Related Posts with Thumbnails

புதன், 30 டிசம்பர், 2009

நமது நட்புப் பற்றி




ஒரு அறுகம்
புல்லிலும் மென்மையான
நமது நட்பு பற்றி
இன்னும் எனது
கண்ணீர் துளிகள் பேசுகின்றது.

எல்லோருக்கும்
உன்னைப் போலேவே
அன்பும் மென்மையும்
நிறைந்த நண்பன் கிடைப்பதில்லை
அந்த வகையில்
நான் அதிஸ்டக்காரன்.

எந்தத் துர்தேவதையின்
சாபம் நம்மைப் பிரித்தது

ஒவ்வொரு விடுமுறையும்
நம் கிராமத்தை
தரிசனம் செய்யும்
தருணங்களில் ...
உன்னை தேடி அவாவும்.
என் கண்கள்
வெறுமை கலந்த
ஏமாற்றத்துடன் திரும்புகிறது..

வாழ்க்கைப் பாரத்தை
இறக்கிவைக்க
நீ ஒரு திசையில்
நானொரு திசையில்

எல்லாம் முன்னேற்றம்
அடைந்து விட்ட போதும்
இன்னும் நமது முகவரிகள் மட்டும்
மூடியே கிடக்கின்றது.
நாம் அறியாமல்.

நாச்சியாதீவு பர்வீன்.
armfarveen@gmail.com.

வெள்ளி, 25 டிசம்பர், 2009

இரவுத் திருடன்.


பின்னேரத்தின் வெளிச்சம்
அருகிப் போய்
இருள் கவ்வத் தொடங்கியது
பூமியை.......

குருவிகளினதும் காக்கைகளினதும்
இரைச்சல் ஒலிஅடங்கிப் போய்
வெகு நேரம் ஆகிப் போனது

மரங்களின் ஆட்டம் இல்லை
மனிதர்களின்
நடமாட்டம் இல்லை
எல்லா உயிரினங்களும்
உறங்கிப் போய்
வெகு நேரமாகிப் போனது,

இரவின் காதலன்
சந்திரன் மட்டும்
நட்சத்திர நண்பர்களோடு
வானத்து தெருக்களில்
பவனிவந்தான்...

ஊர் உறங்கிப் போனதை
உறுதிப் படுத்திக் கொண்ட
அந்தத் திருடன் களத்தில்
குதித்து விட்டான்...

இன்று யார் வீடோ..
ஆனால் இவனது
எல்லா திருட்டுகளையும்..
வழமைபோலவே
ரசித்துக் கொண்டிருந்தனர்..
மெல்லிய இருளும்..
மேகக் கூட்டங்களும்
சந்திரனும்..
அவன் சகாக்களும்..

நாச்சியாதீவு பர்வீன்.

திங்கள், 21 டிசம்பர், 2009

காலை வாரி விட்ட பின்வரிசை துடுப்பாட்டம்.

இலங்கை-இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டி பெரிதும் எதிர்பார்க்கப் பட்ட ஒன்றாகும், இலங்கை அணியின் அசுரமான துடுப்பாட்டம் ஒன்றைமட்டுமே நம்பி
நமது அணி இந்த இந்தியத் தொடரில் பங்கு பற்றுவதாகவே கருத முடிகிறது, களத் தடுப்பிலும், பந்து வீச்சிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு நம்மவர்கள் பிரகாசித்ததாக கூறமுடியாது, எப்படியோ துடுப்பாட்டத்திற்கு சாதகமான ஒருமைதானத்தில் இலங்கை அணியின் பலமில்லாத பின்வரிசை துடுப்பாட்டத்தின் பலவீனத்தால் மூன்றாவது ஒருநாள் போட்டி இலகுவாக இந்தியா வசமாகியது.

நல்ல போர்மில் உள்ள தில்சானின் அவசரமான துடுப்பாட்டம், அவரது கிடைத்த சந்தர்பத்தை பயன்படுத்த தவறியமை மொத்த ஓட்ட எண்ணிக்கையின் வீழ்சிக்கு பிரதான காரணமாகும், உபுல் தரங்க-தில்சான் இருவருக்குமிடையிலான கருத்து வேறுபாடுகள், கூட்டாக இயங்காத தன்மை, நானா? நீயா? என்ற மனப்பான்மை தில்சானை அவசரப் படுத்தியிருக்கலாம்,

உபுல் தரங்க-சங்ககார ஜோடி கூட அற்புதமாகத்தான் ஆடியது சங்ககார அநியாயத்திற்கு சேவக்கின் பந்து வீச்சிற்கு ஸ்டாம் செய்யப்பட்டு வெளியேறியது பரிதாபகரமானது, சங்ககாராவின் ஆட்டமிழப்பு மட்டுக்கும் அணியின் ஓட்ட எண்ணிக்கை சராசரி ஆறு வீதத்தை தாண்டியே சென்றது, அவரின் ஆட்டம் இழப்பின் பின் மஹேல மீண்டும் சொதப்பிவிட்டு சென்றார், அணியின் ஓட்ட எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது
மஹேல கொஞ்சம் பொறுப்பாக ஆடியிருக்கலாம், மஹேலவின் அற்புதமான துடுப்பாட்டம் எங்கே போனது பொறுமையும், நிதானமும் கலந்த அவரது துடுப்பாட்டத்தை இப்போதெல்லாம் அவர் வெளிப்படுத்த தவறுவது அணியில் அவரது இடத்தை எதிர் காலத்தில் கேள்விக் குறியாக்கலாம்.

சதம் அடிப்பார் என நினைத்த தரங்க ஏமாற்றினார், எல்லாம் அவசரம் தான்,

கண்டம்பி, கபுகெதர இருவரும் துடுபாட்டத்திட்கு சாதகமான மைதானத்தில் ஆட தகுதியற்றவர்கள், பெரும்பாலும் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானத்திலேயே இவர்களின் பயிற்சிகள் இடம்பெற்றிருப்பதால் அவ்வாறன மைதானங்களில் மட்டுமே இவர்களால் ஆடமுடியும் என்பதை இவர்களது
அண்மைய துடுப்பாட்ட நிலவரம் தெளிவாக்குகின்றது, பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதனமென்றால் வேகமாக துடுப்பெடுத்து ஆட வேண்டிய அவசியம் இல்லை பந்தை தடுத்து விக்கட்டை பறி கொடுக்காமல் இருந்தாலே போதும் என்ற நிலையில் தான் ஆட வேண்டும், இந்தவகையில் இவர்கள் இருவரையும் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான மைதானத்தில் நடைபெறுகின்ற போட்டிகளுக்கு மட்டுமே பயன்படுத்தினால் நல்லது,
அஞ்சலே மத்திவின் வெற்றிடம் தெளிவாக விளங்குகிறது, இந்தப் போட்டியிலாவது சனத்தை பயன் படுத்தியிருக்கலாம், இலங்கை அணி சகல துறை ஆட்டக்காரர்களின் அவசியத்தை ஏன் இன்னும் உணராமல் இருக்கின்றது என்பது புரியவில்லை, சுராஜ் ரண்டிவ் நல்ல தெரிவு, வாஸ் போன்ற சகல துறை ஆட்டக் காரர்களின் அவசியம் அணியின் கட்டாயத்தேவை, பின்வரிசை துடுப்பாட்டத்தின் பலத்தில்தான் அணியின் சராசரி வெற்றி தங்கியுள்ளது.
ஜடேஜா, ஹர்பஜன், நன்றாக பந்து வீசினார்கள்,ஜடேஜா அற்புதமாக செயற்பட்டார். இலங்கை அணியை மடக்குவதில் இவர்களின் பங்களிப்பு மெச்சத்தக்கது.
இந்திய அணி வெகு கூலாக வெற்றி இலக்கை தொட்டது, சேவாக், டெண்டுல்கர் ஆகியோரின் அபாரமான ஆட்டம் அணியை வலுவான நிலைக்கு கொண்டு வந்தது, டெண்டுல்கார் மீண்டும் அசத்தினார், சிங்கம் சிங்கம்தான். அமைதியாக, வெகு கூலான டென்டுல்காரின் ஆட்டம் சூப்பெர்ப், என்ன ஒரு குறை வெறும் நாலு ஓட்டத்தில் சென்ச்சரியை தவறவிட்டது தான்.

இலங்கை அணி அடித்த ஆட்டத்திலாவது தன்னை சீர் செய்து கொள்ளுமா?........................பொறுத்திருந்து பார்ப்போம்.

ஞாயிறு, 20 டிசம்பர், 2009


For more widgets please visit solidaire maintenant

வெள்ளி, 18 டிசம்பர், 2009

சட்டியிலேயே கிடந்து கொதிப்போமா? அல்லது அடுப்பில் விழுந்து எரிவோமா?



இன்றைய ஊடகங்களின் தலைப்புச் செய்தியே எதிவரும் ஜனாதிபதி தேர்தல் பற்றித்தான், இலங்கையின் பட்டி தொட்டி என்று எல்லா முனைகளிலும், எல்லா தரப்பினரும் குசுகுசுக்கும், வாதிக்கும் விடயம் எதிவரும் ஜனாதிபதி தேர்தல், இலங்கையையும் தாண்டி உலக அரசியல் அரங்கில் இலங்கையின் இந்த ஜனாதிபதி தேர்தல் பற்றிய அவதானிப்பு வெகுவாக அதிகரித்துள்ளது எனலாம், எப்படியோ ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியும் அறிவிக்கப்பட்டு, நோமிநேசன் கூட கட்டியாகிவிட்டது, சுமார் 22 பேர்கள் இம்முறை தேர்தல் களத்தில் குதித்துள்ளனர், இதில் பிரதானமாக இருவர் மட்டுமே களத்தில் வாக்கு வேட்டைக்காக குதித்துள்ளார்கள் என்பது
எல்லோரும் அறிந்த விடயமாகும், ஒருவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மற்றவர் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா!
இருவரும் ஒரே அணியில் கட்டிப் புரண்டவர்கள்தான் இருந்தும் ஆசை யாரைத்தான் விட்டு வைத்தது அந்த வகையில் நாட்டு மக்களுக்காக சரத் பொன்சேகா! தன்னை அரசியலில் ஈடு படுத்தியுள்ளாராம் (நல்லாவே காதில் பூ சுத்துகிறார்).

இந்த தேர்தலை மிகவும் ஆழமாக அவதானிக்கவும், ஆராயவும் வேண்டியுள்ளது, அதற்காக வலுவான பல காரணங்கள் உள்ளன,மட்டுமன்றி சிறுபான்மையினர் பற்றிய இரண்டு பிரதான வேட்பாளர்களினதும் அவதான குவிப்பு பற்றியும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

01 ) மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசியல் புலம்.
02 ) ஜெனரல் பொன்சேகா அவர்களின் அவர்களின் அரசியல் புலம்.
03 ) சர்வதேசத்தின் நிலைப்பாடு
04 ) சிறுபான்மை இனக் குழுமத்தின் நிலைப்பாடு.

மேற்சொன்ன தலைப்புகளில் இந்த ஜனாதிபதி தேர்தல் பற்றிய ஆய்வினை மேற்கொண்டால் இலகுவாக இருக்கம் எனக் கருதுகிறேன்.

01 ) மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசியல் புலம்

யுத்தம் தொடர்பான வெற்றியை மூலதனமாக வைத்தே மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன் எதுத்துச்செல்கின்றார், இது பெரும்பான்மை சிங்கள மக்களின் மனதில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பற்றிய ஒரு மாய விம்பத்தை
தோற்றுவித்துள்ளது, இலங்கையின் மொத்த சனத்தொகையில் சுமார் 74 வீதமானவர்கள் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களாவார்கள்.அதிலும் 65 வீதமானவர்கள் கிராமங்களை அண்டிய பிரதேசங்களில் வாழ்பவர்கள், இந்த 65 வீதமான கிராமங்களை அண்டிய பிரதேசங்களில் வாழ்பவர்கள் யுத்த வெற்றியை நாட்டுக்கு கிடைத்த சுத்தந்திரமாகவே கருதுகின்றனர், மட்டுமன்றி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அண்மைக்காலமாக பொதுக் கூட்டங்களில் தமிழில் உரையாற்றுவதும், சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்று எல்லா தரப்பினரும் இந்த நாட்டின் சொந்தக்காரர்கள் என்றும் சொல்லி வருவது சிறுபான்மையினர் மத்தியில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது, இருந்தும் தமிழ் முஸ்லிம் வியாபாரிகள் வெள்ளை வேனைக் கொண்டு கடத்தப் படுவதும், ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதும், சடுதியான பொருளாதார வீழ்ச்சியும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பின்னடைவுக்கான வலுவான காரணங்களாகும்.

மீள் குடியேற்றம் துரிதமாக நடை பெற்றுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அந்த மக்களின் மெய்யான உணர்வுகளை இந்த தேர்தல் பிரதிபலிக்கும், இதையும் தாண்டி வடமேல் மாகாண பாரளமன்ற உறுப்பினரும் ஜோன்சன் பெர்னாண்டோ, மத்திய மாகாண எதிர்க்கட்சி தலைவர் எஸ்.பி.திசாநாயக, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆசாத்சாலி, இப்படி எதிர் கட்சியில் பிரபல்யமான
பல தலைகள் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ள நிலையிலும், மஹிந்த ராஜபக்ஷ அவர்களினதும், அவர் சார் அரச ஊடகங்களினதும் சரத் பொன்சேகா மீதான அதீதமான தூற்றுதல்கள், கேவலமான வார்த்தைப் பிரயோகங்கள், சரத் போன்செகாவுக்கான இலவச விளம்பரங்களாகும்,

மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சி குடும்ப ஆட்சிஎன்றும் அதனை இல்லாது ஒழிக்கவே தாம் அரசியல் பிரவேசம் எடுத்துள்ளதாகவும் கூறும் ஜெனரலின் பேச்சு உண்மையாக இருந்தும் எடுபடுவதாய் தெரியவில்லை, அத்தோடு அர்ஜுன ரணதுங்கவின் பல்டி இன்னுமொரு பேரிடியாக மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு விழுந்துள்ளது, பலவிடயங்களில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலையை தடவி குட்டும் அரசியல் சாணக்கியத்தை கொண்டுள்ளதும் அரசியல் விமர்சகர்களால் விமர்சிக்கப் பட்டதும் பொதுமக்களால் குறிப்பாக சிறுபான்மையினாரால் அவதானிக்கப்பட்ட விடயமுமாகும், மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் என்னதான் இந்த நாடு எல்லா இனத்தினருக்கும் சொந்தம் என்று சொன்னாலும் இன்னும் "மே புதுன்கே தேசயே" இது பவுத்தர்களின் தேசம் என்கின்ற இனத்துவேச கோசம் எழுந்து கொண்டுதான் இருக்கின்றது.

அத்தோடு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசன் சந்திரகாந்தன், அமைச்சர் முரளிதரன் ஆகியோர் தமிழ் மக்களின் வாக்குகளை
திரட்டி ஜனாதிபதிக்கு தமது பலத்தை காட்ட முழு முனைப்புடன் செயற்படுவர், அமைச்சர் அதாவுல்லாஹ், அமைச்சர் அமீரலி, பேரியல் அஸ்ரப், பாயிஸ் முஸ்தபா, ஹிஸ்புல்லாஹ் போன்றோர் முஸ்லிம்களின் வாக்குகளை திரட்ட முயற்சி செய்வார்கள். இதே நிலை வடக்கிலும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் தலைமையில் முஸ்லிம்களின் வாக்குகளும், டக்லஸ் தேவானந்தா தலைமையில் தமிழர்களின் வாக்குகளும் திரட்ட ஆளும் கூட்டணி முயற்சி செய்யும்,
எப்படியோ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கணிசமான அளவு வாக்குகள் எடுப்பார்,...............

மலையகத்தில் இருக்கவே இருக்கிறார் ஆறுமுகம் தொண்டமான் மக்களாவது மண்ணாங்கட்டியாவது தனக்கு அமைச்சுப் பதவி கிடைத்தால் அதுவே நான் செய்த புண்ணியம் இவரை நம்பியும் இலட்ச்சக் கணக்கான அப்பாவி வாக்காளர்கள் எனவே இந்த அப்பாவி மக்களின் வாக்கில் பெரும்பான்மையான வாக்குகள் ஜனாதிபதிக்கே.எப்படியோ மகிந்த ராஜபக்ஷ அவர்கள் பயந்து டென்சனாகி காணப்பட்டாலும் ஓட்டப் பந்தயத்தில் அவரோடு ஓட வந்திருப்பது நொண்டிக் குதிரைகளாகும் எனவே நாம் விரும்பியோ
விரும்பாமலோ மீண்டும் ஜனாதிபதியாகும் சந்தர்ப்பம் மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கே அதிகம் உள்ளது அது நியாயமான தேர்தலாக இருந்தாலும் சரி.......அல்லது................

02 ) ஜெனரல் பொன்சேகா அவர்களின் அவர்களின் அரசியல் புலம்..

முன்னர் இருந்த எந்த இராணுவ தளபதிக்குமில்லாத அளவுக்கான புகழ் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு கிடைத்தது என்றால் அதற்கு காரணம் யுத்த வெற்றியாகும், வெறும் இராணுவத்தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவுக்கு திடீரென எப்படி அரசியல் ஆசை முளைத்தது அங்கேதான் நிற்கிறார் ரணில் விக்ரமசிங்க எனும் அரசியல் சாணக்கியன், ரணில் விக்ரமசிங்க எத்துனை முறை தோற்றாலும் அரசியல் ரீதியாக அவருக்கு இருக்கின்ற மதிநுட்பமும், ஆளுமையும் இன்னும் கிஞ்ச்சித்தும் குறையவில்லை எனலாம்,
இதற்கு நல்லபல உதாரணங்களை கூறமுடியும், 2001 களில் UNP ஆட்சி பீடமேரியது விடுதலை புலிகளுடன் பேச்சுவார்த்தை என்று
ஒரு புறம் யுத்த நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்த அதே காலப் பகுதியில் அலிசாகிர் மௌலானவை பாவித்து விடுதலை புலிகளின் கிழக்கு மாகாண பொறுப்பாளரும், வே.பிரபாகரனின் வலது கையுமான கருணா அம்மானை பிரித்து அசைக்க முடியாத ஒரு போராட்ட அமைப்பின் ஆணிவேரை பிடுங்கி பிளவு உண்டு பண்ணி அந்த அமைப்பே அடியோடு அழிவதற்கு பாதை சமைத்தவர். இதே நிலை தான் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் நடந்தது.

உண்மையிலேயே ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அரசியலில் குதிக்கும் ஆர்வமும் ஆசையும் ஆரம்பத்தில் இருக்கவில்லை
இதனால் தான் கனடாவில் வைத்து இலங்கை பவுத்தர்களுக்கான நாடு இதில் சிறுபான்மையினர் அதிகபட்ச உரிமைகளை எதிர்பார்க்கக் கூடாது என்றதும், மதுவும், போதையும் மக்கள் பாவிக்க வேண்டும் அது மூளையின் சுறுப்பான இயக்கத்திற்கும், உடம்பின் உற்சாகததிக்கும உதவும் என்ற முட்டாள் தனமான கருத்துக்களை இவர் வெளியிட்டார், இது இப்போதுகளில் பிரபல்யமாகியுள்ளன, இது ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பலத்த பின்னடைவாக கருத முடியும் மட்டுமன்றி அத்தோடு அரசியல் ஆசை இவருக்கு ஏலவே இருந்த்திருந்தால் மேற்சொன்ன மடத்தனமான கருத்துக்களை முன் வைத்திருக்க மாட்டார், எனவே பொன்சேகாவை அரசிலிருந்து பிரித்து ஜனாதிபதிக்கு எதிரான ஜனாதிபதி வேட்பாளராக்கிய பெருமை சாட்சாத் ரணில் விக்கிரமசிங்கவுக்கே சேரும்,

இனி பல கட்சி கூட்டணி, JVP ஏலவே மக்கள் மத்தியில் அதிருப்தியுடைய கட்சியாக பெயர் பெற்று, துவேசக் கருத்துகளை மூலதனமாக்கி அரசியல் பொழைப்பு நடத்தவந்து கேவலப் பட்டு நிற்கும் கட்சி, நிச்சியமாய் இவர்களினால் ஜெனரலின் வாக்கு வங்கி குறையுமே தவிர கூடாது, ரணிலையும் UNP கட்சியினையும் பாரதூரமாக விமர்சித்துவிட்டு தமக்கு சலுகை கிடைக்கவில்லை என்றதும் முரண்பட்டு மூட்டையை கட்டிக் கொண்டு வெளியேறிவிட்டார்கள், அதிலும் தமது பாராளமன்ற உறுப்பினர்கள் பலரை அரசுக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டுத்தான் சென்றுள்ளார்கள்.

UNP இன் திட்டம் தான் இது என்றாலும் ரணில் இந்தத் தேர்தலில் ஆரோக்கியமான காய் நகர்த்தலில் ஈடுபட்டுள்ளர், தான் வெற்றி பெறப் போவதில்லை என்ற எதார்த்தம் ரணிலுக்கு புரிந்திருக்கிறது, எனவேதான் மாற்றுவழி தேடினார், ஜெனரல் மாட்டினார். UNP இக்கான
வாக்கு வங்கியில் எந்த மாற்றத்தையும் காண முடியாது அது ரணில் விரல் நீட்டும் திசையில் விழும், அந்த வகையில் ஜெனரல் UNP இனருடைய வாக்குகளை தனதாக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது,

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கரஸ் முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகளாக தம்மை நினைத்துக் கொண்டு மேடைகளில் முழங்குகின்றனர், கண்ட இடங்களிலும் கும்பிடு போட்டு, சமூகம்,சமூகம் என்று கூறிக்கொண்டு UNP இன் பணக் கட்டுகளுக்கு அடிமையாகி இருக்கும் ரவுப் ஹகீம் போன்றவர்களால் வெற்றுக் கோசம் போட மட்டுமே முடியும், மாறாக
முஸ்லிகளின் 80 வீதமான வாக்குகளை கனவிலும் பெற்றுக்கொள்ள முடியாதாகும், இந்த அரசின் மீதான கோபத்தை முஸ்லிம்கள் ஒருவேளை சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக பயன்படுத்தலாமே ஒழிய அது ரவுப் ஹகீமுக்காக அல்லது ஸ்ரீ லங்கா முஸ்லிம் கண்க்ராசுக்காக என்பது முட்டாள்தனமே, உண்மையில் இனவாதத்தை தூண்டுபவர்களில் ரவுப் ஹக்கீமும் ஒருவர் என்றே கருத
முடியும்.

அடுத்து மேலக மக்கள் முன்னணியின் மனோ கணேஷன், தமிழ் என்றும் தமிழர் என்றும் குரல் கொடுக்கும் இவர் டமிலில் பேசுவது எந்த்தத் தமிழினத்தை காப்பாற்ற என்று புரியவில்லை, அடிக்கடி கொள்கை மாறும் இவரை நம்பியும் மக்கள் வாக்களிக்கின்றார்கள் எனும் போது நமது மக்களின் அரசியல் விழிப்புணர்வு மீது சந்தேகம் எழுகின்றது,
ஆக இந்த அரை வேக்காடுகள் எல்லாம் சேர்ந்து சரத் பொன்சேகாவை ஆற்றில் இறக்கியுள்ளர்கள், சரத் பொன்சேகாவும் இவர்களை நம்பி ........(மண்குதிரைகள் என்று தெரியாமல்) இறங்கியுள்ளார்.

இதற்கிடையில் கோசம் வேறு! நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு ஆப்பு வைப்போம், மன்னராட்சியை கவிழ்ப்போம், குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம், இவைகளெல்லாம் மக்களை உசுப்பேத்த போடும் மாய வார்த்தைகள், இதையேதான் JR தொடக்கம் இந்த மஹிந்த மட்டுக்கும் சொன்னார்கள் என்னத்தை கிழித்தார்கள், ஏதோ சரத் பொன்சேகா கொஞ்சம் வாக்கு எடுப்பார் ஆனால் நிச்சியமாய் வெற்றி பெறமாட்டார்.
இருந்தும் முன்னாள் ஜனாபதி சந்திரிகா, மங்கள சமரவீர ஆகியோரின் ஒத்துழைப்பு ஒருவேளை தேர்தல் முடிவுகளில் மாற்றங்களை கொண்டுவரலாம்........
( தொடரும்....)

வியாழன், 17 டிசம்பர், 2009

அதிரடியும் அசத்தலும்,(50 /50 )



இலங்கை, இந்திய முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டி கலக்கலாக முடிந்து போயுள்ளது, இந்திய அணியின் அதிரடியான துடுப் பாட்டம் இலங்கை பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தது, முரளியின் இடைவெளி தெளிவாக புரிந்து கொள்ளப்பட்ட ஆட்டமாக இதனைக் கொள்ள முடியும், ஒருவேளை முரளி இருந்திருந்தால் இந்திய அணியின் ஓட்ட வேகம் மட்டுப்படுத்தப் பட்டிருக்கலாம், சேவாக்கின் அதிரடி பந்து தடுப்பளர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது, டெண்டுல்கர்,தோனி, ஆகியோரின் துடுப்பாட்டம், கடைசியில் ஜடேஜாவின் இரண்டு சிக்சர்கள் இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கையை
414 ஆக உயர்த்தியது,

இந்திய அணிக்கு நாம் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என்ற தோரணையில் இலங்கை அணியின் துடுப்பாட்டம் தொடங்கியது,
தில்சானின் அபாரமான அதிரடி துடுப்பாட்டம், மைதானத்தை அழகு படுத்தியது, மட்டுமல்ல இந்திய அணியினரின் வயிற்றில் புளியை கரைத்தது, உபுல் தரங்கவின் நிதானமான துடுப்பாட்டம், இலங்கை அணியினை வெற்றியின் பக்கம் இட்டுச்சென்றது, எதிபாராத சந்தர்ப்பத்தில் உபுல் தரங்க ஆட்டமிழக்க அணித்தலைவர் சங்க கார வந்த வேகத்திலே விளாசத் தொடங்கினார், இந்திய பந்து வீச்சாளர்களுக்கு மீண்டும் தலைவலிதொடங்கியது எல்லா முனைகளிலும் சங்ககார இந்திய பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்தார்,
அநேகமாய் இலங்கையின் வெற்றி நிச்சயிக்க பட்டு விட்டதாகவே விமர்சகர்கள், பார்வையாளகள் கருதினார்கள்,

அந்தோ பரிதாபம் சங்கவின் விக்கட் வீழ்ந்த போது, ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள்( நானும் தான்), தொடர்ந்து ஜெயசூரிய, ஜெயவர்தன, இருவருமே சொதப்பி வெறுப் பெற்றினார்கள், வந்த வேகத்தில் திரும்பிய இவர்கள் இருவரும்தான் இலங்கையின் தோல்விக்கு பொறுப்பு கூற வேண்டும் இருவரில் ஒருவர் கொஞ்சம் நிதானமாக ஆடியிருந்தால் இலங்கை அணி வெற்றி பெற்றிருக்கும்,
தொடர்ந்து தில்ஷன் இன் ஆட்டமிழப்பு இலங்கை அணியின் வெற்றிக்கனவை ஆட்டம் கொள்ளச்செய்தது,
கடைசியில் கண்டம்பி,அஞ்சல மேத்திவ் கொஞ்சம் நம்பிக்கை அளித்தார்கள், கடைசியில் 12 பந்துகளுக்கு 15 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய இலக்கு இலங்கை அணிக்கு இருந்தது, இது ஒன்றும் எட்ட முடியாத பெரிய இலக்கு இல்லை அத்தோடு
அன்றைய போட்டியைப் பொறுத்த மட்டில் அது ஒரு பெரிய இலக்குமல்ல, இந்த நிலையில் கூட இலங்கை அணி வெற்றி பெரும் என்ற நம்பிக்கை இருந்தது, அத்தோடு கண்டம்பி, மதிவ் ஆகிய இருவரும் குறைந்த பந்துகளில் கூடிய ஓட்ட எண்ணிக்கை எடுக்க கூடியவர்கள், ஆனால், இருவருமே சகிர்கானினதும், அசிஸ் நேஹ்ராவினதும் பந்துகளை எதிர்கொள்வதில் சிரமத்தை மேற்கொண்டனர், இதனால் இலங்கை அணிக்கு கிடைக்க வேண்டிய வெற்றிக்கனியை சகிர்கானினதும், அசிஸ் நேஹ்ராவினதும் நேர்த்தியான, துல்லியமான இறுதி ஓவர்கள் இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்தது, எல்லா அதிரடி துடுப்பாட்டக் காரர்களையும் தாண்டி இறுதி பந்து ஓவர்களை வீசிய அந்த இருவரின் அபாரமான ஆட்டம் பாராட்டத்தக்கது, வெறும் 3 ஓட்டங்களில் வெற்றி இலக்கை பறி கொடுத்த இலங்கை அணியில் சனத் ஜெயசூரிய ஒரு சிக்சர் அடித்து விட்டு ஆட்டம் இழந்திருந்தால் ஒரு வேளை வெற்றி பெற்றிக்கலாம்...........
நாளைய(18 / 12 / 2009 ) போட்டி இதை விடவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்வு கூற முடியாது இரண்டு அணியும் சமபலத்தில் இருந்தாலும், இந்திய அணிக்கே வெற்றிக்கான அதிக வாய்ப்பு இருக்கிறது, எப்படியோ நாளைய போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும் அது இலகுவான வெற்றியாகவே அமையும் என்பது என் கருத்து.................?

வெள்ளி, 11 டிசம்பர், 2009

மலிவு விலையில் நட்பு?



மலிவு விலையில் நட்பு?

நட்பு என்பது அலாதியான அனுபவமாகும், ஒரு "நல்ல நண்பன் கிடைப்பது ஆயிரம் பொற்காசுகள் கிடைப்பதை விடவும் மேலானது" என்கிறது ஒரு பாரசீகப் பழமொழி
"ஒருவனை அறிந்து கொள்ள அவனது நண்பனுடன் பழகிப் பார்" என்கிறது ஒரு முது மொழி
"நல்ல நண்பர்கர்களை தேடிக்கொள் உன் வாழ்க்கை சந்தோசமாக அமையும்" என்கிறது ஒரு அராபிய பழ மொழி.
எனவே இந்த உலகத்தில் தாய், தந்தை, உறவுகள் இவைகளின் அன்பானது இயற்கையிலேயே நமக்கு
கிடைக்கும் ஒன்றாகும் அதையும் தாண்டி பிறப்பிலே நமக்கு கிடைப்பதாகும், ஆனால் நட்பின் மூலம் கிடக்கும் அன்பும், நேசமும், புரிந்துணர்வும் மிகவும் வித்தியாசமானதாகும், அது புரிந்துணர்வின் அடிப்படையில் இடையில் நம்மோடு சேர்ந்து கொள்வதாகும் இருந்தும் .எள்ளுகளோடு புல்லுகளும் முளைப்பதுண்டு அப்படித்தான் சிலர் நட்பை கொச்சைப் படுத்தி விடுகின்றனர், சுயநலத்திற்காக நட்புக்கொள்ளுகின்றனர்., சந்தோசங்களின் போது கை குலுக்கி குதூகலிக்கும் இவர்கள் சிறு துன்பம் வரும் போது மெதுவாக நழுவி விடுவார்கள், இன்னும் சிலர் உள்ளார்கள் தமது தேவைக்காக மட்டும் வந்து நம்மோடு நட்புக் கொள்வார்கள் தேவை முடிந்தவுடன் கம்பி நீட்டி விடுவார்கள், இப்படி நட்பின் பேரில் நாடகமாடும் நிறையப் பேர் இருக்கத்தான் செய்கின்றாகள்.

இதையும் தாண்டி நல்ல நட்பு. சந்தோசமானது, பாலகபருவ நட்பு, பள்ளிப் பருவ நட்பு, விடலைப் பருவ நட்பு, வாலிபப் பருவ நட்பு........... இப்படி நமது வாழ்நாளில் நாம் கடக்கும் எல்லாப் பருவங்களிலும் ஏதாவது ஒருவகையில் நட்பும் நம்மை உரசிக்கொண்டும்,தாண்டியும் செல்கின்றது
நமது அன்றடங்களில் நாம் நிறையப் பேரை சந்திக்கின்றோம், சிலரை முன்பின் அறிந்திராமலே அவர்கள் மீது வெறுப்பு ஏற்படும் அவ்வாறே சிலர் மீது ஒரு நட்பு ஏற்படும் மிக நீண்ட நாட்கள் பழகியதைப் போன்ற உணர்வு ஏற்படும் இப்படித்தான் நமது நட்புகளின் ஆரம்பம் ஏற்படுகிறது, எத்துனை சொன்னாலும், வாதித்தாலும் பள்ளிபருவ காலத்து நடப்புகள் நமது வாழ்க்கை முழுவதும் அசைபோட்டுக்கொண்டே இருக்கும் அற்புத சக்தி வாய்ந்ததாகும், இதைத்தான் கவிஞர் வைரமுத்து தான கவிதை ஒன்றில் சொல்லி இரிக்கின்றார்

"அள்ளிக் கொடுப்பவைகள்
ஆண்டுகளால் அழிவதில்லை
பள்ளிப் பருவ நிலை
பழைய கதை ஆவதில்லை"

சுயநலமில்லாத தூய்மையான நட்பானது மெய்யிலேயே போற்றத்தக்கது, வாழ்த்ததக்கது, நல்ல நட்புக்களால் அறிவு விருத்தி அடையும், சமூக சிந்தனை விரிவடையும், இலட்சியம் பிறக்கும், நமது தடைகளை உடைத்தெறியும் மன தைரியம் கூடும், சந்தோசம் நூறு மடங்காகும், துன்பம் இல்லாமல் போய்விடும், விட்டுக் கொடுத்தலின் விவேகம் புரியும், வாழ்க்கையில் நம்பிக்கையும் எதிபர்ப்புகளும் அதிகரிக்கும்.............................இப்படி எத்தனையோ.......நல்ல விடயங்களுக்கு நல்ல நட்பு காரணமாகின்றது..

தூய்மையான நட்பில் எதிபார்ப்பு இருக்காது, சுயநலம் இருக்காது, சந்தர்ப்பவாதம் இருக்காது, வஞ்சகம்
இருக்காது, முதுகு சொரியும் முட்டாள் தனம் இருக்காது, முகஸ்துதி இருக்காது..பெற்றோர்கள் சொல்வதை கேட்காதவர்கள் நண்பன் சொல்வதை கேட்கின்ற வலிமை நட்பில் மாத்திரம்..........தான் சாத்தியம்..
நண்பர்கள் நம்மைப் பற்றி.......நாமே மத்திப்பீடு செய்து கொள்வோம், நமது நட்பு உலகம் நிஜமானதா? போலியானதா? நாம் எப்படிப்பட்டவர்கள்? நமது நண்பர்களோடு எப்படி இருக்கிறோம்...............

கடைசியாக..இதை வாசிக்கின்ற எல்லா பதிவுலக நட்புள்ளங்களுக்கும் சுயநலமில்லா நண்பர்கள் கிடைக்க வாழ்த்துகிறேன்..


ஆனால் மலிவு விலையில் சுயனலத்திட்க்காக நம்மை நாடும் நட்புகளிடம் அவதானமாக இருப்போம்.

பிற்குறிப்பு- எனது ஒவ்வொரு பதிவுக்கும் தனது காத்திரமான விமர்சனத்தை வழங்கி வரும் புத்தளம்,எத்தாலையை சேர்ந்த நண்பர் இன்பாஸ் அவர்களுக்கு எனது நன்றிகள், நம்மை யாராவது அவதானிக்கிறார்கள் என்று தெரிந்ததால் தான் நாம் அவதானமா பயணிப்போம் அந்தவகையில் இன்பாசின் தொடர் அவதானிப்பும், விமர்சனமும் தான் என்னை ஏதாவது பதிய வேண்டும் என்ற எண்ணத்தை தூண்டியது........அவ்வாறே இராகலை கலை எங்கே போனார் இவர் இவர்தான் நான் வலைப் பத்திவில் நுழைய நூறு வீதம் காரணமானவர் இவருக்கும் எனது நன்றிகள்.

  © © All Rights Reserved by நாச்சியாதீவு பர்வீன் @ 2009 BT

Back to TOP  by