வஹாப் மவுலவிக்கு அனுராதபுரத்தில் பாராட்டுவிழா!
அனுராதபுர சாஹிரா தேசிய பாடசாலையில் சுமார் பதினெட்டு வருடகாலம் ஆசிரியராக சேவை செய்தும், அனுராதபுர பெரிய பள்ளிவாயலில் சுமார் இருபது வருடகால பேஷ் இமாமாக கடமை புரிந்தும் அனுராதபுர சமூகத்திற்க்கு பெரும் கல்விச் சேவையாற்றிய அல்ஹாஜ் வஹாப் பலாஹி அவர்கள் தனது சொந்த கிராமமான காத்தான் குடிக்கு மாற்றம் பெற்று செல்வதனால் அவரது சேவையை பாராட்டி அனுராதபுர கல்விச்சமூகம், வியாபாரிகள், பிரதேச வாசிகள், பழைய மாணவர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து இன்று 30 / 12 /2011 வெள்ளிக்கிழமை அனுராதபுர நகரத்தில் பாராட்டு விழாக்களை நடத்த திட்ட மிட்டுள்ளனர்.
பாடசாலை மட்டத்திலான பாராட்டு விழாவானது இன்று அனுராதபுர சாஹிரா தேசிய பாடசாலையில் பாடசாலை அபிவிருத்தி சங்கம், பெற்றார் ஆசிரியர் சங்கம், பழைய மாணவர் சங்கம் ஆகியோர் இணைந்து காலை 9 மணிக்கு நடாத்த திட்டமிட்டுள்ளனர்,
அவ்வாறே பிரதேச வாசிகளினால் நடாத்தப்படுகின்ற பாராட்டு வைபவம் இன்று ஜும்மா தொழுகையின் பின்னர் அனுராதபுர பெரிய பள்ளிவாயலில் பள்ளி பரிபாலன சபைத்தலைவர் அல் ஹாஜ் பவுசி அவர்களினால் நடாத்தப் படும், இதில் அனுராதபுர பிரதேசவாசிகள், நலன்விரும்பிகள் என்று பலர் பங்கு கொள்ளவுள்ளனர்,
தொடர்ந்து வியாபார சமூகம், கல்வியலாளர்கள் நடாத்துகின்ற பாராட்டு விழாவும், நினைவுப் பரிசு வழங்ககும் வைபவமானது பின்னேரம் 4 மணிக்கு CTC கேட்போர் கூடத்தில் கலாபூசணம்
அன்பு ஜவஹர்சா தலைமையில் நடைபெறவுள்ளது, இந்த நிகழ்வில் அனுராதபுரத்தின் கல்வியாளரும், முன்னாள் காதி நீதவானும், இலக்கியவாதியுமான அல்ஹாஜ் ஹுசைன் அவர்கள் நினைவுக்கேடயம் வழங்கவுள்ளார்.
அல்ஹாஜ் வஹாப் மவுலவி அவர்கள் பற்றிய அவதானக் குறிப்பானது மிகவும் சிலாகிக்கத்தக்கது எல்லாத் துறைசார்ந்தவர்களுடனும் சமார்ந்திரமான இடைத்தொடர்பை இன்று மட்டுக்கும் அவர் பேணுவதே அவர்மீதான அபரிதமான அபிமானத்திற்கும், அன்புக்கும் காரணம் எனலாம், குறிப்பாக அவரது தன்னலமற்ற சேவை அனுராதபுர கல்வி வளர்சிக்கு ஊன்று கோலாக அமைந்தது எனலாம்,
வானொலி தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் இவரது பங்களிப்புக்களை ஒலிபரப்பாளர் அஹ்மத் எம்.நசீருடனும், சிரேஷ்ட ஊடகவியலாளர் ரிஸ்வி மகரூப் ஆகிருடன் இணைந்து செய்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. அவ்வாறே இலக்கிய ரீதியாக அனுராதபுர கலை இலக்கிய வட்டத்தின் செயற்பாடுகளிலும், நண்பர்கள் இலக்கிய வட்டத்தின் செயற்பாடுகளிலும் அவரது பங்களிப்பு வெகுவாக காணப்பட்டது. இன்று அனுராதபுரத்தில் இயங்கும் ஹிப்லு மதரசாவின் தோற்றத்தில்
இவரின் பங்களிப்பும் கணிசமான அளவு அடங்கி உள்ளது.
இது தவிரவும் அனுராத புரத்தில் இயங்கிவரும் ப்ரிசும் (prism ) சமூக விஞ்ஞான அபிவிருத்தி அமைப்பின் சமூக சேவைகளில் முன் நின்று ஆலோசனைகள் வழங்கி அவைகள் வெற்றி பெற துணையாக இருந்து செயற்பட்ட ஒருவர் இவர்,
பக்கச்சார்பற்ற கருத்தியல் தளத்தில் இயங்கும் அல்ஹாஜ் வஹாப் மவுலவியின் கல்விப்பணியை அனுராதபுர சமூகம் அன்கீகரித்ததுபோல எல்லாம் வல்ல அல்லாஹ்வும் அங்கீகரித்து அவரது கல்வி, சமூக பணி தொடர அருள் புரிவானாக.
நடைபெற விருக்கும் மூன்று விழாக்களும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக