சட்டியிலேயே கிடந்து கொதிப்போமா? அல்லது அடுப்பில் விழுந்து எரிவோமா?
இன்றைய ஊடகங்களின் தலைப்புச் செய்தியே எதிவரும் ஜனாதிபதி தேர்தல் பற்றித்தான், இலங்கையின் பட்டி தொட்டி என்று எல்லா முனைகளிலும், எல்லா தரப்பினரும் குசுகுசுக்கும், வாதிக்கும் விடயம் எதிவரும் ஜனாதிபதி தேர்தல், இலங்கையையும் தாண்டி உலக அரசியல் அரங்கில் இலங்கையின் இந்த ஜனாதிபதி தேர்தல் பற்றிய அவதானிப்பு வெகுவாக அதிகரித்துள்ளது எனலாம், எப்படியோ ஜனாதிபதி தேர்தலுக்கான திகதியும் அறிவிக்கப்பட்டு, நோமிநேசன் கூட கட்டியாகிவிட்டது, சுமார் 22 பேர்கள் இம்முறை தேர்தல் களத்தில் குதித்துள்ளனர், இதில் பிரதானமாக இருவர் மட்டுமே களத்தில் வாக்கு வேட்டைக்காக குதித்துள்ளார்கள் என்பது
எல்லோரும் அறிந்த விடயமாகும், ஒருவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மற்றவர் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் பொன்சேகா!
இருவரும் ஒரே அணியில் கட்டிப் புரண்டவர்கள்தான் இருந்தும் ஆசை யாரைத்தான் விட்டு வைத்தது அந்த வகையில் நாட்டு மக்களுக்காக சரத் பொன்சேகா! தன்னை அரசியலில் ஈடு படுத்தியுள்ளாராம் (நல்லாவே காதில் பூ சுத்துகிறார்).
இந்த தேர்தலை மிகவும் ஆழமாக அவதானிக்கவும், ஆராயவும் வேண்டியுள்ளது, அதற்காக வலுவான பல காரணங்கள் உள்ளன,மட்டுமன்றி சிறுபான்மையினர் பற்றிய இரண்டு பிரதான வேட்பாளர்களினதும் அவதான குவிப்பு பற்றியும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
01 ) மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசியல் புலம்.
02 ) ஜெனரல் பொன்சேகா அவர்களின் அவர்களின் அரசியல் புலம்.
03 ) சர்வதேசத்தின் நிலைப்பாடு
04 ) சிறுபான்மை இனக் குழுமத்தின் நிலைப்பாடு.
மேற்சொன்ன தலைப்புகளில் இந்த ஜனாதிபதி தேர்தல் பற்றிய ஆய்வினை மேற்கொண்டால் இலகுவாக இருக்கம் எனக் கருதுகிறேன்.
01 ) மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசியல் புலம்
யுத்தம் தொடர்பான வெற்றியை மூலதனமாக வைத்தே மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன் எதுத்துச்செல்கின்றார், இது பெரும்பான்மை சிங்கள மக்களின் மனதில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பற்றிய ஒரு மாய விம்பத்தை
தோற்றுவித்துள்ளது, இலங்கையின் மொத்த சனத்தொகையில் சுமார் 74 வீதமானவர்கள் பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்களாவார்கள்.அதிலும் 65 வீதமானவர்கள் கிராமங்களை அண்டிய பிரதேசங்களில் வாழ்பவர்கள், இந்த 65 வீதமான கிராமங்களை அண்டிய பிரதேசங்களில் வாழ்பவர்கள் யுத்த வெற்றியை நாட்டுக்கு கிடைத்த சுத்தந்திரமாகவே கருதுகின்றனர், மட்டுமன்றி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அண்மைக்காலமாக பொதுக் கூட்டங்களில் தமிழில் உரையாற்றுவதும், சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என்று எல்லா தரப்பினரும் இந்த நாட்டின் சொந்தக்காரர்கள் என்றும் சொல்லி வருவது சிறுபான்மையினர் மத்தியில் ஓரளவு வெற்றி பெற்றுள்ளது, இருந்தும் தமிழ் முஸ்லிம் வியாபாரிகள் வெள்ளை வேனைக் கொண்டு கடத்தப் படுவதும், ஊடகவியலாளர்கள் தாக்கப்படுவதும், சடுதியான பொருளாதார வீழ்ச்சியும் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பின்னடைவுக்கான வலுவான காரணங்களாகும்.
மீள் குடியேற்றம் துரிதமாக நடை பெற்றுக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அந்த மக்களின் மெய்யான உணர்வுகளை இந்த தேர்தல் பிரதிபலிக்கும், இதையும் தாண்டி வடமேல் மாகாண பாரளமன்ற உறுப்பினரும் ஜோன்சன் பெர்னாண்டோ, மத்திய மாகாண எதிர்க்கட்சி தலைவர் எஸ்.பி.திசாநாயக, கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஆசாத்சாலி, இப்படி எதிர் கட்சியில் பிரபல்யமான
பல தலைகள் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ள நிலையிலும், மஹிந்த ராஜபக்ஷ அவர்களினதும், அவர் சார் அரச ஊடகங்களினதும் சரத் பொன்சேகா மீதான அதீதமான தூற்றுதல்கள், கேவலமான வார்த்தைப் பிரயோகங்கள், சரத் போன்செகாவுக்கான இலவச விளம்பரங்களாகும்,
மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சி குடும்ப ஆட்சிஎன்றும் அதனை இல்லாது ஒழிக்கவே தாம் அரசியல் பிரவேசம் எடுத்துள்ளதாகவும் கூறும் ஜெனரலின் பேச்சு உண்மையாக இருந்தும் எடுபடுவதாய் தெரியவில்லை, அத்தோடு அர்ஜுன ரணதுங்கவின் பல்டி இன்னுமொரு பேரிடியாக மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு விழுந்துள்ளது, பலவிடயங்களில் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலையை தடவி குட்டும் அரசியல் சாணக்கியத்தை கொண்டுள்ளதும் அரசியல் விமர்சகர்களால் விமர்சிக்கப் பட்டதும் பொதுமக்களால் குறிப்பாக சிறுபான்மையினாரால் அவதானிக்கப்பட்ட விடயமுமாகும், மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் என்னதான் இந்த நாடு எல்லா இனத்தினருக்கும் சொந்தம் என்று சொன்னாலும் இன்னும் "மே புதுன்கே தேசயே" இது பவுத்தர்களின் தேசம் என்கின்ற இனத்துவேச கோசம் எழுந்து கொண்டுதான் இருக்கின்றது.
அத்தோடு கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசன் சந்திரகாந்தன், அமைச்சர் முரளிதரன் ஆகியோர் தமிழ் மக்களின் வாக்குகளை
திரட்டி ஜனாதிபதிக்கு தமது பலத்தை காட்ட முழு முனைப்புடன் செயற்படுவர், அமைச்சர் அதாவுல்லாஹ், அமைச்சர் அமீரலி, பேரியல் அஸ்ரப், பாயிஸ் முஸ்தபா, ஹிஸ்புல்லாஹ் போன்றோர் முஸ்லிம்களின் வாக்குகளை திரட்ட முயற்சி செய்வார்கள். இதே நிலை வடக்கிலும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் தலைமையில் முஸ்லிம்களின் வாக்குகளும், டக்லஸ் தேவானந்தா தலைமையில் தமிழர்களின் வாக்குகளும் திரட்ட ஆளும் கூட்டணி முயற்சி செய்யும்,
எப்படியோ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கணிசமான அளவு வாக்குகள் எடுப்பார்,...............
மலையகத்தில் இருக்கவே இருக்கிறார் ஆறுமுகம் தொண்டமான் மக்களாவது மண்ணாங்கட்டியாவது தனக்கு அமைச்சுப் பதவி கிடைத்தால் அதுவே நான் செய்த புண்ணியம் இவரை நம்பியும் இலட்ச்சக் கணக்கான அப்பாவி வாக்காளர்கள் எனவே இந்த அப்பாவி மக்களின் வாக்கில் பெரும்பான்மையான வாக்குகள் ஜனாதிபதிக்கே.எப்படியோ மகிந்த ராஜபக்ஷ அவர்கள் பயந்து டென்சனாகி காணப்பட்டாலும் ஓட்டப் பந்தயத்தில் அவரோடு ஓட வந்திருப்பது நொண்டிக் குதிரைகளாகும் எனவே நாம் விரும்பியோ
விரும்பாமலோ மீண்டும் ஜனாதிபதியாகும் சந்தர்ப்பம் மகிந்த ராஜபக்ஷ அவர்களுக்கே அதிகம் உள்ளது அது நியாயமான தேர்தலாக இருந்தாலும் சரி.......அல்லது................
02 ) ஜெனரல் பொன்சேகா அவர்களின் அவர்களின் அரசியல் புலம்..
முன்னர் இருந்த எந்த இராணுவ தளபதிக்குமில்லாத அளவுக்கான புகழ் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு கிடைத்தது என்றால் அதற்கு காரணம் யுத்த வெற்றியாகும், வெறும் இராணுவத்தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவுக்கு திடீரென எப்படி அரசியல் ஆசை முளைத்தது அங்கேதான் நிற்கிறார் ரணில் விக்ரமசிங்க எனும் அரசியல் சாணக்கியன், ரணில் விக்ரமசிங்க எத்துனை முறை தோற்றாலும் அரசியல் ரீதியாக அவருக்கு இருக்கின்ற மதிநுட்பமும், ஆளுமையும் இன்னும் கிஞ்ச்சித்தும் குறையவில்லை எனலாம்,
இதற்கு நல்லபல உதாரணங்களை கூறமுடியும், 2001 களில் UNP ஆட்சி பீடமேரியது விடுதலை புலிகளுடன் பேச்சுவார்த்தை என்று
ஒரு புறம் யுத்த நிறுத்த உடன்படிக்கை அமுலில் இருந்த அதே காலப் பகுதியில் அலிசாகிர் மௌலானவை பாவித்து விடுதலை புலிகளின் கிழக்கு மாகாண பொறுப்பாளரும், வே.பிரபாகரனின் வலது கையுமான கருணா அம்மானை பிரித்து அசைக்க முடியாத ஒரு போராட்ட அமைப்பின் ஆணிவேரை பிடுங்கி பிளவு உண்டு பண்ணி அந்த அமைப்பே அடியோடு அழிவதற்கு பாதை சமைத்தவர். இதே நிலை தான் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும் நடந்தது.
உண்மையிலேயே ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அரசியலில் குதிக்கும் ஆர்வமும் ஆசையும் ஆரம்பத்தில் இருக்கவில்லை
இதனால் தான் கனடாவில் வைத்து இலங்கை பவுத்தர்களுக்கான நாடு இதில் சிறுபான்மையினர் அதிகபட்ச உரிமைகளை எதிர்பார்க்கக் கூடாது என்றதும், மதுவும், போதையும் மக்கள் பாவிக்க வேண்டும் அது மூளையின் சுறுப்பான இயக்கத்திற்கும், உடம்பின் உற்சாகததிக்கும உதவும் என்ற முட்டாள் தனமான கருத்துக்களை இவர் வெளியிட்டார், இது இப்போதுகளில் பிரபல்யமாகியுள்ளன, இது ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பலத்த பின்னடைவாக கருத முடியும் மட்டுமன்றி அத்தோடு அரசியல் ஆசை இவருக்கு ஏலவே இருந்த்திருந்தால் மேற்சொன்ன மடத்தனமான கருத்துக்களை முன் வைத்திருக்க மாட்டார், எனவே பொன்சேகாவை அரசிலிருந்து பிரித்து ஜனாதிபதிக்கு எதிரான ஜனாதிபதி வேட்பாளராக்கிய பெருமை சாட்சாத் ரணில் விக்கிரமசிங்கவுக்கே சேரும்,
இனி பல கட்சி கூட்டணி, JVP ஏலவே மக்கள் மத்தியில் அதிருப்தியுடைய கட்சியாக பெயர் பெற்று, துவேசக் கருத்துகளை மூலதனமாக்கி அரசியல் பொழைப்பு நடத்தவந்து கேவலப் பட்டு நிற்கும் கட்சி, நிச்சியமாய் இவர்களினால் ஜெனரலின் வாக்கு வங்கி குறையுமே தவிர கூடாது, ரணிலையும் UNP கட்சியினையும் பாரதூரமாக விமர்சித்துவிட்டு தமக்கு சலுகை கிடைக்கவில்லை என்றதும் முரண்பட்டு மூட்டையை கட்டிக் கொண்டு வெளியேறிவிட்டார்கள், அதிலும் தமது பாராளமன்ற உறுப்பினர்கள் பலரை அரசுக்கு தாரை வார்த்து கொடுத்துவிட்டுத்தான் சென்றுள்ளார்கள்.
UNP இன் திட்டம் தான் இது என்றாலும் ரணில் இந்தத் தேர்தலில் ஆரோக்கியமான காய் நகர்த்தலில் ஈடுபட்டுள்ளர், தான் வெற்றி பெறப் போவதில்லை என்ற எதார்த்தம் ரணிலுக்கு புரிந்திருக்கிறது, எனவேதான் மாற்றுவழி தேடினார், ஜெனரல் மாட்டினார். UNP இக்கான
வாக்கு வங்கியில் எந்த மாற்றத்தையும் காண முடியாது அது ரணில் விரல் நீட்டும் திசையில் விழும், அந்த வகையில் ஜெனரல் UNP இனருடைய வாக்குகளை தனதாக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது,
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கரஸ் முஸ்லிம்களின் ஏக பிரதிநிதிகளாக தம்மை நினைத்துக் கொண்டு மேடைகளில் முழங்குகின்றனர், கண்ட இடங்களிலும் கும்பிடு போட்டு, சமூகம்,சமூகம் என்று கூறிக்கொண்டு UNP இன் பணக் கட்டுகளுக்கு அடிமையாகி இருக்கும் ரவுப் ஹகீம் போன்றவர்களால் வெற்றுக் கோசம் போட மட்டுமே முடியும், மாறாக
முஸ்லிகளின் 80 வீதமான வாக்குகளை கனவிலும் பெற்றுக்கொள்ள முடியாதாகும், இந்த அரசின் மீதான கோபத்தை முஸ்லிம்கள் ஒருவேளை சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக பயன்படுத்தலாமே ஒழிய அது ரவுப் ஹகீமுக்காக அல்லது ஸ்ரீ லங்கா முஸ்லிம் கண்க்ராசுக்காக என்பது முட்டாள்தனமே, உண்மையில் இனவாதத்தை தூண்டுபவர்களில் ரவுப் ஹக்கீமும் ஒருவர் என்றே கருத
முடியும்.
அடுத்து மேலக மக்கள் முன்னணியின் மனோ கணேஷன், தமிழ் என்றும் தமிழர் என்றும் குரல் கொடுக்கும் இவர் டமிலில் பேசுவது எந்த்தத் தமிழினத்தை காப்பாற்ற என்று புரியவில்லை, அடிக்கடி கொள்கை மாறும் இவரை நம்பியும் மக்கள் வாக்களிக்கின்றார்கள் எனும் போது நமது மக்களின் அரசியல் விழிப்புணர்வு மீது சந்தேகம் எழுகின்றது,
ஆக இந்த அரை வேக்காடுகள் எல்லாம் சேர்ந்து சரத் பொன்சேகாவை ஆற்றில் இறக்கியுள்ளர்கள், சரத் பொன்சேகாவும் இவர்களை நம்பி ........(மண்குதிரைகள் என்று தெரியாமல்) இறங்கியுள்ளார்.
இதற்கிடையில் கோசம் வேறு! நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு ஆப்பு வைப்போம், மன்னராட்சியை கவிழ்ப்போம், குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம், இவைகளெல்லாம் மக்களை உசுப்பேத்த போடும் மாய வார்த்தைகள், இதையேதான் JR தொடக்கம் இந்த மஹிந்த மட்டுக்கும் சொன்னார்கள் என்னத்தை கிழித்தார்கள், ஏதோ சரத் பொன்சேகா கொஞ்சம் வாக்கு எடுப்பார் ஆனால் நிச்சியமாய் வெற்றி பெறமாட்டார்.
இருந்தும் முன்னாள் ஜனாபதி சந்திரிகா, மங்கள சமரவீர ஆகியோரின் ஒத்துழைப்பு ஒருவேளை தேர்தல் முடிவுகளில் மாற்றங்களை கொண்டுவரலாம்........
( தொடரும்....)
2 கருத்துகள்:
நல்ல கருத்துக்கள்...
நாச்சியாதீவு பர்வின் என்ற பெயருக்குள் இருப்பது ஒரு ஆண் என்பது இன்றுதான் தெரியும். தொடரட்டும் உங்கள் பணி.
நன்றி ரிசா ஜவுபர், நீங்கள் ஒரு Business Mangement என்ற வகையில் உங்களை சந்திப்பதில் சந்தோசம், பதிவுலகில் கலந்து கலக்குங்கள், எனது நிஜப் பெயரே பர்வீன் தான்,
கருத்துரையிடுக