அந்த நாள் எப்ப வரும்.
படத்திலிருப்பது என் மகள் பாத்திமா மரியம்.
(நான் கத்தாரில் வேலை செய்த காலப்பகுதியில் என்னோடு வேலை செய்த இலங்கை, ஏறாவூரை சேர்ந்த நண்பன் ராபி இன் வேண்டுகோளுக்கு இணங்க எழுதிய கவிதை இது நண்பர் ராபி இன்னும் கத்தாரில் தான் இருக்கிறார் நான் இப்போது இலங்கையில்)
பொத்திவச்ச செம்பகப் பூ
பொசுக்கென்று பூத்ததுபோல்
என்ன சுத்தவச்ச பேரழகே
அங்கே-நீ சுகமா சுகமா.
ஒத்தையில என்மனசு
ஒன்ன மட்டும் நெனக்குதிங்கே
மெத்தையில படுத்தாலும்
என் நெனப்பெல்லாம் நீ தாண்டி.
காலையில எழுந்தாலும்
சாலையில நடந்தாலும்
கோலமயில் உன் உருவம்
என்னைக் கொள்ளாம கொல்லுதடி.
மாலையில வானத்தில
மஞ்சள் நிலா பார்க்கையில!
சோலைக்கிளி நீ தாண்டி-அங்கே
குத்தவச்சி குந்திருக்க.
நள்ளிரவு நேரத்தில நான்
நலமற்று தூங்குகையில்
கள்ளி உந்தன் கரங்கள் தான்
எந்தன் கனவினிலே தலை தடவும்.
துள்ளி வரும் காற்றிடத்தில்
நான் தூது ஒன்று சொல்லிவிட்டேன்.
கள்ளி உந்தன் காதுகளுக்கு
செய்தி முழுசாக வந்திச்சா...
நம் செல்ல மகள் நினைவுகள்
என்னை செல்லாக அரிக்கிறது
சொல்லி அழ ஆருமில்லை-இங்கே
சோகத்திற்கு பஞ்சமில்லை.
சொல்லி என்ன பயனிருக்கு
சோகத்தில் நான் கிடக்கேன்.
அள்ளி ஒன்ன முத்தமிடும்
அந்த நாள் எப்ப வரும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக