Related Posts with Thumbnails

வியாழன், 29 ஏப்ரல், 2010

தூக்கம் ...


உடைத்தால்
கட்டமுடியாத கூடு
படுக்கையிலே
ஒளிந்திருக்கும்..
தனி உலகம்
கனவின் கருப்பை
இருட்டுக்குள் தெரியும்
வெளிச்சம்..

துக்கம் மறைய

தூக்கம் அவசியம்..

"அங்காடித்தெரு" அழகான கவிதை.

தமிழ் சினிமாவின் மிகக்கேவலமான அடையாளங்களையும் தாண்டி அவ்வப்போது சில நல்ல திரைப்படங்கள் வெளிவருவது கொஞ்சம் ஆறுதல் அளிக்கின்றது
காமக் கூத்தின் கடிவாளமாகி, சினிமாவின் தரம் மிகக் கொச்சையாகி விட்ட
இந்தக் காலங்களில் வெளிவந்திருக்கும் ஒரு அற்புதமான சித்திரம் தான் "அங்காடித்தெரு" அன்றாடம் நம்மைச்சுற்றி நடக்கின்ற எதார்த்தம் பொதிந்த அழகிய கவிதையாக மிளிர்கிறது இந்தப்படம்.

தயாரிப்பாளரின் இரண்டாவது படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு
ஒரு அழகியல் தன்மை கதை அமைப்பிலும் அதன் நகர்விலும் படத்தின்
வெற்றிக்கு ஊன்றுகோலாக அமையும் சாதகமான சங்கதிகள் அதிகம்.

எல்லாமே புது முகங்கள் ஆனால் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும்
மிகத்தேர்ந்த நடிகர்களையும் விஞ்சும் தெளிந்த அப்பட்டமான நடிப்பை
ஒவ்வொரு காட்சியிலும் பாராட்டாமல் இருக்க முடியாது.
வறுமைதான் இந்த நூற்றாண்டின் சாபக்கேடு, வறுமையினால் திறமை
இருந்தும் கற்க முடியாதவர்கள் வாழ்க்கைப் பாரத்தை குறைக்க பட்டணம்
வந்து அடிமாடாக, அடிமைபோல வேலைசெய்வதும் வேலைத்தளத்தில் அவர்கள்
அனுபவிக்கின்ற கொடுமைகளையும் தோலுரித்து காட்டுகிறது "அங்காடித்தெரு".

முதலாளித்துவத்தின் சாக்கடைத்தனமான போக்கு எல்லாக்காலத்திலும்
ஒன்றுதான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து காட்டுகிறது.அடிமட்ட
தொழிலார்களின் நலன்களில் அக்கறை காட்டாக முதலாளி வர்க்கத்தின் முகமூடியை அழகாக கிழித்துக்காட்டும் "அங்காடித்தெரு". ஒவ்வொருவரும்
கட்டாயம் பார்க்க வேண்டிய பேசும் சித்திரமாகும்.

மேற்கத்திய பாலியல் கலாச்சாரத்தை பின்பற்ற துடிக்கும் கமல் போன்றவர்கள்
"பருத்தி வீரன்", "அங்காடித்தெரு" போன்ற நல்ல சினமாக்களை பார்க்க வேண்டும்
இரானிய, சினிமாவின் எதார்த்தத்தை அப்படியே காட்சிப் படுத்திருக்கும் இந்தப் படம்
தமிழ் சினிமாவின் வளர்சிப்பாதையை மெல்ல கட்டமிட்டு காட்டியுள்ளது.

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

மீளெழும் கனவுகள்..

அதிகாலைப் பட்சிகளின்
அலறல் கடந்து..
சூரியகக் குளியல் நடத்தும்
நிர்வாண பொழுது
சுவாசம் புணரப்பட்டு
முகம் கழுவாத மரங்கள்
சோம்பல் முறித்து..
எழும் ஒருநாளின்
தழும்புகளை தடவிப்பார்க்கும்
நிழல்கள்..
தார்ப்பாதைகளின்
தாழ்வாரங்கள் தோறும்..
கனவுக் கொடிகள் படர்ந்து
வேகமாய் ஓடும் வாழ்க்கை
தன்னை கடந்து செல்லும்
ஒரு மிக நெருங்கிய நட்பையோ..
அல்லது..
ஒரு உறவையோ..
அவதானித்து
குசலம் விசாரிக்க முடிவதில்லை
இந்த மீளெழும் கனவுகளில்.

மகளுக்கொரு தாலாட்டு...!

காலைப் பொழுதின்
பனித்துளியாக
கண்மணி வந்தாய்
கருவழியாக....


பிஞ்சுக் காலால்
எட்டி உதைந்து
காலக்கதவின்
பூட்டைததிறந்தாய்...

மெல்ல மலரும்
ரோஜா இதழாய்..
கண்கள் திறந்தாய்
பூவைப் போல

நீ கண்கள் திறந்து
வருடம் ஒன்றாம்..
மெய்தான் மரியம்
உனக்கு வயது ஒன்று

உம்மா உம்மா ....
உன் இனிக்கும் மொழிகள்
வாப்பா என்றழைக்கும்.
வசந்த வார்த்தை

என்றும் அழுக்கா..
உன் மழலை மொழியில்
வழுக்கி விழுந்து
பரவசம் அடையும்..
இன்பம் தந்தாய்
இனிய மகளே.

நஸ்மி என்ற
நறுமலர் தந்த..
பாசப் பூவே
வருடம் ஒன்றில்
காலை வைத்து..
எட்டி நடக்க
எத்தனிக்கும்
எந்தன் மகளே..
நாளும் உனக்காய்
வாழ்த்துப்பாடும்
இந்த தந்தை நெஞ்சு..

23 /05 / 2010 முதலாவது பிறந்த தினத்தை கொண்டாடும் மகள் பாத்திமா மரியத்திட்க்கு

நாச்சியாதீவு பர்வீன். இலங்கை.

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

க.பொ.த(சா/த௦) பரீட்சையில்தமிழ் மொழிமூலத்தில் அனுராதபுரத்தில் பாத்திமா சதீகா சாதனை..

சாதனை மாணவி பாத்திமா சதீகா

கடந்த க.பொ.த(சா/த௦) பரீட்சையில் நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி பாத்திமா சதீகா 8A , B பெருபேற்றினை பெற்றுள்ளார் இதுவே இம்முறை அனுராத புர மாவட்ட தமிழ்
மொழிமூலத்தில் பெறப்பட்ட மிகச்சிறந்த பெறுபேறாகும், தவிரவும் நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்தியாலய வரலாற்றில் பெறப்பட்ட சிறந்த பெருபேறாகவும்
இது கணிக்க படுகிறது. உயர் பெறுபேற்றினை பெற்று தமது பாடசாலைக்கு
நன்மதிப்பைப் பெற்றுத்தந்த இந்த மாணவி தமிழ் மொழிமூல மேலதிக கல்விப்பணிப்பாளர் என்.எம்.மஹ்சூக், ஜே.தாஜிஉம்மா தம்பதியினரின் புதல்வியாவார்.

இதுதவிர சிறந்த பெறுபேற்றினை பெற்ற நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள்
01 மஹ்சூக் பாத்திமா சதீகா 8 A , B .
02 நசார்தீன் பாத்திமா சபீரா 6 A , 3 B
03 கமால் பாத்திமா ரிப்னா 3A , 3B , 3C
04 ஹாரீஸ் பாத்திமா பர்வீனா 3A , 1B , 5C
05 முஹமத் சஜாம் 3A , 5C

உயர்தரத்திலும் இவர்கள் நல்ல பெறுபேற்றினை பெற்று வெற்றிபெற வாழ்த்துக்கள்..

வெள்ளி, 16 ஏப்ரல், 2010

மரணத்தின் வாசல்..

காலச் சக்கரம்
நினைத்தபடி ஓடும்

நாம் நினைக்காத
ஒரு பொழுதில்
திடீரென்று நின்று..
தன் வாசல் திறந்து.
விரும்பியவரை
இழுத்துக்கொள்ளும்
மரணம்..

அது ஆணாக..
பெண்ணாக.
இன்னும் குழந்தையாக
என்று..
யாராகவும் இருக்கலாம்

ஒரு பெருமூச்சி தானும்
விட அவகாசம்
கிடைக்காத தருணமது

எந்த விருப்பமும்
எந்த வெறுப்பும்
நம்மை ...
திருப்பி கொண்டு வர மாட்டா.
மரணத்தின் வாசலை கடந்த பின்.

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by