர்ந்து கொள்வதாகும் இருந்தும் .எள்ளுகளோடு புல்லுகளும் முளைப்பதுண்டு அப்படித்தான் சிலர் நட்பை கொச்சைப் படுத்தி விடுகின்றனர், சுயநலத்திற்காக நட்புக்கொள்ளுகின்றனர்., சந்தோசங்களின் போது கை குலுக்கி குதூகலிக்கும் இவர்கள் சிறு துன்பம் வரும் போது மெதுவாக நழுவி விடுவார்கள், இன்னும் சிலர் உள்ளார்கள் தமது தேவைக்காக மட்டும் வந்து நம்மோடு நட்புக் கொள்வார்கள் தேவை முடிந்தவுடன் கம்பி நீட்டி விடுவார்கள், இப்படி நட்பின் பேரில் நாடகமாடும் நிறையப் பேர் இருக்கத்தான் செய்கின்றாகள்.

இதையும் தாண்டி நல்ல நட்பு. சந்தோசமானது, பாலகபருவ நட்பு, பள்ளிப் பருவ நட்பு, விடலைப் பருவ நட்பு, வாலிபப் பருவ நட்பு........... இப்படி நமது வாழ்நாளில் நாம் கடக்கும் எல்லாப் பருவங்களிலும் ஏதாவது ஒருவகையில் நட்பும் நம்மை உரசிக்கொண்டும்,தாண்டியும் செல்கின்றது
நமது அன்றடங்களில் நாம் நிறையப் பேரை சந்திக்கின்றோம், சிலரை முன்பின் அறிந்திராமலே அவர்கள் மீது வெறுப்பு ஏற்படும் அவ்வாறே சிலர் மீது ஒரு நட்பு ஏற்படும் மிக நீண்ட நாட்கள் பழகியதைப் போன்ற உணர்வு ஏற்படும் இப்படித்தான் நமது நட்புகளின் ஆரம்பம் ஏற்படுகிறது, எத்துனை சொன்னாலும், வாதித்தாலும் பள்ளிபருவ காலத்து நடப்புகள் நமது வாழ்க்கை முழுவதும் அசைபோட்டுக்கொண்டே இருக்கும் அற்புத சக்தி வாய்ந்ததாகும், இதைத்தான் கவிஞர் வைரமுத்து தான கவிதை ஒன்றில் சொல்லி இரிக்கின்றார்

"அள்ளிக் கொடுப்பவைகள்
ஆண்டுகளால் அழிவதில்லை
பள்ளிப் பருவ நிலை
பழைய கதை ஆவதில்லை"

சுயநலமில்லாத தூய்மையான நட்பானது மெய்யிலேயே போற்றத்தக்கது, வாழ்த்ததக்கது, நல்ல நட்புக்களால் அறிவு விருத்தி அடையும், சமூக சிந்தனை விரிவடையும், இலட்சியம் பிறக்கும், நமது தடைகளை உடைத்தெறியும் மன தைரியம் கூடும், சந்தோசம் நூறு மடங்காகும், துன்பம் இல்லாமல் போய்விடும், விட்டுக் கொடுத்தலின் விவேகம் புரியும், வாழ்க்கையில் நம்பிக்கையும் எதிபர்ப்புகளும் அதிகரிக்கும்.............................இப்படி எத்தனையோ.......நல்ல விடயங்களுக்கு நல்ல நட்பு காரணமாகின்றது..

தூய்மையான நட்பில் எதிபார்ப்பு இருக்காது, சுயநலம் இருக்காது, சந்தர்ப்பவாதம் இருக்காது, வஞ்சகம்
இருக்காது, முதுகு சொரியும் முட்டாள் தனம் இருக்காது, முகஸ்துதி இருக்காது..பெற்றோர்கள் சொல்வதை கேட்காதவர்கள் நண்பன் சொல்வதை கேட்கின்ற வலிமை நட்பில் மாத்திரம்..........தான் சாத்தியம்..
நண்பர்கள் நம்மைப் பற்றி.......நாமே மத்திப்பீடு செய்து கொள்வோம், நமது நட்பு உலகம் நிஜமானதா? போலியானதா? நாம் எப்படிப்பட்டவர்கள்? நமது நண்பர்களோடு எப்படி இருக்கிறோம்...............

கடைசியாக..இதை வாசிக்கின்ற எல்லா பதிவுலக நட்புள்ளங்களுக்கும் சுயநலமில்லா நண்பர்கள் கிடைக்க வாழ்த்துகிறேன்..


ஆனால் மலிவு விலையில் சுயனலத்திட்க்காக நம்மை நாடும் நட்புகளிடம் அவதானமாக இருப்போம்.

பிற்குறிப்பு- எனது ஒவ்வொரு பதிவுக்கும் தனது காத்திரமான விமர்சனத்தை வழங்கி வரும் புத்தளம்,எத்தாலையை சேர்ந்த நண்பர் இன்பாஸ் அவர்களுக்கு எனது நன்றிகள், நம்மை யாராவது அவதானிக்கிறார்கள் என்று தெரிந்ததால் தான் நாம் அவதானமா பயணிப்போம் அந்தவகையில் இன்பாசின் தொடர் அவதானிப்பும், விமர்சனமும் தான் என்னை ஏதாவது பதிய வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியது........அவ்வாறே இராகலை கலை எங்கே போனார் இவர் இவர்தான் நான் வலைப் பத்திவில் நுழைய நூறு வீதம் காரணமானவர் இவருக்கும் எனது நன்றிகள்.

Read more...

வியாழன், 26 நவம்பர், 2009

ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்.


ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துக்கள்.

உலகம் முழுதும் உள்ள எல்லா மனிதர்களும் கடவுளின் படைப்புக்கள் கடவுளை அடைய தமக்கு
சரி என்று பட்ட மதத்தை தேர்ந்தேடுத்துக்கொண்டனர் , ஆனால் உலகில் அதிகமானவர்கள்
மத நம்பிக்கையில் உள்ளவர்கள் என்ற எடுகோளுக்கு வரமுடியும் ஏழை, பணக்காரன், உயர்ந்தவன்
,தாழ்ந்தவன், படித்தவன், பாமரன், கருப்பன் வெள்ளையன், இந்த பாகு பாடுகளையும் தாண்டி மனிதர்கள்
எல்லோரும் சமமானவர்கள் என்கின்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் உன்னத கடமைதான் இஸ்லாத்தின்
ஐந்தாவது கடமை ஹஜ் ஆகும், இந்தவகையில் ஹஜ்ஜிப் பெருநாளை கொண்டாடும் எல்லா நல்ல உள்ளங்களுக்கும்
நல்ல மனம் படைத்த எல்லா பதிவுலக நண்பர்களுக்கும் என் இனிய பெருநாள் வாழ்த்துக்கள்,

மலுரும் இந்தப் பெருநாளில் சமாதானமும், அமைதியும் வேண்டி பிரார்த்திப்போமாக, முடிந்தால் வாங்களேன் பெருநாள் பலகாரம்
சாப்பிடலாம்........பதிவுலக நண்பர்களே.. உங்களைத்தான்............

Read more...

செவ்வாய், 17 நவம்பர், 2009

புரிந்துணர்வு ஒன்றே காத்திரமான சமூகக் கட்டமைப்பை உருவாக்கும்.

இன்றைய உலகின் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று சமாதானம், எல்லா தரப்பினரும் சமாதானம் பற்றி கதை அளக்கின்றனர் , சமாதானத்திட்காக தாம் பாடுபடுவதாக குரல் உயர்த்தி கூறுகிறனர், ஆனால் அவர்களின் சமாதனத்திட்கான முன்னெடுப்புக்கள் ஆரோக்கியமானதாக அல்லது சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை இது உலகளாவிய ரீதியில் நிறுவக் கூடிய வெளிப்படை உண்மையாகும் . இதனை சர்வதேச ரீதியில் ஆகட்டும், அல்லது உள்நாட்டில் ஆகட்டும் இதுதான் பொதுவான விதியாக, நியதியாக காலாகாலமாக நடைமுறையில் இருந்து வருகிறது , இதெற்கெல்லாம் மிக முக்கிய காரணம் தான் என்ற அகங்காரத்தில் அடுத்தவரை ஆளும் வர்க்கமாக தம்மை நினைத்து ஆட்டம் போடுவதுதான் , இது சாதாரண ஒரு குடும்பத்தில் தொடங்கி சர்வதேசம் மட்டுக்கும் இதுதான் நிலை. ஒரு குடும்பம் அடுத்த குடும்பத்தை ஆள நினைக்கின்றனர், ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தை ஆள நினைக்கிறது, ஒரு கிராமம் இன்னொரு கிராமத்தை ஆள நினைக்கிறது , ஒரு நாடு இன்னொரு நாட்டை ஆழ நினைக்கிறது இந்த போக்கு நிலையான சந்தேகத்தையும், பரஸ்பரம் குரோதத்தையும், அடுத்தவர் மீது அவநம்பிக்கையையும் பரவலாக ஏற்படுத்தி உள்ளது , இந்த அவலமான போக்கு உலகெங்கிலும் ஒரு சீரற்ற தன்மையை ஏற்படுத்தி இதன் முற்று முழுதான தாக்கத்தின் கீழ் மூன்றாம் மண்டல நாடுகளை பிரதி நிதிப்படுத்தும் மக்கள் ஆட்பட்டு இருப்பதையும் அவதானிக்கலாம்,

இலங்கை, இந்தியா , பாகிஸ்தான், நேபாளம், ருவண்டா, உகண்டா, சோமாலியா. எத்தியோப்பியா, ஆப்கானிஸ்தான், பாலஸ்தீன், ............இப்படி உலகில் உள்ள தொண்ணூறு சதவீத மான நாடுகளில் வாழும் மக்கள் தமது நிம்மத்தியை தொலைத்து தினமும் பயந்து பயந்து நாட்களை கடத்துகின்றனர். சர்வதேச அளவில் பல நூறு காரணங்களுக்காக உருவெடுத்திருக்கும் இந்த நிம்மத்தியற்ற தன்மையை நம்மால் மாற்ற இயலாதாகும், ஆனால் நம்மை சுற்றி யுள்ள இந்த அவலங்களிலிருந்து நமக்கு சற்று விடுபட்டு, கொஞ்சம் சந்தோசிக்க முடியும். அதற்க்காக நாம் தயாராக வேண்டிய நிர்ப்பந்தந்தத்தில் இருக்கிறோம்.
ஆம் நண்பர்களே, விட்டுக் கொடுப்பு, புரிந்துணர்வு, அடுத்தவர்களை புண்படுத்தாத அழகான வார்த்தைகள், எந்த மதத்தவர்களையும் மதிக்கும் , கண்ணியப் படுத்தும் மேன்மை, அடுத்தவர்களின் கருத்துகளையும் செவி மடுக்கும் பக்குவம், உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பாகு பாடுகளையும் தாண்டிய மனித நேசம் , அடுத்தவருக்கு உதவும் இரக்கமுள்ள மனம், குறிப்பாக நம்மை ஆட்டிப்படக்கின்ர ஈ-கோ வுக்கு குட் பை சொல்லுதல்....... இப்படி நம்மை நாம் மாற்றிக்கொள்ளவேண்டும், காலப்போக்கில் நமது நண்பர்கள், உறவிவ்னர்கள், பக்கத்து வீட்டார்கள் , என்று நம்மை சுற்றி நம்மை நேசிக்கின்ற , அன்புள்ளங்கள், தானாகவே உருவாக அது எதுவாக அமைந்து விடும்,
நமக்குள் அமைதியும், நிம்மதியும், வேண்டுமெனில், நாம் அடுத்தவரை நேசிக்க வேண்டும் என்ற பொன் மொழியைத்தான் எல்லா மதங்களும் சொல்லுகின்றன, மதங்களின் இந்த நல்லுப தேசங்களே நமக்கு நிம்மதி அளிக்க போதும் என்கின்ற போது மதத்தின் பெயரால், குலத்தின் பெயரால், சாதியின் பெயரால், பிரதேசத்தின் பெயரால் நாம் பிளவு பட்டு இன்றைகளின் நிம்மத்தியையும், சந்தோசத்தையும் இழந்து தவிக்கிறோம், நாம் ஒவ்வொருவரும் அடுத்தவரை சந்தேகக் கண்ணோடுதான் பார்க்கிறோம், ஒப்புக்காகவேனும் ஒரு புன்னகையை தவள விட நம்மால் முடிவதில்லை, புன்னகை தான் அன்பின் அடி நாதம் ஆகும்,
எழுத்தாளர்கள், சமூகத்தின் சிற்பிகள் ஆவார்கள்( இப்போது வலை பதிவாளர்களும் தான்) அந்த வகையில் நமக்கான சமூகப் பொறுப்பினை நாம் உதாசீனம் செய்ய முடியாது. சாதாரண மக்களை ஓன்றுபடுத்தும், அல்லது அவர்கள் மத்தியில் பரஸ்பரம் நம்பிக்கையை உண்டு பண்ணும் முயற்சியில் நாம் நமது படைப்புக்களை தரவேண்டும், இதற்கும் முன்னால் நமக்குள் ஒரு புரிந்துணர்வும், ஒற்றுமையும், வளர வேண்டும், எத்துனை கருத்து மோதல்கள், முரண்பாடுகள் நமக்குள் இருப்பினும் நாம் இதையும் தாண்டிய அன்னியோன்னியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் ..........இதெல்லாம் நடக்கிற காரியமா என்று நம்மில் சிலர் தன்னம்பிக்கை இழந்து செயற்படாமல் இருப்பதால் தான் எதையும் நம்மால் சாதிக்க முடியாமல் இருக்கிறது..... அவரவர் தனித்துவத்தை இழக்காமல் நாமும் கொஞ்சம் நல்லவர்களாக ஐ-மீன், அடுத்தவர்களை மதித்து கொஞ்சம் வாழ்ந்து தான் பார்ப்போமா..நண்பர்களே....................

Read more...

புதன், 11 நவம்பர், 2009

எது தேச பக்தி...?

சில மாதங்களுக்கு முன்னால் எனக்கு வந்த இந்த கடிதம்...


“ஏன் ஒதுங்கியே நிற்கிறீர்கள்...? கொண்டாட மாட்டீர்களா...?” என்றது தொலைபேசிக்குரல்.

அதுவும் ஒரு பத்திரிகையாளருடையது.

எதற்காகக் கொண்டாட வேண்டும்...? என்றேன்.

“இந்தியா கிரிக்கெட்டில் ஜெயித்ததை...” என்றார்.

ஜெயித்தால் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுவதுமில்லை. தோற்றால் செருப்பாலடித்து இழிவு படுத்துவதுமில்லை.

இரண்டுமே எனது வேலையில்லை...” என்றேன்

“இந்திய ராணுவத் தளபதி என்.சி.விஜ் கூட ‘இது இந்தியாவுக்கே கெளரவத்தை தேடித் தந்திருக்கிறது...’ என்று வாழ்த்தி இருக்கிறாரே...?”

அப்படியானால்... ஆஸ்திரேலியாவிடம் தோற்றதற்கு ‘இது இந்தியாவுக்கே அவமானம்’ என்று கண்டனம் தெரிவிக்கவில்லையே ஏன்...? என்றேன்.

“என்ன இருந்தாலும் பாகிஸ்தானை ஜெயித்திருக்கிறோம்... இனி உலகக் கோப்பையே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை...”என்று

தனது அறியாமையை அள்ளிக் கொட்டினார் அந்தப் பத்திரிகையாளர்.

இதற்கு எங்கள் ஊரில் வேறு பழமொழி இருக்கிறது என்றேன்.

“என்ன பழமொழி...?”

“மகன் செத்தாலும் சரி... மருமக தாலி அறுக்கணும்...”

“ச்சே... தேசபக்தியே கிடையாதா...?” எரிச்சலின் உச்சத்தில் இருந்தது குரல்.

நிச்சயமாகக் கிடையாது. ஆனால்... தேசங்களில் உள்ள மக்களின் மீது மாளாக் காதல் உண்டு.

எம்மைப் போலவே பசியிலும்... பட்டினியிலும் உயிரை விடுகிற...

தள்ளாத வயதிலும் ஊதுபத்திகளையும்... தீப்பெட்டிகளையும்

வீடு வீடாகச் சுமந்துசென்று விற்று வயிறு வளர்க்கிற...

நிலங்களை இழந்து...

வாழ்க்கையை இழந்து...

விமானங்கள்வீசும் உணவுப் பொட்டலங்களுக்காக

வானத்தை அண்ணாந்து பார்த்துக் காத்திருக்கிற...

சோமாலியா மக்கள்மீது காதல் உண்டு...

பாகிஸ்தான் மக்கள்மீது காதல் உண்டு...

இலங்கை மக்கள் மீது காதல் உண்டு...

நிகரகுவா மக்கள்மீது காதல் உண்டு...

இவர்களைப் போன்றே இன்னமும் ஒடுக்கப்படுகின்ற

ஒவ்வோரு மூன்றாம் உலக நாடுகள்மீதும் எமக்கு காதல் உண்டு.

ஆனால் உங்களைப் போல கேவலம் ஒரு கிரிக்கெட்டிற்காக ஆர்ப்பரிக்கும் போலி தேசபக்தி மட்டும் நிச்சயம் இல்லை எமக்கு.

விளையாட்டை விளையாட்டாகப் பார்க்காமல், இந்தியாதான் ஜெயிக்கணும்... பாகிஸ்தான் தோற்கணும்... என்கிற ரசிகர் மன்ற மனோபாவத்தோடுதான் பார்க்கவேண்டும் என்றால்... மன்னித்து விடுங்கள் என்னை. நானிந்த ‘விளையாட்டிற்கு’ வரவில்லை.

அப்படி பார்த்தால் ஜாக்கிசான், அர்னால்டு படங்களைக்கூட பார்க்கக்கூடாது நீங்கள்...என்றேன்.

போனை வைத்து விட்டார் நண்பர்.

இந்த நவீன நீரோக்களை நினைத்தால் எரிச்சலைக் காட்டிலும் பரிதாபமே மேலிடுகிறது. அண்டை நாட்டிடம் தேற்றால் கேவலம்

வெள்ளைத் தோலர்களிடம் தோற்றால் கெளரவம் என்று கருதுகிற அடிமை மனோபாவம் எப்போது தொலையும் இந்த இரு நாட்டுக்கும்...?

இந்துஸ்தானோ...

பாகிஸ்தானோ...

இறுதியில் மண்டியிட்டுக் கிடப்பது அமெரிக்காஸ்தானிடம்தான்.

அதில் மட்டும் சுயமரியாதையைத் தொலைத்துவிட்டுத் திரிவார்கள் இவர்கள்.

கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போடுவது மாதிரிதான் கிரிக்கெட்டும்.

மாலைக்கு மாலை போட்டிருக்கும் துப்புரவுத் தொழிலாளியோ...

விவசாயக் கூலியோ...

மலை ஏறி முடிக்கிற வரைக்கும் ராஜ மரியாதைதான்.

வரப்பில் நிற்கும் பண்ணையார்...’சாமி! மலைக்கு போயிட்டு எப்பத் திரும்புவீங்க...?’ என்பான்.

கடன் கொடுத்த மீட்டர் வட்டிக்காரன்....”சாமிக்கு இது எத்தனாவது வருசம்...?” என்பான்.

எங்கு திரும்பினாலும் ஏக மரியாதைதான்.

ஆனால் ‘சாமி’ மலை இறங்கியது தெரிந்த மறு நிமிடத்திலிருந்து ‘முதல் மரியாதை’தான்.

அப்படிதான் கிரிக்கெட்டும்.

மேட்ச் முடிகிறவரைக்கும் எம்.டி.யிடம் பியூன் ஸ்கோர் கேட்கலாம்.

“கும்ப்ளே அந்த கேட்ச்சை விட்டிருக்கக் கூடாதுங்க...” என்று

கடை முதலாளியிடம் சரக்கு சுமக்கிற பையன் அளவளாவலாம்.

ஆனால் மேட்ச் முடிந்த மறு நொடியே... “...யோளி... அங்க என்ன பராக்கு பார்த்திட்டு இருக்கே...?” என்று குரல் வரும், ‘மாலை’யைக் கழட்டிய மாதிரி....

அதுவரை டீக்கடை தொடங்கி பெரும் தொழில் நிறுவனங்கள் வரைக்கும் கிரிக்கெட்டை அக்குவேறு ஆணிவேறாக அலசுவதென்ன...?

அரிய பல ஆலோசனைகளை அள்ளி வீசுவதென்ன...?

சூப்பர்தான் போங்கள்.

ஆனால் பந்தயம் முடிந்த மறு கணத்திலேயே இவர்களுக்குள் பதுங்கிக் கிடக்கும் வக்கிரங்கள் விழித்துக் கொள்ளும்.

அதுவரையில் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ கண்டவர்கள் பிறகு ஒற்றுமையில் வேற்றுமையைத் தேடிக் கிளம்புவார்கள்.

அது உட்சாதிச் சண்டையாக...

சாதிச் சண்டையாக ...

மதச் சண்டையாக...

மாநிலச் சண்டையாக...

உருவெடுத்து தற்காலிகமாக

இவர்களது தேசபக்தி மூட்டை கட்டி பரணில் போடப்படும்.

அப்புறமென்ன... வழக்கமான தலைப்புச் செய்திகளுக்குள் மூழ்கிப் போகும் தேசம்.

இவர்களது தேசபக்தியை வெளிச்சம் போட்டுக் காட்ட பிறகொரு சந்தர்ப்பம் வராமலா போகும்...? அதுவும் வரும்.

ஒரு விளம்பர இடைவேளைக்குப் பிறகு.

இன்னொரு கிரிக்கெட் பந்தய ரூபத்தில்

நாட்டை அடகு வைக்கிற உலக வர்த்தக நிறுவனம் குறித்துக் கூட்டமாகக் கூடி குரல் எழுப்பமாட்டார்கள் இவர்கள்...

பட்டினிச் சாவுகள் குறித்து கூட்டமாகக் கூடி விவாதிக்க மாட்டார்கள் இவர்கள்...

உலகில் யுத்த மேகங்கள் சூழ்ந்தால் நமது நிலை என்ன என்பதற்கு கூட்டமாகக் கூடி குரல் கொடுக்க மாட்டார்கள் இவர்கள்...

ஆனால் தெருக்களிலும்... தேநீர்க் கடைகளிலும்... திரையரங்குகளிலும் கூடுகிற கூட்டம் கிரிக்கெட் மேட்சிற்காம்.

என்னே தேசபக்தி...?

பாவம்...

இவர்கள் விளையாட்டை

போராகப் பார்க்கிறார்கள்

போரையோ விளையாட்டாகப் பார்க்கிறார்கள்.

இவர்கள் மத்தியில் வாழ்வதைவிடவும்

தண்டனை நம்மைப் போன்ற

‘தேசத்துரோகி’களுக்கு அப்புறம் வேறென்ன இருக்கிறது...?


நன்றி...
சங்கர்.

2009/11/10 stalin felix

Read more...

புதன், 4 நவம்பர், 2009

இருக்கிறம்+வலை பதிவர்=0

எல்லோரும் போலவே மனசு நிறைய எதிர்பார்ப்புகளை சுமந்து கொண்டு "இருகிறம்"
ஏற்பாடு செய்த வலை பதிவாளர் சந்திப்புக்கு நானும் சென்றேன், அதிகமான ஆர்வக்கோளாறு என்னை ஆட்டிப்படைக்க கொஞ்சம் நேரம் காலத்துடனையே ஆஜராகி விட்டேன், டொரிங்டன் இல் வைத்து நண்பர் வதீஸ் என்னோடு இனணந்து கொண்டார், என் எல்லா எதிர்பார்ப்புகளுக்கும் ஆப்பு வைப்பது போல வானம் சிணுங்க தொடங்கியது, சிறுது நேரத்தில் பதிவர்களின் வருகை அதிகரித்தது, எந்த ஒரு தாக்கத்துக்கும் எதிரும் சமனுமான மறு தாக்கம் உண்டு என்ற நியுட்டனின் மூன்றாவது விதியைப்போலவே பதிவர்களின் வருகை அதிகமாக தூறல் அதிகரித்தது, மன்னர் அமுதன் தனது சக பதிவர் குழாமுடன் வந்திருந்ததார், யோ.. வொயிஸ் .......... அநியாயத்திக்கு அமைதி காத்தார்....... அடிக்கடி தனது மந்திர புன்னகையினை எல்லோருடனும் பகிர்ந்து கொண்டிருந்தார்.....மேமன் கவி, டாக்டர்.எம்.கே. வுடன், பலதும் பத்தும் பெசிக்கொண்டார்கர்கள்.

பதிவர்களுக்கான முதலாவது அமர்வு உள்ளக அரங்கினுள்ளும்(மழை காரணமாக)
இரண்டாவது அமர்வு திறந்த வெளி அரங்கிலும் நடை பெற்றது, மழையையும் கருத்தில் கொள்ளாது இருக்கிறம் குழுவினர் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தனர்(பதிவர்கள் மீது அத்தனை பாசமாம்).....

முதலாவது நிகழ்வில் கதாநயகி திருமதி சாந்தி சச்சிதானந்தம் கலக்கினார். பதிவர்கள், பார்வையாளர்கள் அறிமுகத்தை தொடர்ந்து இருக்கிறமின் கொள்கை, கோட்பாடு, பற்றிய மிகத்தெளிவான விளக்கமொன்றைத்தந்தார், பின்னர் டாக்டர் எம்.கே.முருகானந்தன் உரை ஆற்றினார்....

இரண்டாவது அமர்வு தூறல்களை கட்டுப் படுத்த போடப்பட்டிருந்த கூடாரங்களின் கீழ் கடி,குடியுடன் ஆரம்பமாகியது.. நண்பர் லோசன் அழகாக பேசினார்..(சத்தியமா),
பின்னர், பத்திரிக்கை ஆசிரியரின் அறுவல் வெறுத்துப்போன விஷயம் அதுதான்.
தமிழ் எழுத்துப்பிழைகள் அதிகமாக விடும் அவரது பத்திரிகையை திருத்துவதை விடுத்து பாவம் அந்த மேதாவி பதிவர்களை பார்த்து கேள்வி கேட்கிறார். எல்லாம் கலிகாலம், அந்த மேதாவியை யாரும் பேசக்கூப்பிடுவது இல்லை போலும் மனிசன் முடியுமான வரைக்கும் பேசிவிட்டுத்தான் ஓய்ந்தார், பாவம் அவர் இருக்கிறமாவது அவருக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கி அவரது நீண்ட மிக நீண்ட நாள் ஆதங்கத்தை தேர்த்துக்கொள்ள களம் அமைத்துக்கொடுத்தது.. மேதாவியின் பேச்சின் போதே கூட்டம் கலைய ஆரம்பித்து விட்டது... நம்ம பதிவர்கள் பலர் தமது பதிவுகள் பற்றிய கலந்துரையாடலில் மூழ்கிப்போயிருந்தனர், நாகரிகம் கருதி சில மூத்த பத்திரிகையாளர்கள்,சில பதிவர்கள் அவரின் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தார்கள் அவ்வளுதான். தனது ஆதங்கங்களை கொட்டி (எம் தலையில்) தீர்த்துக் கொண்டு அவர் ஓய்ந்தார்,

இதற்கிடையில் வெளி நாட்டிலிருந்து இளைய தம்பி தயானந்தா, குருபரன் ஆகியோர் பேசினார்கள், குருபரன் ரெம்பவும் அறுத்தார்... பாவம் லூஸ் போலுக்கு சிக்ஸர் அடிக்கும் பாணியில் விளாசினார்... கேட்பவன் கேனயனா இருந்தா எருமைமாடு கூட ஏரப்பிலன் ஓட்டுமாம் அப்படித்தான் இருந்தது எல்லாமே, இதற்கிடையில் குடி,குடி .....சிலர் ஆனந்தப் பட்டார்கள். நாம் என்ன நினைக்கிறோம் என்ற கேள்வியே இல்லாமல்............இருக்கிறம்+வலைப்பதிவர் சந்திப்பு =௦௦0 இல் முடிந்தது................
எல்லாம் நம்ம தலை விதி தான் ...................

Read more...

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by